செனனை ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகிநகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). இவரின் மனைவி அனிதா. இவர், கண்ணகி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``எனது கணவரை சந்தேகத்தின்பேரில் 31-ம் தேதி காலை 10.30 மணியளவில் போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். வீட்டிலிருந்தே அவரை சரமாரியாக அடித்து மிகவும் கொடூரமாக இழுத்துச் சென்றனர். பின்னர், விசாரணை என்ற பெயரில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மாலை 5 மணியளவில்தான் விடுவித்தனர். அதன்பிறகும் அவரை அழைத்துச் சென்று அடித்துள்ளனர். அதனால், வலிதாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணமாக காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜேந்திரன் தற்கொலை குறித்து புரட்சி பாரதம் கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதித் தலைவர் குமார் கூறுகையில் ``ராஜேந்திரன் ஆட்டோ ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அவரின் தம்பி ரவி, புரட்சி பாரதம் கட்சியில் பகுதிச் செயலாளராக உள்ளார். ராஜேந்திரனின் உறவினர் ஒருவர் மீது வழக்கு உள்ளது. அவருக்குப் பதிலாக ராஜேந்திரனை போலீஸார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று பிவிசி பைப்பால் அடித்துள்ளனர். அப்போது ராஜேந்திரன், எதற்காக என்னை அடிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். போலீஸார் தாக்கியதால் மனமுடைந்து ராஜேந்திரன் தற்கொலை செய்துள்ளார். அவரின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து கண்ணகிநகர் இன்ஸ்பெக்டர் வீரக்குமாரிடம் கேட்டதற்கு, ``2007-ம் ஆண்டு நடந்த மூன்று பேர் கொலைக்குப் பழிக்குப்பழி வாங்க ராஜேந்திரனின் அக்காள் மகன் முல்லா என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒருவரை வெட்டியுள்ளார். அந்த வழக்கில் முல்லாவின் கூட்டாளிகளைக் கைது செய்துவிட்டோம். முல்லா, தலைமறைவாக இருந்தார். அவர் வீட்டிலிருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீஸார் நேற்று காலை அங்குச் சென்றனர். அப்போது, ராஜேந்திரன், போலீஸ் போலீஸ் என கத்தியதால் முல்லா தப்பி ஓடிவிட்டார். உடனே ராஜேந்திரனை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அதன்பிறகு ராஜேந்திரனின் மகளிடம் அவரை ஒப்படைத்தோம். இந்தச் சம்பத்துக்குப்பிறகு நான், மீட்டிங்குக்காக அடையாறு சென்றுவிட்டேன். மாலை 6 மணியளவில் ராஜேந்திரன், காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது அவர் போதையில் இருந்துள்ளார். இன்ஸ்பெக்டரைப் பார்க்க வேண்டும் என்று கூறி காவல் நிலையத்தில் ரகளை செய்துள்ளார். உடனே அங்கிருந்த போலீஸார் ராஜேந்திரனைக் கையெடுத்து கும்பிட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதற்கான சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளன.
வீட்டுக்குச் சென்ற ராஜேந்திரன், தற்கொலை செய்துள்ளார். உடனே அவரின் உறவினர்கள் போலீஸார் தாக்கியதால்தான் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டுகின்றனர். ராஜேந்திரன் உடலில் எந்தவிதக்காயங்களும் இல்லை. ராஜேந்திரனின் மனைவி அனிதா கொடுத்த புகாரின்பேரில் அவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். பிரேத பரிசோதனை முடிவில் மரணத்துக்கான காரணம் தெரிந்துவிடும்" என்றார்.
Also Read: சென்னை :`என் மகனிடமிருந்து தூர்நாற்றம் வருகிறது' - 3 நாள்கள் சடலத்துடன் இருந்த ஹோமியோபதி டாக்டர்!
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கண்ணகிநகரில் குடியிருக்கும் ராஜேந்திரனின் அக்கா மஞ்சுளா. இவர் மீது கஞ்சா வழக்கு உள்ளது. ராஜேந்திரன் தம்பிகள் இருவர் மீதும் வழக்குகள் உள்ளன. மஞ்சுளாவின் மகன்கள் நந்தா, முல்லா ஆகியோர் மீது கொலை வழக்கு உள்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதான மஞ்சுளா சமீபத்தில்தான் சிறையிலிருந்து வெளியில் வந்தார். தற்கொலை செய்து கொண்ட ராஜேந்திரனுக்கு 2 குடும்பங்கள் உள்ளன. ஒரு குடும்பம் மயிலாப்பூரிலும் இன்னொரு குடும்பம் கண்ணகி நகரிலும் உள்ளது. ராஜேந்திரன் போதையில் தகராறு செய்தற்கான சிசிடிவி வீடியோ உள்ளது. இருப்பினும் அவரின் மரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது" என்றார்.
source https://www.vikatan.com/news/crime/chennai-auto-driver-commits-suicide-after-police-inquiry
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக