கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க செயற்குழுக் கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழுக் கூட்டத்தில் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், கடையாலுமூட்டில் போலி டாக்டரின் சிகிச்சையால் பலியான மாணவனின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட டாக்டரை கைது செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வரும் சட்டசபைத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் எங்கள் பலத்தை காண்பிப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் கட்சி அமைப்புகளை கட்டமைத்து வருகிறோம். தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திப்பதற்கு பா.ஜ.க தயாராக உள்ளது. அன்றும் இன்றும் மொழிப் பிரச்சினையை தூண்டி விட்டு தி.மு.க அரசியல் செய்ய முயல்கிறது. புதிய கல்விக்கொள்கையை பொறுத்தவரையில் இந்தித் திணிப்பை தமிழக பா.ஜ.க ஒரு போதும் அனுமதிக்காது. அதே நேரத்தில் நம்முடைய பிள்ளைகள் வேறு மொழியை கற்பதை தடுக்க முடியாது. டெல்லியில் நடந்த ஆயுஷ் கூட்டத்தில் தமிழ் தெரியாத அதிகாரிகள் வெளியே போங்கள் என்று சொன்ன மத்திய அதிகாரியின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. அது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் ஜி.டி.பி சதவீதம் மிகக் கடுமையாக குறைந்தது குறித்து கடவுள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. டாக்டர்கள் மருத்துவம் வழங்கும் பொழுது நோயாளியிடம் கடவுளிடம் வேண்டுங்கள் என்று கூறுவது போன்றதுதான் அவர் கூறிய கருத்து. அந்த கருத்தின் உள்ளுணர்வை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஜி.டி.பி குறைவை பொறுத்தவரையில் இந்தியாவில் மட்டும் இந்த நிலைமை ஏற்படவில்லை. அனைத்து நாடுகளிலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அவற்றில் இருந்து எப்படி மீள வேண்டும் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
Also Read: குமரி: துண்டுப்பிரசுரம் விநியோகித்த பொன்.ராதாகிருஷ்ணன்! - இடைத்தேர்தலுக்கு ஆயத்தமா?
கிசான் திட்டத்தில் பா.ஜ.க மோசடி செய்தது என்பது எந்த வகையில் என ஸ்டாலின் கூற வேண்டும். விவசாயிகள் பயன்பெற எளிமையான முறையில் பிரதமர் மோடி கொண்டு வந்த இந்த திட்டத்தை தவறாக பயன்படுத்தி மோசடி செய்ய யார் காரணம்? அதற்கு யார் பொறுப்பு? எளிமை படுத்தி கொடுத்தவர் தப்பா அல்லது பதிவு செய்து முறைப்படி வழங்க வேண்டியவர்கள் தவறா.
தி.மு.க வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பதுபோல் என்ன வேண்டுமென்றாலும் கூறுவார்கள்.
எந்த கட்சி எந்த கூட்டணியில் இருந்தாலும் தங்கள் கட்சியை பலப்படுத்தும் பணியைதான் சாதாரண காலத்தில் செய்வார்கள். பலப்படுத்துவது. எல்லா சூழ்நிலையிலும் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதை மனதில் வைத்துதான் அடிப்படையாக வேலை செய்வாங்க. பா.ஜ.க-வை பொறுத்தவரையில் நாங்கள் அ.தி.மு.க கூட்டணியில் இருந்தாலும்கூட, எந்த நிலையில் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ளக்கூடிய அளவிற்கு எங்களை நாங்கள் பலப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். 2021 சட்டமன்றம் அமையும்போது, அது பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் அரசாகத்தான் அமையும். கன்னியாகுமரி நாடாளுமன்ற இடை தேர்தலில் மத்தியில் ஆட்சி செய்யும் வேட்பாளரை குமரி மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/ponrathakrishnan-talks-about-upcoming-tn-election
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக