உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கான எதிராகக் கடந்தாண்டு டிசம்பரில் போராட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட டாக்டர் கஃபீல்கான், தேச ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் எதிராகப் பேசியதாக அம்மாநில காவல்துறையினரால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மாவட்டக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கஃபீல்கானை மதுரா சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் கஃபீல் கானின் தாயார் நவ்ஷாத் பர்வீன், தன் மகன் கஃபீல் கான் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும், அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரி கடந்த மார்ச் மாதம் ஆட்கொணர்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி கவாய் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தது.
Also Read: `மனரீதியான சித்ரவதை; சிறையிலே கொல்லப்படலாம்!’ - பகீர் கிளப்பும் மருத்துவர் கஃபில் கான் மனைவி
பின்னர், இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோவிந்த் மதூர் மற்றும் நீதிபதி சௌமித்ரா தாயால் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள், கஃபீல் கான் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், கஃபீல் கான் அலிகார் பல்கலைகழகத்தில் பேசியவை தேச பாதுகாப்புக்கு எதிரானதாகவோ அல்லது ஒரு சமூகத்துக்கு எதிராக வெறுப்பைத் தூண்டக்கூடிய வகையிலோ இல்லை என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். அதேபோல், அவரைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டது சட்ட விரோதமானது என்றுகூறி உடனடியாக அவரை விடுதலை செய்யவும் உ.பி காவல்துறைக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
source https://www.vikatan.com/news/india/allahabad-hc-orders-immediate-release-for-dr-kafeel-khan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக