புரட்டாசி மாதம் என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது கோவிந்தா என்னும் திருநாமமே. அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் எளிய மக்களும் பெருமாளுக்குகந்த திருநாமங்கள் இட்டுக்கொண்டு மஞ்சள் ஆடை அணிந்து பெருமாள் கோயில்கள் சென்று வழிபடுவர். பெரும்பாலும் இந்த மாதம் முழுவதும் சாத்விக உணவுகளை மட்டுமே உண்பார்கள். இந்த மாதத்தில் ஏதேனும் ஒரு சனிக்கிழமைகளில் தங்களால் இயன்ற அளவுக்குப் பெருமாளுக்குப் படையல் போடுவர். வீட்டில் கோவிந்தா கோஷமிட்டு அந்த வேங்கடவனை வழிபடுவர். ஒரு சிலர் திருப்பதிக்கு இந்த புரட்டாசி மாதத்தில் சென்று வருவதும் உண்டு. ஆனால் இந்த ஆண்டு சகலமும் மாறியிருக்கிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் தொடங்கிவிட்டது, ஆனால் பக்தர்கள் தரிசிக்க இயலாது. காரணம் கொரோனா தொற்று அச்சம்.
புண்ணியங்கள் மிகுந்த இந்தப் புரட்டாசி மாதத்தின் சிறப்புகளையும் நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் வழிபாடுகளை ஒட்டிக் கடைப்பிடிக்க வேண்டிய சில பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அறிந்துகொள்ளலாம்.
இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் சிறப்புகள்:
புரட்டாசி மாதத்தைக் கன்னி மாதம் என்று சொல்வார்கள். சூரியன் கன்னிராசியில் சஞ்சரிக்கும் மாதம். கன்னி ராசிக்கு அதிபதி புதபகவான். புதபகவானுக்கு அதிபதி திருப்பதி வேங்கடவன். புதபகவான் கன்னி ராசியில் உச்சமடைவார். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் பிறக்கும்போது புதபகவான் கன்னிராசியில் சஞ்சரித்து உச்சமடைந்திருக்கிறார். அதிலும் முதல் சனிக்கிழமையான இன்றும் அவர் கன்னிராசியில் சஞ்சரிக்கிறார். எனவே புதபகவானின் அருளைப் பெற நாம் ஏழுமலையானக் கட்டாயம் வழிபட வேண்டும்.
இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் இரண்டு அமாவாசைகள். இவ்வாறு வரும் மாதங்களை மல மாதம் என்று சொல்வது வழக்கம். இத்தகைய மாதங்களில் பொதுவாக திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் செய்வதில்லை. நவராத்திரியும் இந்த ஆண்டு இந்த மாதத்தின் இரண்டாம் அமாவாசைக்குப் பிறகு (அதாவது ஐப்பதியில்)தான் வருகிறது. எனவே இந்த மாதம் முழுவதுமே நாம் பெருமாள் வழிபாட்டில் மனதைச் செலுத்தலாம்.
பெருமாள் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். அவரைப் பணிந்துகொண்டால் பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருகும். பெருமாளுக்கு இந்த மாதத்தில் செய்யும் மாவிளக்கு, தளிகை போடுதல், கோவிந்தாபோடுவது, சமாராதனை ஆகிய வழிபாடுகள் மிகவும் பலன்தருபவை. சகல தோஷங்களையும் நீக்கும் வழிபாடாக ஏழுமலையான் வழிபாடு விளங்குகிறது.
வேங்கடவனின் அருளைப் பெற துணை நிற்கும் தயை தேவி! - புரட்டாசி புண்ணிய கதைகள்!
சில வீடுகளில் கோவிந்தா சொல்லி பிட்ஷை எடுத்து பெருமாளுக்குத் தளிகை மற்றும் மாவிளக்கு போடும் வழக்கங்கள் உண்டு. நம்மைவிட வசதியில் உயர்ந்தவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள் என்ற பேதம் இன்றி இறைவனின் நாமத்தைச் சொல்லி அவர்கள் வீட்டு வாசலுக்குச் சென்று கையேந்தி நிற்பதன் மூலம் நான் என்கிற அகந்தை அழிந்து நல்லருள் சேரும் என்பது தத்துவம். இதில் கொடுக்கிறவர் பெற்றுக்கொள்கிறவர் இருவருமே வேங்கடவனின் அருளுக்குப் பாத்திரமாவர். அவர்கள் இல்லங்களில் எப்போதும் தானியம் நிறைந்து இருக்கும் என்பது நம்பிக்கை.
கட்டாயம் இவற்றைக் கடைப்பிடிங்க...
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது வழக்கம். இந்தமுறை ஆலய வழிபாடுகளில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே அவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசத்தோடு ஆலயம் சென்று சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழிபடலாம்.
வீட்டில் நாம் செய்யும் பூஜைகளுக்கு உகந்த பொருள்களைக் கடைகளுக்குச் சென்று வாங்கும்போதும் கவனம் தேவை. முடிந்தவரை பல இடங்களுக்குச் சென்று பொருள்களை வாங்காமல் ஒரிரு இடங்களில் வாங்கிக்கொள்ளலாம். அப்போதும் மாஸ்க் சானிடைசரை மறக்க வேண்டாம்.
கோவிந்த நாமம் சொல்லி வீடுகளுக்குச் சென்று பிட்சை பெறுவது கொரோனா காலத்தில் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்று தெரியவில்லை. தாங்கள் குடியிருக்கும் பகுதிகளின் தன்மைக்கு ஏற்ப நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள். பல இடங்களுக்கும் சென்று பிட்ஷை பெறுவதைத் தவிர்த்து, நன்கு அறிந்த கொரோனா தொற்று இல்லாத அருகிலிருக்கும் ஓரிரு வீடுகளுக்குச் சென்று வாசலில் நின்று வாங்குவது நல்லது.
Also Read: ஆயுள் நீட்டிக்கும் தேக சுத்தி யோக பயிற்சி முறைகள்... நீங்களும் கலந்துகொள்ளலாம்!
முடிந்தவரை பிட்சை இடுகிறவர் உங்களைத் தொடாமல் போதிய இடைவெளியில் நின்று இடுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் முன்கூட்டியே சாஸ்திரத்துக்குக் கொஞ்சம் அரிசி, பருப்பைச் சிறு காகிதத்தில் கட்டி வாசலில் வைத்துவிடச் சொல்லுங்கள். அதை நாம் எடுத்து வந்துவிட்டால் போதுமானது. பிட்சைக்குப் போய்வந்ததும் மஞ்சள் நீரால் நன்கு கை கால்களைக்கழுவி விட்டுப் பின் வீட்டுக்குள் சென்று வழிபாட்டைத் தொடருங்கள்.
திருப்பதியில் பிரம்மோற்சவம்
இந்த ஆண்டு திருப்பதி பிரம்மோற்சவம் பக்தர்கள் பங்களிப்பின்றி ஏகாந்தமாக நடைபெற இருக்கிறது. பிரம்மோற்சவத்தை ஒட்டி வழக்கம் போல் ஒளிவிளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. பூ அலங்காரங்களும் குறைவின்றி செய்யப்பட்டுள்ளன. இந்த உற்சவத்தின் ஒவ்வொருநாளும் பெருமாள் ஒரு வாகனத்தில் எழுந்தருள்வார். காலை மாலை என இருவேளைகளும் நடைபெறும் வாகன சேவைகள் கல்யாண உற்சவ மண்டபத்தில் நடைபெறும். முக்கியசேவையான கருடசேவை செப்டம்பர் 23 ம் தேதி நடைபெற இருக்கிறது.
source https://www.vikatan.com/spiritual/functions/the-glory-of-purattasi-saturday-and-the-worship-of-perumal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக