Ad

புதன், 20 ஏப்ரல், 2022

நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த கைதிக்கு கஞ்சா சப்ளை... தப்ப முயன்ற சிறை நண்பரை மடக்கிய போலீஸார்!

ராமநாதபுரம் எம்.எஸ் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (24). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர், நேற்று முன்தினம் ராமநாதபுரம் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வந்திருக்கிறார். அங்கு மற்றொரு வழக்கு விசாரணைக்காக மாவட்டச் சிறையிலிருந்து கீழக்கரையைச் சேர்ந்த நிர்மல்ராஜ் (23) என்பவர் போலீஸாரால் அழைத்துவரப்பட்டிருக்கிறார்.

இவர்கள் இருவரும் ஏற்கெனவே மாவட்டச் சிறையில் ஒன்றாக இருந்தபோது பழகி, நண்பர்களாகியுள்ளனர். அந்தப் பழக்கத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இருவரும் பேசியிருக்கின்றனர். அப்போது நிர்மல்ராஜ், தான் மீண்டும் நாளை விசாரணைக்கு போலீஸாரால் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படவிருப்பதாகவும், தனக்கு கஞ்சா பொட்டலம் வாங்கித் தரும்படியும் கேட்டதாகக் கூறப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட கார்த்திக்

இதையடுத்து கஞ்சா பொட்டலத்துடன் கார்த்திக் நீதிமன்றத்தில் நேற்று காத்திருந்தார். அப்போது நிர்மல்ராஜை ஜீப்பில் அழைத்துவந்த போலீஸார் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்குள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் நிர்மல்ராஜ் அருகில் கார்த்திக் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது.

வெளியே வரும் நிர்மல்ராஜிடம் எப்படியாவது கஞ்சா பொட்டலங்களை கொடுத்துவிட வேண்டும் என அவரை அழைத்துவந்த போலீஸ் ஜீப் அருகே கார்த்திக் நின்றிருக்கிறார். விசாரணை முடிந்து வெளியே கொண்டுவரப்பட்ட நிர்மல்ராஜை போலீஸார் வேகமாக ஜீப்பில் ஏற்றியுள்ளனர். அப்போது வேறு வழியின்றி ஜீப்பில் நிர்மல்ராஜ் அமர்ந்திருந்த இடத்தின் பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக நைசாக கஞ்சா பொட்டலங்களை கார்த்திக் திணித்துள்ளார்.

இதை அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீஸார் பார்க்கவே, உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிய அவரை போலீஸார் விரட்டிச் சென்று நீதிமன்றத்தின் வெளியே சுற்றிவளைத்துப் பிடித்தனர். இதையடுத்து அவரை கேணிக்கரை போலீஸில் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவத்தால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



source https://www.vikatan.com/news/crime/cannabis-supply-in-court-prison-friend-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக