`கொரோனாவை வெல்வோம் மன உழைச்சல் நீங்கி வாழ்வோம்' என்ற தலைப்பில், கொரோனா காலத்தில் மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்களை விளக்கி குமரி முதல் மெரினா வரை தொடர் பிரசார பயணத்தை தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் நேற்று தொடங்கினார். இதை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மத்திய அரசின் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் இடைத் தேர்தல் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. இடைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் களம் இறங்கப் போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கன்னியாகுமரியில் மத்திய அரசின் கொரோனா கால திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கும் பயணம் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தின் தொடக்க நிகழ்வு போன்று அமைந்துள்ளது.
ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கொரோனா காலக்கட்டத்தில் மக்களுடைய தன்னம்பிக்கையை அதிகாரிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதன்மூலம் மக்கள் பயனடைந்து கொண்டிருக்கக்கூடிய சூழலில் பிரதமரையும் மத்திய அரசையும் தவறாக விமர்சித்து, அரசியல் லாபத்துக்காக மக்களிடம் மொழிவெறியையும் இன வெறியையும் தூண்டி பிரிக்கக்கூடிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க போன்ற தீய சக்திகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மக்கள் நலத் திட்டங்கள் மக்களுக்கு பயனடைய வேண்டும் என்றால் விழிப்புணர்வு மூலம்தான் கொண்டுசெல்ல முடியும். அதன் அடிப்படையில் குமரி முதல் மெரினா வரை என்ற தலைப்பின் கீழ் இந்த பிரசாரத்தை தொடங்கியுள்ளோம். இந்த ஆட்சியில் இஸ்லாமிய மக்கள், சிறுபான்மை மக்கள் பல்வேறு முன்னேற்றங்களை கண்டுகொண்டிருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் கணிசமான இஸ்லாமியர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். பிரதமரின் உத்வேகத்தின் காரணமாக அவர்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்பதற்கான ஒரு சான்று இது.
இந்த தேசம் 135 கோடி மக்களுக்கானது. அதை வழி நடத்தக்கூடிய பிரதமருடைய முன்னெடுப்புக்களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டிய கடமையும் உணர்வும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. இந்த யாத்திரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சென்று வரும் 30-ம் தேதி மெரினா காந்தி சிலை அருகே நிறைவுபெறுகிறது. மெரினாவில் மாநில தலைவர் முருகன் இந்த யாத்திரையை நிறைவு செய்து வைக்கிறார். பிரதமரின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்ல தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். இஸ்லாமிய சமூகம் விரைவில் பா.ஜ.க தலைமையை ஏற்றுக்கொண்டு செயல்படும் காலம் மிக விரைவில் வரும்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/is-ponrathakrishnan-started-the-campaign-in-kk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக