Ad

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

லாக்டௌனிலும் 700 பேருக்கு ரத்ததானம்... உயிர் காக்கப் போராடும் சேலம் ரத்ததானம் குழு!

''அண்ணா உயிருக்குப் போராடிட்டு இருக்கார். ஒரு யூனிட் ரத்தம் தேவைப்படுது...'' என்று வருகிறது முதல் அழைப்பு. சில மணி நேரத்தில், ''ஜென்மத்துக்கும் உங்களை மறக்க மாட்டேண்ணா... ரத்தம் கொடுத்தவருக்கும் உங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிண்ணா...'' என்று அலைபேசியில் நெகிழ்கிறது அதே குரல்.

இப்படித்தான் அழுகுரலோடும் நன்றி சொல்லியும் தொடர்ந்து இளம்பரிதிக்கு போன் கால்கள் வந்தவண்ணம் உள்ளன.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளம்பரிதி. இவர் 'சேலம் பிளட் டோனர்ஸ்' என்ற ரத்ததான தன்னார்வல அமைப்பைத் தொடங்கி பல இளைஞர்களை இதில் இணைத்துள்ளார். இவர்கள் சேலம் மருத்துவமனைகளில் உள்ள உள் நோயாளிகளுக்கும், விபத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கும் ரத்த தானம் செய்து வருகிறார்கள். தேவை இருப்பவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுத்தும் சேவையாற்றி வருகிறார்கள்.

சேலம் பிளட் டோனர்ஸ்

'சேலம் பிளட் டோனர்ஸ்' மற்றும் 'இதயம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளம்பரிதியிடம் பேசினோம். ''எங்க வீடு சேலம் சூரமங்கலத்துல இருக்கு. அப்பா கருப்பண்ணன். அம்மா விஜயா கூலி வேலை செய்யுறாங்க. என் கூடப் பிறந்தவங்க நாலு பேரு. நான்தான் கடைக்குட்டி. தர்மபுரி ஜெயம் இன்ஜினீயரிங் காலேஜ்ல ட்ரிபிள் இ முடிச்சுட்டு தனியார் கம்பெனியில வேலைபார்க்கிறேன்.

இயல்பிலேயே எனக்கு உதவும் மனப்பான்மை உண்டு. ஆறு வருஷத்துக்கு முன்னாடி என் பிறந்தநாளுக்கு ரத்ததானம் செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்குப் போனேன். மரணத்தின் விளிம்பில் உயிருக்குப் போராடிட்டு இருக்கிறவங்களையும், அவங்க குடும்பத்தார் இயலாமையில் தவிச்சதையும் பார்த்தப்போ அந்த உலகம் வேறா இருந்ததை உணர்ந்தேன். உயிர் காக்க அவங்க ரத்த தானத்துக்காக அல்லாடிட்டு இருந்தாங்க. அந்தக் காட்சிகள் எல்லாம் என் மனதை ரொம்ப தொந்தரவு செய்தது.

என் நண்பர்கள் ஜாவித், பூவரசன், கலையரசன், அரவிந்த், ஹரி, நிலா, கார்த்திக் இவங்ககிட்ட எல்லாம் என்னோட ஆஸ்பத்திரி ரத்த தான அனுபவத்தைச் சொன்னேன். நாங்க ஒரு அமைப்பா திரண்டு, ரத்த தான தேவை இருக்கிறவங்களுக்கு உதவ முன்வந்தோம்.

முதல்ல நாங்க 8 பேரும் ரத்ததானம் செய்தோம். பிறகு ஒரு வாட்ஸ்அப் குரூப் தொடங்கி, எங்களை மாதிரி சேவை உள்ளங்களை அதில் இணைத்தோம்.

இளம்பரிதி

'சேலம் பிளட் டோனர்ஸ்' என்ற அமைப்பை உருவாக்கி அதில் சில விதிமுறைகளை வகுத்தோம். சேவை நோக்கத்தோட ரத்ததானம் செய்றோம். ரத்தம் கொடுக்க யாரிடமும் பணமாகவோ, பொருளாகவோ சிறு துரும்பைக்கூட வாங்கக் கூடாது என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு கடந்த 6 வருஷமா ஏராளமானவங்களுக்கு ரத்த தானம் செஞ்சிட்டு வர்றோம்.

எந்தப் பாகுபாடும் இல்லாம, யார் ரத்த தான உதவி கேட்டாலும் அரை மணி நேரத்தில் டோனர் ரெடி செய்து ரத்தம் கொடுக்க வைக்கிறோம். ரத்த தானம் பெற்ற பிறகு, கண்ணீரோட அவங்க எங்களுக்கு நன்றி சொல்வாங்க. 'உயிரையே காப்பாத்தியிருக்கீங்க... ஒரு ஜூஸ்கூட குடிக்காம போறீங்களே...'னு கலங்குவாங்க. நாங்க சிரிச்சுட்டே தண்ணி மட்டும் வாங்கிக் குடிச்சிட்டு வந்துடுவோம். மேலும், ரத்தம் கொடுக்கிறதோடு நிறுத்திக்காம, அறியாமையிலும் ஏழ்மையிலும் இருக்கிறவங்களை அவங்க டிஸ்சார்ஜ் ஆகும்வரை கவனிச்சுக்குவோம்.

சேலம் பிளட் டோனர்ஸ்

இயலாதவர்களா இருக்கும்பட்சத்தில் அவங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வாங்கிக் கொடுத்து எங்களாலான உதவிகளைச் செய்வோம்'' என்றவர், நெகிழ்ச்சியுடன் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்தார்.

''காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, சிறுநீரகம் பாதித்த ஒரு பேராசிரியர் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றப்போ அவருக்கு ரத்த தானம் ஏற்பாடு செய்ததோடு சில உதவிகளும் செய்தோம். அவர் குணமாகி வீடு திரும்பினார்.

கொரோனா காலத்தில் ரெண்டு மாசத்துக்கு முன் திடீர்னு அந்தப் பேராசிரியருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு வந்துட்டு இருந்தப்போ, 'சேலத்துக்குக் கொண்டு போங்க, அங்கு என் தம்பிகள் இருக்காங்க, என்னை நல்லா பார்த்துப்பாங்க'னு எங்க மேல இருந்த நம்பிக்கையில சொல்லியிருக்கார். ஆனா, ஆம்புலன்ஸ் சேலம் வரும் வழியில் அவர் உயிர் பிரிஞ்சிடுச்சு. இது எங்களுக்குப் பெரிய வேதனையைக் கொடுத்துச்சு...'' - தாங்கள் காப்பாற்றிய எத்தனையோ உயிர்கள் இருக்க, தங்கள் மேல் அந்தப் பேராசிரியர் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்ற வாய்ப்பில்லாமல் போனது பற்றி வருந்துகிறார் இளம்பரிதி.

சேலம் பிளட் டோனர்ஸ்

'' 'சேலம் பிளட் டோனர்ஸ்' அமைப்பில் 250-க்கும் மேற்பட்டவங்க இருக்கோம். நாங்க தர்மபுரியில் 'இதயம்' அமைப்போடு இணைந்து செயல்படுறோம். இந்தக் கொரோனா லாக்டௌனிலும், கடந்த நாலு மாசத்தில் 700-க்கும் மேற்பட்டவங்களுக்கு ரத்த தானம் செய்திருக்கோம். இந்தச் சேவையை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தணும் என்பதே எங்க எதிர்கால லட்சியம்!'' - ஒரே குரலில் சொல்கிறார்கள் 'சேலம் பிளட் டோனர்ஸ்' தன்னார்வலர்கள்.

நல் எண்ணங்கள் நிச்சயம் நிறைவேறும்!



source https://www.vikatan.com/lifestyle/medicine/salem-blood-donor-volunteers-group-donated-blood-for-700-people-in-lockdown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக