கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மருத்துவத்துறையில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. கோவை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு தினசரி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதேநேரத்தில், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மக்களும் கோவை அரசு மருத்துவமனையை நம்பித்தான் இருக்கின்றனர்.
ஆனால், இந்த காலகட்டத்திலும், கோவை அரசு மருத்துவமனை குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
சோதனை முயற்சியாக யசோதா என்ற பெண்ணுக்கு செயற்கை கால் பொறுத்தப்பட்டது. இதுகுறித்து யசோதா கூறுகையில் ``விபத்து, சர்க்கரை நோய் காரணமாக கடந்த ஆண்டு என் கால் அகற்றப்பட்டது. இதனால், நான் பணிக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். எனக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள். இளைய மகள் படித்துக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், வேறு வழியில்லாமல் அவளின் படிப்பை நிறுத்திவிட்டோம்.
செயற்கை கால் வைக்க அதிக செலவாகும் என்பதால், அப்படியே விட்டுவிட்டோம். தற்போது, முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இங்கு செயற்கை கால் பொறுத்தப்பட்டுள்ளது. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முடநீக்கியல் துறை தலைவர் வெற்றிவேல் செழியன் கூறுகையில், “செயற்கை உறுப்புகள் அமைக்க தனியார் மருத்துவமனைகளில் லட்சங்களில் செலவாகும். சென்னை சென்று செயற்கை உறுப்பு அமைத்து வருவதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. அதைப்போக்கும் வகையில், மேற்கு மாவட்டங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இது இருக்கும். முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக இங்கு செயற்கை உறுப்புகள் அமைக்கப்படும். இதுவரை 2 பேருக்கு செயற்கை கால்கள் அமைத்துள்ளோம். இதற்காக, 10 படுக்கைகள் அடங்கிய பிரத்யே வார்டு அமைத்துள்ளோம்.
இந்த செயற்கை உறுப்புகளின் எடை மிகவும் குறைவாக இருப்பதால், பயன்படுத்த எளிதாக இருக்கும். கொரோனா காலகட்டத்திலும், ஏற்கெனவே முதல்வர் காப்பீடு திட்டத்தில் கிடைத்திருந்த ரூ.50 லட்சத்தை வைத்து 60 நாள்களில் இந்த மையத்தை அமைத்துள்ளோம். அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் மருத்துவமனை முதல்வர் ஆகியோர் இதற்கு வழிகாட்டினர்” என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-government-hospital-implemented-artificial-organs-center
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக