Ad

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

`மண்டலப் பதவி; சீனியர்களுக்குப் புதிய பொறுப்பு!'- தி.மு.க பொதுக்குழுவின் பின்னணி

தி.மு.கவின் பொதுக்குழுக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க-வில் காலியாக உள்ள பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்வும், பொருளாளர் பதவிக்கான தேர்வும் இந்த பொதுக்குழுவில் முடிவுசெய்யப்பட உள்ளது.

தி.மு,க பொதுக்குழு அறிவிப்பு

தி.மு.க தலைமைக் கழகத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், வரும் 9-9-20 புதன்கிழமை காலை 10 மணி அளவில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்றும் அதில், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்றொரு அறிவிப்பில், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 3-9-20 அன்று காலை 10-30 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு... தி.மு.க, அ.தி.மு.கவின் கூட்டணிக் கணக்கு! #TNElection2021

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அந்த முடிவுகளை வைத்து பொதுக்குழுவில் ஒப்புதல் பெற முடிவு செய்துள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். தி.மு.கவின் பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் மறைந்த பிறகு அந்த பதவிக்குத் தற்போது பொருளாளராக உள்ள துரைமுருகனைக் கொண்டுவர முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய்த்தொற்று பரவல் காணமாக உடனடியாக பொதுக்குழுவைக் கூட்ட முடியவில்லை. இதனால், பொதுச்செயலாளர் தேர்வும் தள்ளிப்போனது. பொருளாளர் பதவியை ராஜினாமா செய்த துரைமுருகனே, மீண்டும் பொருளாளர் பதவியில் தொடர்வார் என தனி உத்தரவும் தி.மு.க தலைமையில் இருந்து வந்தது.

ஸ்டாலின்

இந்நிலையில், கட்சியில் சீனியர்-ஜூனியர் என்கிற வேறுபாடுகள் மாவட்ட வாரியாக அதிகரித்துவருகிறது. குறிப்பாக தற்போது மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்களில் மூவர் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள். இதனால் சீனியர்கள் பலரும் கலகத்தில் உள்ளார்கள். அதே நேரம் கட்சியின் தலைமை ஐம்பது வயதிற்குட்பட்டவர்களை பெரும்பாலும் மாவட்ட பொறுப்பாளர் பதவிக்குக் கொண்டுவரத் திட்டமிடுகிறது. ஏற்கெனவே மாவட்டச் செயலாளர்கள் பதவியில் பல ஆண்டுகளாகக் கோலோச்சும் சீனியர்களை அடுத்தகட்ட பதவிக்கு நகர்த்தவும் திட்டமிட்டுள்ளனர்.

Also Read: `கண்காணிப்பு' ஏற்பாட்டுக்கு ஸ்டாலின் கொந்தளிப்பு... உதயநிதி கடும் அப்செட்!

இதுகுறித்து தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். ``அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில்வைத்து கட்சிக்குள் சில மாற்றங்களைக் கொண்டுவர தலைவர் திட்டமிட்டுள்ளார். மண்டலவாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்து கட்சியைப் பலப்படுத்தும் திட்டமும் உள்ளது. அதற்கான அறிவிப்பு இந்தப் பொதுக்குழுவில் அறிவிக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே மாவட்டச் செயலாளர்களாக உள்ள சீனியர்கள் இந்தப் பதவிக்குக் கொண்டுவரப்படலாம். அதேபோல் கட்சியில் சீனியர்களாக உள்ள ஜெகத்ரட்சகன், ஏ.வ.வேலு, பொன்முடி போன்றவர்களையும் மாநில அளவிலான பொறுப்புக்குக் கொண்டுவரக் கட்சித் தலைமை திட்டமிடுகிறது. இதற்காக துணைப் பொதுச்செயலாளர் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த உள்ளார்கள். அமைப்புச் செயலாளர் பதவியில் தற்போது ஆர்.எஸ்.பாரதி இருக்கிறார். துணை அமைப்புச் செயலாளர் என்கிற பதவியும் உருவாக்கும் திட்டமும் உள்ளது.

துரைமுருகன் - ஸ்டாலின்

மேலும், துரைமுருகனுக்குப் பொதுச்செயலாளர் பதவியை அளிக்கக் கட்சித் தலைமை விரும்பவில்லை என்கிற செய்தி தொடர்ந்து பரபரப்பட்டு வந்தது. அதற்கு இந்தப் பொதுக்குழுவில் முடிவு கட்டப்படும். அவர், பொதுச்செயலாளர் பதவிக்குச் செல்கிறார். பொருளாளர் பதவியை டி.ஆர்.பாலு வசம் வழங்கக் கட்சித் தலைமை திட்டமிடுகிறது. ஆனால், தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என ஏ.வ.வேலு, ஆ.ராசா ஆகியோர் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். துரைமுருகன் உள்ளிட்ட சீனியர்களிடம் ஸ்டாலின் நேற்று இரவு ஆலோசனை நடத்தியிருக்கிறார். அந்த ஆலோசனைக்கு பிறகே இன்று பொதுக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். பொதுக்குழுவுக்கு முன்பாகவே பொதுச்செயலாளர் பதவிக்கு யார் போட்டியிட உள்ளார்கள், பொருளாளர் பதவிக்கு யார் போட்டியிட இருக்கிறார்கள் என்கிற விவரங்களும் அறிவிக்கப்பட உள்ளது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு முடிந்த பிறகு, ஸ்டாலின் தேர்தல் வேலையில் தீவிரம் காட்ட இருக்கிறார்” என்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/politics/dmk-general-committee-to-elect-new-gs-treasurer-in-september-9

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக