Ad

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

``சென்னை - மதுரை என இரண்டு தலைநகரங்கள் சரியா?!''- மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி

தமிழ்நாட்டில் இரண்டு தலைநகரங்கள் வேண்டும் என எம்.ஜி.ஆர் காலத்து கோரிக்கையை கையிலெடுத்திருக்கிறார்கள் சில அமைச்சர்கள். மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அதேசமயம், திருச்சி, கோவை என தலைநகர் கோரிக்கைக்கு பல நகரங்களைச் சார்ந்த அமைச்சர் பிரதிநிதிகள் கோரிக்கைகளை முன்வைத்து உள்ளனர்.

இதற்கு பின்னால், ஓட்டு அரசியல், சாதிய அரசியல் எனப் பல காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. அவற்றையெல்லாம் தவிர்த்து இந்தக் கோரிக்கையின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து இந்தக் கோரிக்கையை புரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அலாவுதீன் Rtd.IAS

மதுரை, சென்னை ஆகிய இரு மாநகராட்சிகளுக்கும் ஆணையராக இருந்து, பின்னர் மாநில துணை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற IAS அதிகாரி அலாவுதீன் அவர்களைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

தமிழ் நாட்டுக்கு இன்னொரு தலைநகரம் வர வேண்டுமென்ற கோரிக்கையை பற்றிய உங்கள் கருத்து என்ன?

சென்னையைத் தாண்டி இன்னொரு தலைநகரம் வேண்டும் என்பவர்கள் சொல்லும் முக்கியமான காரணம், தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் மக்கள் தங்கள் தேவைகளுக்கு தலைநகரத்திற்கு வருவதில் சிரமம் இருக்கிறது என்பதே.

ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் என அறிவித்திருக்கிறார்கள். இங்கேயும் கோவையை இன்னொரு தலைநகரம் ஆக்கும் கோரிக்கை வரலாம். எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோதே திருச்சியைத் தலைநகரமாக்கலாம் என யோசித்தார்கள். இதற்கு முடிவே இல்லாமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது. இது தேவையற்றது.

தூரத்தை மட்டும் மனதில் வைத்து இன்னொரு தலைநகரத்தைக் கேட்பது சரியான காரணமாக நான் கருதவில்லை. இன்னொரு தலைநகரம் என்பது அவ்வளவு மலிவான விஷயமல்ல.

தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. உலகம் சுருங்குகிறது. அதுவும் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே தேவையான வேலைகளைச் செய்ய நாம் பழகிவிட்டோம். அனைத்தையும் இணைய வழியில் செய்ய முடிகிறபோது, பயணத்தொலைவு என்பதை நாம் கருத்தில் எடுத்துக் கொள்ளவேண்டாம்.

தொழில்நுட்பம்

அப்படியெனில், இனி இணையம் மட்டுமே மக்களின் தேவைகளுக்கு தீர்வாகிட முடியுமா?

இணையம் மட்டுமே தீர்வாகிடமுடியாது. அரசு மக்களிடம் நெருங்கிச் செல்ல வேண்டுமென நினைக்கிறது. அது தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதை மாவட்ட நிர்வாக அளவிலே செய்துவிட முடியும். சமீபத்தில், நிறைய புதிய மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான மக்கள் சேவைகளை இப்போது மாவட்ட அளவிலே தீர்க்க முடிகின்றன. சில விஷயங்களுக்குத்தான் சென்னைக்கு வர வேண்டியிருக்கும். இந்த நிலையில் இன்னொரு தலைநகரம் என்பது தேவையற்ற ஒன்று என்பதே என் கருத்து.

ஒருவேளை புதிய தலைநகரம் உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டால் அதற்கு முதலில் என்ன தேவை?

முதலில், ஒரு மாநில நிர்வாகத்திற்குத் தேவையான பல்வேறு கட்டுமான வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக நிலம் கையகப்படுத்துவது முதல் கட்டம். ஆனால், அது அவ்வளவு எளிதானதல்ல. பொதுமக்கள் இதனால் இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். நிலம் கையகப்படுத்துவதற்கான புதிய சட்டம் நிறைய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

இந்தியாவில் ஜம்மு & காஷ்மீரில் கூட மழைக்கால மற்றும் வெயில்கால தலைநகரங்கள் இருந்தன. அது அவர்களின் புவியியல் தேவை. ஆனால், அங்கே நிறைய நடைமுறைப் பிரச்னைகள் உண்டு. கேபினட் மீட்டிங் தொடங்கி, தேவையான ஆவணங்கள் காப்பது வரை எல்லாம் சிக்கலாகும்.

சென்னை -மதுரை

Also Read: தமிழகத்துக்குத் தேவையா இரண்டாம் தலைநகரம்?

புதிய தலைநகரம் உருவாக்கப்பட வேண்டும் என்றால், அதற்கு எவ்வளவு காலம் ஆகும்?

மிக அதிக காலம் ஆகும் என்பது உறுதி. சரியாகச் சொல்லவே முடியாது. ஆந்திராவை எடுத்துக் கொள்ளலாம். அங்கே புதிய தலைநகரம் இன்னமும் உருவாகவில்லை. ஆந்திரா, தெலங்கானா என இரண்டாக அம்மாநிலம் பிளவுறும் போதே, புதிய தலைநகரை உருவாக்கி முழுதாக செயல்பட 10 ஆண்டுகள் ஆகும் என கணக்கிடப்பட்டது. அதனால்தான், ஹைதராபாத் பொது தலைநகரமாக பத்து ஆண்டுகள் இருக்கும் என முடிவு செய்யப்பட்டது.

சென்னையில் மக்கள் தொகை பெருக்கத்தைக் குறைக்க இரண்டு தலைநகரங்கள் இருப்பது உதவும் என ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறதே?

சென்னையைப் பொறுத்தவரை தொழில்நுட்பம், தொழிற்சாலைகள், துறைமுகங்கள் என ஏற்கனவே நிறுவப்பட்ட கட்டுமானங்கள் இருக்கின்றன. அந்தப் பணிகளைச் சார்ந்த லட்சக்கணக்கான மக்கள் சென்னையை வாழ்விடமாக கொண்டிருக்கிறார்கள். புதிய தலைநகரம் வந்தால் இந்த நெருக்கம் குறையும் என்பதும் கிடையாது. ஏனெனில் இங்கிருக்கும் எந்தப் பணியும் நிறுத்தப்படப் போவதில்லை. கூடுதலாக புதிய தலைநகரத்தில் இத்தகைய கட்டுமானங்கள் நிறுவப்படும். எனவே புதிய தலைநகரமும் சென்னையை போலவே நெருக்கத்தைச் சந்திக்கலாம். தவிர, ஏற்கனவே சென்னையில் இருக்கும் மக்கள் நெருக்கம் குறையவும் வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.

மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை வந்ததை உதாரணமாக சொல்கிறார்கள். அதை எப்படிப் பார்க்கறீர்கள்?

உயர் நீதிமன்றம் வேறு. அது ஒரு தனி அமைப்பு. பொதுமக்களுக்கு நீதிமன்றம் செல்லும் தேவை அதிகம். எனவே, தென் பகுதியில் ஒரு நீதிமன்றம் என்பது ரிட் மனு தாக்கல் செய்வது தொடங்கி பல விஷயங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், தலைமைச் செயலகத்தில் பொது மக்கள் நடமாட்டம் மிக குறைவே. அப்படிப் பார்த்தால், ஏன் உச்சநீதிமன்ற பென்ச் வேறு எங்கும் தொடங்கப்படவில்லை என்று கூட கேட்க முடியும். உயர்நீதிமன்ற லாஜிக்கை தலைநகரத்துக்கு வைப்பது பொருத்தமாக இருக்காது.

உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை

புதிய தலைநகரம் உருவாக்கப்பட எவ்வளவு மனித சக்தியும், உழைப்பும் தேவைப்படும்?

ஆயிரக்கணக்கான மக்களின் உழைப்பு அவசியம். புதிய கட்டுமானங்களுக்கு புதிய ஊழியர்கள் தேவைப்படுவர். இது தேவையில்லாத உழைப்பு விரயம் மற்றும் பண விரயத்தை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, இரண்டு தலைநகரங்கள் என வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு இடத்திலும் அமைச்சர்கள் மீட்டிங்குகள் நிகழ்ந்தால் அவர்கள் போக்குவரத்து, அவர்களுக்கான தங்கும் இடங்கள், பணியாளர்களின் தேவை, பாதுகாப்பு ஏற்பாடு, ஆவணங்கள் இடம்மாற்றுவது என மறைமுகச் செலவுகளே மிக அதிகம் ஆகும். அதையெல்லாம் மக்களின் வளர்ச்சிப் பணிகள் பக்கம் திருப்பலாமே!

ஆனால், புதிய தலைநகரம் வந்தால் அப்பகுதியின் வளர்ச்சிக்கு உதவாதா? நீங்கள் மதுரையிலும் பணி புரிந்திருக்கிறீர்கள். உங்கள் அனுபவத்தில் சொல்லுங்கள். மதுரையை தலைநகரமாக்கலாமா?

தலைநகரம் என்பதால் ரியல் எஸ்டேட் கொஞ்சம் வளரலாம். சில தொழில் நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்யலாம். ஆனால், அது மட்டுமே அந்த ஊருக்கான முழுமையாக வளர்ச்சி ஆகாது. குறிப்பாக தலைநகராக மாற்றினால்தான் வளர்ச்சி இருக்கும் என்பதும் உண்மை அல்ல. சர்வதேச விமான நிலையங்கள், அப்பகுதி துறைமுகங்களில் கூடுதல் வசதிகள், போக்குவரத்து வசதிகள், தொழில்நுட்ப வளர்ச்சி என நகர கட்டுமானத்தைச் சற்று உயர்த்தினால் அந்தப் பகுதி தொழில் ரீதியாக வளர்ச்சியடைய முடியும். தலைநகரமாக்கித்தான் மதுரையை வளர்க்க வேண்டும் என்பதில்லை.

Also Read: நியூ நார்மலும் உளவியல் சிக்கலும்... இந்திய நகரங்களில் தற்கொலைகள் அதிகரிக்கக் காரணம் என்ன?

தலைநகரமாக சென்னை - மதுரை ஒப்பீடு என்ன?

சென்னை நீண்ட நெடுங்காலமாக முக்கியமான நகரம். இரண்டு துறைமுகங்கள் இருக்கின்றன. சர்வதேச போக்குவரத்தும் நன்றாக இருக்கிறது. இந்திய அளவிலும் ரயில் மற்றும் சாலை வசதிகளும் நன்றாக இருக்கின்றன. கலாசார ரீதியாகவும், சென்னை வளர்ந்திருக்கிறது. தொழில்ரீதியாக இங்கு வரும் வெளிநாட்டினர்களுக்குத் தேவையான வசதிகள் தொடங்கி, பொழுதுபோக்கு அம்சங்கள் வரை சென்னை அனைவருக்குமான நகரமாக இருக்கிறது. மதுரை இவற்றில் எல்லாம் சற்று பின்தங்கியிருக்கிறது. நிர்வாக ரீதியாகவும், மற்ற விஷயங்களிலும் சென்னை தலைநகரமாக குறையின்றி செயல்படுகின்றது. இந்நிலையில் மதுரையை மற்றோர் தலைநகரமாக அறிவிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.



source https://www.vikatan.com/government-and-politics/politics/chennai-madurai-comparison-as-capital-cities-retired-ias-interview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக