Ad

செவ்வாய், 12 ஏப்ரல், 2022

தப்பிச் செல்லும் ராஜபக்சே உறவினர்கள்... இனி இலங்கையின் நிலை என்னவாகும்?!

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராகத் தீவிர போராட்டங்கள் நடந்துவருகின்றன. அங்கு, ஆட்சியாளர்களின் நிர்வாகக் கோளாறு, கடன் சுமை உள்ளிட்டவையால் மிக மோசமான பொருளாதாரச் சரிவு ஏற்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருள்கள் கடும் விலை உயர்வைச் சந்தித்திருக்கின்றன. அந்நியச் செலாவணித் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், டீசல், மருந்துகள் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய முடியாமல் திணறிவருகிறது இலங்கை அரசு. இதனால், தினசரித் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் திண்டாடிவருகிறார்கள் இலங்கை மக்கள். நிலக்கரி, எரிபொருள் தட்டுப்பாடுகளால் மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருக்கிறது. நாளொன்றுக்கு 13 மணி நேரத்துக்கு மேலாக மின்வெட்டு நடைமுறையிலிருக்கிறது.

இலங்கை மக்கள் போராட்டம்

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள், ஆளும் இலங்கை பொதுசன முன்னணிக் கட்சிக்கு எதிராகத் தீவிர போராட்டங்களை முன்னெடுத்தன. கூடவே, மக்களும் போராட்டக் களத்தில் குதிக்க, இலங்கையில் பரபரப்பு பற்றிக்கொண்டது. நாளுக்கு நாள் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தன. ``ராஜபக்சே குடும்பம் ஆட்சியிலிருந்து விலக வேண்டும்'' என்பதை வலியுறுத்தி மக்களும் எதிர்க்கட்சிகளும் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.

இந்தப் போராட்டங்களையும், பொருளாதார நெருக்கடியையும் சமாளிக்க முடியாமல், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவைத் தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும், தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அமைச்சரவை முழுவதும் ராஜினாமா செய்த பின்னரும், `அதிபரும் பிரதமரும் பதவி விலக வேண்டும்' என்ற கோரிக்கையோடு போராட்டங்கள் வலுத்திருக்கின்றன.

நாட்டைவிட்டுத் தப்பியோடும் ராஜபக்சே உறவினர்கள்!

ராஜபக்சே குடும்பத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இலங்கையைவிட்டுத் தப்பிச் செல்வதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த வாரத்தில் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகனும், இலங்கையின் முன்னாள் அமைச்சருமான நமல் ராஜபக்சேவின் மனைவி லிமினி ராஜபக்சே, தன் பெற்றோர், குழந்தைகளுடன் இலங்கையிலிருந்து வெளியேறியதாகச் செய்திகள் வெளியாகின.

நிருபமா ராஜபக்சே

மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய உறவினரும், இலங்கையின் துணை அமைச்சருமான நிருபமா ராஜபக்சேவும், அவரின் கணவர் திருக்குமரன் நடேசனும் கடந்த வாரம் துபாய்க்குக் கிளம்பிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. உலகத் தலைவர்களின் சொத்து விவரங்களை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பிய `பண்டோரா பேப்பர்ஸ்' ஆவணத்தில் நிருபமாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இவர், தனது போலி நிறுவனத்தின் மூலம் சிட்னி, லண்டன் ஆகிய இடங்களில் சொகுசு பங்களாக்களை வாங்கியிருப்பதாகவும், முதலீடுகள் செய்திருப்பதாகவும் அந்த ஆவணத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரும், அவன்ட்-கார்டெ (Avant-Garde) நிறுவனத்தின் தலைவருமான நிஷங்க சேனாதிபதியும் இலங்கையிலிருந்து தப்பிச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சேனாதிபதிமீது மோசடி, லஞ்சம் வாங்கியது தொடர்பான பல்வேறு வழக்குகள் இருந்தன. கோத்தபய ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது கோத்தபயவுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடித்திருப்பதால், இலங்கையிலிருந்து குடும்பத்தோடு தப்பிச் சென்றிருக்கிறார் சேனாதிபதி. இவர் தப்பிச் செல்லும்போது விமான நிலையத்திலிருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும், மேலிட உத்தரவின் பேரில், செயல்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

அடுத்த சில நாள்களில் ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சில உறவினர்களும், நண்பர்களும் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜபக்சேவுக்கு நெருங்கியவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருவதால், இலங்கையின் நிலை என்னவாகும் என்கிற அச்சம் மக்கள் மத்தியில் தொற்றிக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

ராஜபக்சே குடும்பம்

இலங்கை இனி என்னவாகும்?

``இலங்கை திவாலாகும் நிலைக்கு வந்துவிட்டது. இனி இங்கே காலத்தைக் கழிக்க முடியாது என்பதால்தான் ராஜபக்சேவின் உறவினர்கள் தப்பிச் செல்கிறார்கள்'' என்கிறது ஒரு தரப்பு. மறு தரப்போ, ``மக்கள் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைவதால், தங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றுதான் ராஜபக்சேவின் உறவினர்களும் நண்பர்களும் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்கிறார்கள்'' என்கிறது. இந்த இரண்டுமேதான் காரணம் என்கிறார்கள் விவரமறிந்த சிலர்.

இது குறித்து, ``இலங்கையில் அரசாங்கம் என்ற ஒன்றே கிடையாது என்ற நிலைதான் நீடிக்கிறது. எனவே, `இலங்கையின் நிலை எப்போது சரியாகும்?' என்ற கேள்விக்கான விடை யாருக்கும் தெரியவில்லை. தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ராஜபக்சே உறவினர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருகிறார்கள். ஆனால், அப்பாவி மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகள் தலையிட்டால் மட்டுமே இலங்கையிலிருக்கும் பிரச்னைகளை ஓரளவுக்காவது சரிசெய்ய முடியும்'' என்கிறார்கள் இலங்கையில் நடக்கும் போராட்டங்களை உற்று நோக்கும் சிலர்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/rajapaksa-relatives-and-his-friends-escaping-from-srilanka-whats-happening-there

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக