தஞ்சாவூரில் கொரோன பரவுதல் குறித்து எச்சரிக்கை செய்யும் விதமாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பதிவிட்டதாக கூறி அடுத்த மூன்று மாதங்கள் பேரழிவைத் தரும் என்ற பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டதுடன் கவலையையும் தந்தது.
கொரோனா பரவுதலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இன்றிலிருந்து பல தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. மேலும், பல்வேறு வழிகாட்டு நடைமுறைகளை அறிவுறுத்தி, அதனை கடைபிடிக்கவும் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக தஞ்சை மாவட்டத்தில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்டவைகளில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் மருதுதுரை கொரோனா பரவுதல் குறித்து எச்சரிக்கை செய்யும் விதமாக பதிவிட்டதாகக் கூறப்படும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
அந்தப் பதிவில், ``தஞ்சை மாவட்ட நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். மூச்சுத் திணறல், கொரோனாவின் முக்கியமான பாதிப்பு மற்றும் அவசரகால கேஸ்கள் மட்டுமே தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கையாளப்படுகின்றன.
அனைத்து கார்ப்பரேட் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். எல்லோரும் அரசு மருத்துவமனையை நாடுகிற சூழ்நிலை நிலவுவதால், கடுமையான இடப்பற்றாக்குறை அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டு வருகிறது.
Also Read: கோவை: 60 நாள்களில் செயற்கை உறுப்பு நிலையம்! - கொரோனா காலத்திலும் அசத்திய அரசு மருத்துவமனை
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சோர்வடைந்து நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு உதவி செய்யும் பணியாளர்கள், நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். அடுத்த இரண்டு, மூன்று மாதங்கள் பேரழிவைத் தரும். கடுமையான இந்த தொற்று நோயின் அபாயத்தை பொதுமக்கள் இன்னும் முழுமையாக அறிந்து, புரிந்து கொள்ளவில்லை.
ஒவ்வொரு தனிநபரின் உயிரும் ஆபத்தில் இருக்கிறது. எனவே, தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் அனைவரும் சமூக ஒழுக்கம், சமூக இடைவெளி, கை கழுவுதல் உள்ளிட்டவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
புதிய நபர்களைச் சந்தித்தல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால், தஞ்சாவூர் இப்போது கொரோனா மையமாக மாறியுள்ளது. தற்போது கொரோனா பாசிட்டிவ் கேஸ் அதிகமாகி வருகிறது. அனைத்து பெரிய மருத்துவமனைகளும் நிரம்பியுள்ளன. நோயாளிகள் ஒரு படுக்கைக்கு எல்லா இடங்களிலும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அடுத்து வரும் காலங்களில் கவனமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்'' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்யும் விதமாக இருந்தாலும், இந்தப் பதிவு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. தஞ்சாவூரில் கடந்த சில வாரங்களாகவே நாள் ஒன்றுக்கு தோராயமாக 100 பேர் வரை கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அரசு அதிகாரி ஒருவரே இதனை பதிவிட்டிருப்பதாகக் கூறி பலரும் அந்த பதிவைப் பகிர்ந்து வருவதால், அது வைரலானது.
இது குறித்து டீன் மருதுதுரையிடம் பேசினோம், ``வாட்ஸ்அப்பில் வரும் அந்த பதிவை நான் பதிவிடவில்லை. கொரோனா பரவி வரும் நிலையில் பொதுமக்கள் மத்தியிலிருந்து எச்சரிக்கை செய்யும் விதமாக, ஒரு குரலாக அந்தப் பதிவை ஒருவர் வாட்ஸ்அப்பில் பதிவு செய்திருந்தார்.
மக்களின் நலனே முக்கியம் என செயல்படுவதால், அந்த நபர் பதிவிட்டதில் சிலவற்றை நீக்கிய பிறகு நான் ஒரு குரூப்பில் அதனை பகிர்ந்திருந்தேன். நானே அதனை எழுதியதாக நினைத்து பலர் அந்த பதிவை பரப்பி வருகின்றனர். மக்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது. தேவையற்றதை நம்பாமல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனாவை முற்றிலுமாக ஒழித்து அதன் பிடியிலிருந்து நாம் விரைவில் மீண்டு விடலாம்” என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/tanjoe-medical-college-dean-explains-about-whats-app-viral-post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக