Ad

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

சென்னை டு ஆந்திரா புல்லட் பயணம்! - ஐடி நிறுவன ஊழியர் கஞ்சா வியாபாரியாக மாறியது எப்படி?

கடந்த சில நாள்களுக்கு முன்னர், சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது புல்லட்டில் பந்தாவாக வந்த ஓர் இளைஞரை வழிமறித்த போலீஸார், டாக்குமென்ட்களைக் கேட்டிருக்கின்றர். அப்போது அந்த இளைஞர், வாகனத்தின் டாக்குமென்ட்களைக் காண்பித்தபோது பைக்கின் மேலிருந்த பேக்மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. உடனே அந்த இளைஞரிடம், `பேக்கில் என்ன இருக்கிறது?’ என்று போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு அவர், `சார், இது மெடிசின்...’ என்று கூறி சமாளித்திருக்கிறார்.

கஞ்சா

உடனடியாக பேக்கைத் திறந்து பார்த்த போலீஸார், உள்ளே கஞ்சா பார்சல் இருந்ததைக் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த இளைஞரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் பெயர் சரண்ராம் (25), சிட்லபாக்கத்தைத் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. சரண்ராமிடம் தொடர்ந்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து நம்மிடம் பேசிய சிட்லபாக்கம் போலீஸார், ``கஞ்சா பார்சலுடன் சிக்கிய சரண்ராம், ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்துவந்திருக்கிறார். கொரோனா ஊரடங்கால் வேலையை இழந்த சரண்ராம், வீட்டிலேயே இருந்திருக்கிறார். அப்போது வண்டலூரைச் சேர்ந்த ஆலன் (25), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கட நாக மனோஜ் (27) ஆகியோருடன் முகநூல் மூலம் சரண் ராமுக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது. ஆலன், மெடிக்கல்களுக்கு மருந்து, மாத்திரைகளை டெலிவரி செய்யும் வேலை செய்துவருகிறார்.

ஆலன்

வெங்கட நாக மனோஜ், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்துவந்திருக்கிறார். கொரோனாவால் இவர்களுக்கும் போதிய வருமானம் இல்லை. அதனால் மூன்று பேரும் சேர்ந்து என்ன பிசினஸ் செய்வது என ஆலோசித்திருக்கின்றனர். அப்போதுதான் கஞ்சா பிசினஸ் செய்யலாம் என மூன்று பேரும் முடிவு செய்திருக்கிறார்கள். உடனடியாக கஞ்சாவை எங்கு வாங்கலாம் என இணையதளத்தில் தேடியிருக்கிறார்கள். அப்போது ஆந்திரா மாநிலத்தில் கஞ்சா கிடைக்கும் எனத் தகவல் சேகரித்த மூவரும் அதை வாங்கி, விற்க முடிவு செய்திருக்கிறார்கள்.

இதற்காக சரண்ராம், புல்லட்டிலேயே சென்னையிலிருந்து ஆந்திராவுக்குச் சென்று கஞ்சாவை வாங்கி வந்திருக்கிறார். பின்னர் அதை வெங்கட நாக மனோஜ், சின்னச் சின்ன பார்சல்களாக பிரித்திருக்கிறார். அதன் பிறகு ஆலன் மூலம் அதை விற்றிருக்கிறார்கள். ஆலன், மருந்துகளோடு கஞ்சா பொட்டலங்களையும் பைக்கிலேயே கொண்டு சென்று டோர் டெலிவரி செய்துவந்திருக்கிறார். அதனால் மூன்று பேரையும் கைது செய்திருக்கிறோம். அவர்களிடமிருந்து மூன்று கிலோ கஞ்சா மற்றும் டூவீலர்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம்’’ என்றனர்.

வெங்கட நாக மனோஜ்

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சிட்லபாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனால்தான் வாகன சோதனையை தீவிரப்படுத்தினோம். சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐடி நிறுவன ஊழியர் சரண் ராம் சிக்கினார். இவருடன் சேர்ந்து முகநூல் நண்பர்கள் ஆலன், வெங்கட நாக மனோஜ் ஆகியோரும் கஞ்சாவை விற்று வந்திருக்கிறார்கள். ஆலனுக்கும் வெங்கடநாக மனோஜுக்கும் நண்பர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் நட்பு வட்டாரத்தில் கஞ்சாவை விற்ற மூன்று பேரும் பிறகு அதைச் செயின் லிங்க்போல மற்றவர்களுக்கும் விற்கத் தொடங்கியிருக்கின்றனர். ஒரு கிலோ கஞ்சாவை விற்றால் 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை லாபம் கிடைத்திருக்கிறது. அதன் மூலம் குறுகியகாலத்தில் ஆயிரக்கணக்கில் இந்த மூன்று பேரும் சம்பாதித்திருக்கின்றனர். அதனால் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி, சென்னையில் விற்று பணம் சம்பாதித்திருக்கிறார்கள். கிடைத்த பணத்தை மூன்று பேரும் பங்குபோட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்

Also Read: `கஞ்சா கும்பலின் தாதா ஐசக்... மாணவர்கள் டார்கெட்!’ - ஆந்திரா டு சென்னை; கடத்தல் பின்னணி

கொரோனாவால் வேலையை இழந்த ஐடி நிறுவன ஊழியர் சரண் ராம், கஞ்சா வியாபாரியாகவே மாறியிருக்கிறார். வாகன சோதனையில் புல்லட், சரண்ராமின் கெட்-அப், லைஃப் ஸ்டைலைப் பார்க்கும்போது அவர்மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வரவில்லை. அதைப் பயன்படுத்திக்கொண்டு கொரோனா ஊரடங்கில் கஞ்சா விற்பனையில் இந்த மூன்று பேரும் முழுவீச்சில் ஈடுபட்டிருக்கிறார்கள். கஸ்டமர்களுக்கு ஆலன் மூலம் கஞ்சா சப்ளை செய்யப்பட்டதால் அவரும் காவல்துறையினரிடம் சிக்கவில்லை" என்றார்.

காவல்துறையில் மூன்று பேரும் சிக்கியதும் ``சார், எங்களை விட்டுவிடுங்கள். வெளியில் தெரிந்தால் அவமானம்’’ எனக் கெஞ்சியிருக்கிறார்கள். ஆனால், காவல்துறையினர் சட்டப்படி மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுத்து, சிறையில் அடைத்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/crime/how-did-an-it-company-employee-become-a-cannabis-dealer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக