Ad

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

நாடு தழுவிய அளவில் மின்வெட்டு சிக்கலும் நிலக்கரி பற்றாக்குறையும்... என்ன நடக்கிறது?

மின்வெட்டு:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, `மாநிலத்தில் ஏற்படும் மின்வெட்டுக்கு முக்கிய காரணம் மத்திய அரசு தொகுப்பிலிருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் 750 MW மின்சாரம் தடைப்பட்டது தான்’ என்று, அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய அரசைக் கைகாட்டியுள்ளார். உண்மையில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் 12-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கடுமையான மின்வெட்டு பிரச்னை நிலவுகிறது.

நிலக்கரி

ஆந்திரா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் கடுமையான மின்வெட்டு காரணமாக அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். அதோடு, இந்தியாவில் நிலக்கரி கையிருப்பும் மிகக்குறைந்த அளவில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இருக்கும் நிலக்கரியை வைத்து இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே மின் உற்பத்தி செய்யமுடியும் என்று கூறப்படுகிறது.

குறைந்த கையிருப்பு:

மத்திய மின்சார ஆணையத்தின் தகவல்படி, கடந்த ஏப்ரல் 17-ம் தேதி, இந்தியாவில் உள்ள 173 அனல் மின் நிலையங்களில், 101 அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு மிகவும் குறைந்த அளவில் தான் இருக்கின்றது. கடந்த எட்டு ஆண்டுகளாக இல்லாத அளவுக்குக் கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு இப்போது ஏற்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி நிலையங்களில் அடுத்த 24 நாள்களுக்குத் தேவையான நிலக்கரியைக் கையிருப்பு வைத்திருப்பது அவசியம் என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போதைய நிலையில் எட்டு நாள்களுக்கும் குறைந்தளவு நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாகத் தெரிகின்றது.

நிலக்கரி

உத்தரகாண்ட், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களின் மின் பற்றாக்குறை மூன்று சதவிகிதத்துக்கு உயர்ந்துள்ளது. அதேபோல, ஆந்திராவின் மின் தட்டுப்பாடு 8 சதவிகிதத்துக்கும் மேலே அதிகரித்துள்ளது. இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 53 சதவிகித மின்சாரம் நிலக்கரி மூலம் தான் உற்பத்தியாகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 396 ஜிகாவாட் மின்சாரத்தில் 210 ஜிகாவாட் மின்சாரம் அனல் மின் நிலையங்களின் மூலமாகத் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரி உற்பத்தி குறைந்தது தான் தற்போதைய கடும் மின் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

உற்பத்தி குறைந்தது ஏன்?

173 அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு வெறும் 23 மில்லியன் டன் அளவில் தான் உள்ளது. மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனம்(CIL), இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பங்களிக்கின்றது. இதுமட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதியும் செய்யப்பட்டது. தற்போது நடைபெற்றுவரும் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக நிலக்கரி இறக்குமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை 50 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. அதேபோல, கடந்தாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளால் பெய்த கனமழை காரணமாக இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாட்டில் அதிகபட்ச மின் தேவை 182.37 ஜிகாவாட்டாக இருந்தது. அதேபோல, ஜூலை மாதம் 200 ஜிகாவாட்டாக அதிகரித்தது. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மின் தேவை 187 ஜிகாவாட்டாக அதிகரித்தது. அதேபோல, ஏப்ரல் மாதத்தில் மின் தேவை 194 ஜிகாவாட்டாக இருக்கின்றது. இனி வரவும் காலங்களில் மின் தேவை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் நிலக்கரி உற்பத்தியைக் கோல் இந்தியா நிறுவனம் சற்று அதிகரித்திருக்கின்றது. இறக்குமதி செய்யவும் ஏற்பாடுகள் நடைபெறு வருகிறது.

இன்னொரு புறம், நிலக்கரி விநியோகத்தில், நாட்டின் மின்சாரத்துறை, நிலக்கரி மற்றும் ரயில்வே ஆகிய அமைச்சகங்கள் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை என்பதையும் இங்கு கவனிக்கப்படவேண்டியது. உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியை அனல் மின் நிலையங்களுக்கு கொண்டு செல்ல ரயில்வேயின் ரேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பெரும்பாலும் நிலக்கரியை விநியோகிக்க இந்திய ரயில்வே போதிய ரேக்குகளை ஒதுக்குவதில்லை என நிலக்கரி அமைச்சகம் குற்றச்சாட்டு சுமத்துவதும், கோல் இந்தியா ரேக்குகளை ஏற்றி இறக்குவதில் தவறான முறைகளை பின்பற்றுவதாக பதிலுக்கு ரயில்வே துறையும் நிலக்கரி அமைச்சகமும் ஒன்றன்மீது ஒன்று குற்றம் சுமத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. இதனையும் சரி செய்வது மிக முக்கியம் என்கிறார்கள். இதன் காரணமாகவே மத்திய அரசு தட்டுப்பாடுகளை கண்காணிக்க மின், நிலக்கரி, ரயில்வே ஆகிய அமைச்சக அதிகாரிகள் அடங்கிய துணைக் குழு ஒன்றை நியமித்துள்ளது.

மத்திய அரசின் சரியான திட்டமிடல் இல்லாதது மட்டுமே இந்த நிலக்கரி தட்டுப்பாடு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. ``கடந்த எட்டு ஆண்டுகளாக வெற்றுப் வார்த்தைகளால் மாய பிம்பத்தை உருவாக்கி வருகின்றார் பிரதமர். நாட்டில் எட்டு நாள்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு ஏற்பட்டால் சிறுதொழில்கள் அழிந்துவிடும். இதன் காரணமாக அதிகளவில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்" என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/all-over-india-power-shortage-problem-is-the-central-government-is-the-reason-for-the-shortage

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக