Ad

சனி, 23 ஏப்ரல், 2022

RCB vs SRH: ஏப்ரல் 23-ஐ இனி ஆர்சிபி-யால் மறக்க முடியுமா? பழைய டானாக மிரட்டும் சன்ரைசர்ஸ்!

உம்ரான் மாலிக்கின் வேகம், புவனேஷ்வரின் ஸ்விங்கிங் டெலிவரிகள், நடராஜனின் யார்க்கர்கள், ஜேன்சனின் துல்லியம் என வேகப்பந்து அச்சுறுத்தலின் மொத்த பேக்கேஜான சன்ரைசர்ஸின் தாக்குதலை, ஆர்சிபியின் பேட்டிங் லைன் அப் தாக்குப்பிடிக்குமா அல்லது சன்ரைசர்ஸ் துவம்சம் செய்யுமா என போட்டிக்கு முன்னதாகவே, விவாதங்கள் தூள் பறந்தன. ஆனால், ஆர்சிபியின் ஆணிவேர் முதல் பிடுங்கி எறிந்து சன்ரைசர்ஸ் அதகளம் காட்டியிருக்கிறது.

ஏப்ரல் 23 - ஆர்சிபிக்கு எப்பொழுதும் ஏதோ ஒரு வகையில் நினைவு கொள்ளத்தக்க நாளாகவே இருந்து வந்திருக்கிறது. கெய்ல் புயலால், 263 என்னும் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்ததும் இந்த நாளில்தான்; 49-க்கு ஆல்அவுட் என்னும் வலியைச் சுமந்து சென்றதும் இதே நாளில்தான். எனவேதான், அதே நாளில், சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டி என்பதுவும், கிறுகிறுக்க வைக்கும் அவர்களது வேகப்பந்து வீச்சுப் படையும் சற்றே ஆர்சிபி ரசிகர்களுக்கு பீதியையும் பிரஷரையும் ஏற்றிவிட்டது. முடிவில், நிமித்தங்கள் பொய்க்காது எனக் காட்டி, வின்டேஜ் ஆர்சிபி, மறுபடி ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்தது.

RCB vs SRH

இந்த சீசனில் ஆர்சிபியின் டாப் ஆர்டர் குறைபாடு, பலமுறை குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு விட்டாலும் லக்னோவுக்கு எதிரான போட்டியில் தனது அபார ஃபார்முக்கு அடிக்கோடிட்ட டு ப்ளெஸ்ஸி, நம்பிக்கைக் கதிரைக் காட்டியிருந்தார். ஆனால், இப்போட்டியில் அதுவே இடியாகித் தாக்கும் என யாரும் எண்ணவில்லை. மார்கோ ஜேன்சன் - மும்பையின் எக்ஸ் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸான இவர்தான், ஒரே ஓவரில் போட்டியின் முடிவை முன்னறிவித்து விட்டார்.

அவர் வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தே, டு ப்ளெஸ்ஸியின் விக்கெட்டோடு அழிவுக்கான டைட்டில் கார்ட் போட்டது. முந்தைய பந்து இன்ஸ்விங்கராக, இந்தப் பந்தையும் இன்ஸ்விங்கராகக் கணித்து டிஃபெண்ட் செய்ய டு ப்ளெஸ்ஸி முயல, டாப் ஆஃப் தி ஆஃப் ஸ்டம்பைத் தகர்த்தது ஃபுல் லெந்த்தில் வந்த அந்தப் பந்து. அங்கிருந்து ஆர்சிபியின் அழிவு தொடங்கியது என்றாலும், அடுத்த பந்துதான் ஆர்சிபி ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியது.

கோலியைக் கண்ட உடன் கேன் வில்லியம்சன் அவரது டிரைவ் காதலை மனதில் நிறுத்தி இரண்டு ஸ்லிப்களோடு வலைவிரிக்க, அவரும் பலமுறை செய்த அதே தவற்றை இம்முறையும் செய்து மார்க் ராமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சந்தித்த முதல் பந்தே கடைசியாக, கோலி ரன் எடுக்காமல் வெளியேறுவது தொடர்ச்சியாக இரண்டு முறை நடந்தேறியிருக்கிறது. ரோஹித் மற்றும் கோலியின் தற்போதைய ஃபார்ம், இந்திய ரசிகர்களை ஐபிஎல் அபிமானத்தையும் தாண்டியும் அசைத்துப் பார்க்கிறது. கேப்டன் பதவியும் இல்லாமல் இருக்கும் கோலியின் பேட்ஸ்மேன் இடத்திற்கே ஆபத்தாக மாறி வருகிறது, அவரது தற்போதைய மோசமான ஃபார்ம். கோலிக்கான அபாய அலாரம் அடிக்கத் தொடங்கியிருக்கிறது.

RCB vs SRH

அந்த ஓவரில் ஜேன்சனின் விக்கெட் வெறி, இரண்டு விக்கெட்டுகளோடு தணியவில்லை. அதே ஓவரின் இறுதிப் பந்தில் ரவாத்தையும் அனுப்பி டாப் ஆர்டரை மொத்தமாகத் தகர்த்தெறிந்து விட்டார். ஏழு போட்டிகளில் வெறும் 16.1 என்னும் ஆவரேஜோடும், 109 என்னும் ஸ்ட்ரைக் ரேட்டோடும், ஓப்பனருக்கான அங்க அடையாளமேயின்றி தனக்கான வாய்ப்புகளை வீணடித்துக் கொண்டே உள்ளார் ரவாத்.

ஒரு ஓவருக்குள் விழுந்த மூன்று விக்கெட்டுகள் என விழுந்த மரண அடியிலிருந்து மீண்டெழ ஆர்சிபி முயலவே இல்லை. 8/3 என்பதே மனதளவில் அவர்களை வலுவிழக்கச் செய்து விட்டது. போதாக்குறைக்கு, ஆர்சிபியை மொத்தமாய் முறித்துப் போட்டது இன்னுமொரு விக்கெட். தான் வீசிய முதல் ஓவரிலேயே மேக்ஸ்வெல்லை நடராஜன் வெளியே அனுப்ப, பவர்பிளேயில் 31/4 என பலத்த சேதத்தை ஆர்சிபி சந்தித்தது.

நான்கு ஓவர்கள்தான் ஆயுட்காலம் என்றாலும், மொத்தப் போட்டியிலும், அதிகபட்ச நேரம் நீடித்தது, ஷபாஸ் - பிரபுதேசாய் கூட்டணி மட்டுமே. அவர்கள் சேர்த்த 27 ரன்கள்தான், 49/10 என்னும் தங்களது முந்தைய சா(சோ)தனையை, அவர்களே முறித்துவிடாமல் தடுத்தது. ஹரிசாண்டல் பேட் ஷாட்களால், தொடரில் தொடர்ந்து அசத்தி வரும் தினேஷ் கார்த்திக்கும், ஸ்வீப் ஷாட் ஆட முயன்று டக் அவுட் ஆன போதே, ஆர்சிபிக்கு எண்ட் கார்டும் போடப்பட்டு விட்டது.

RCB vs SRH

எஞ்சியிருந்த ஆர்சிபி பேட்ஸ்மென்கள் தட்டுத் தடுமாறி 17-வது ஓவர் வரை போட்டியை நீட்டிக்கச் செய்து 68 ரன்களை எடுப்பதற்குள்ளாகவே மூச்சு முட்டிவிட்டது. 11-ல், 9 வீரர்கள் ஒற்றை இலக்கோடு வெளியேறியிருக்க, அதிலும் மூவர் டக் அவுட் ஆகி ஆர்சிபிக்கு மூடுவிழா நடத்த வைத்துவிட்டனர்.

முதல் மூன்று விக்கெட்டுகள் விழுந்ததும், நங்கூரமிட்டு ஒருசில ஓவர்களை மென்று தின்றாலும் பரவாயில்லை எனச் சற்று நேரம் தாக்குப் பிடித்திருந்தால்கூட 100 ரன்களையாவது தாண்டி சற்றே கௌரவமாக முடித்திருக்கலாம், அதைச் செய்யத் தவறி, மற்றுமொரு லோ ஸ்கோரிங் கேமாக இதனை முடித்தது ஆர்சிபி.

மறுபுறம், வில்லியம்சனின் பௌலிங் மற்றும் ஃபீல்டிங் வியூகங்கள் மிரட்டின. பௌலர்கள் தெறிக்க விட, கடினக் கேட்சுகள் கூடப் பிடிக்கப்பட, தொட்டதெல்லாம் துவங்கியது சன்ரைசர்ஸுக்கு!

எத்தனை ஓவரில், சன்ரைசர்ஸ் இதனை சேஸ் செய்யும், ஒரு விக்கெட்டையாவது ஆர்சிபியால் வீழ்த்த முடியுமா என்பன மட்டுமே கேள்விகளாக இருந்தன. வில்லியம்சனை வேடிக்கை மட்டும் பார்க்கச் சொல்லி விட்டு, நெட் பிராக்டீஸ் போல பந்துகளைப் பறக்கவிட்டு, அதிவிரைவாக இலக்கைத் துரத்தினார் அபிஷேக் ஷர்மா. 28 பந்துகளில், 47 ரன்களைச் சேர்த்திருந்த அபிஷேக்கை ஹர்சல் வெளியேற்றினாலும், அதே ஓவரின் கடைசிப் பந்திலேயே வின்னிங் ஷாட்டாக, சிக்ஸரோடு முடித்தார் திரிபாதி. ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ்.

இந்த ஒரு வெற்றியே அவர்களை பாயின்ட்ஸ் டேபிளில் இரண்டாவது இடத்தில் சிம்மாசனமிட்டு அமர வைத்துவிட்டது. பல வெற்றிகளை முந்தைய சீசன்களில் அவர்களது பௌலிங் படை பெற்றுத் தந்திருக்கிறது. அதே வசந்த காலத்தை மீண்டும் வர வைத்துள்ளது சன்ரைசர்ஸ். இரண்டு தோல்விகளோடு தொடங்கியிருந்தாலும், தொடர்ச்சியான ஐந்து வெற்றி, அவர்களை அபாயகரமானவர்களாக அடையாளம் காட்டியுள்ளது.

RCB vs SRH

ஆர்சிபியோ, 'உத்தேசித்து அறிய முடியாத அணி' என்பதற்கான உத்தரவாதத்தை ஒவ்வொரு போட்டியிலும், அரங்கேற்றிக் கொண்டே உள்ளது. கவலைக்கிடமாக உள்ள டாப் ஆர்டரை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.

மத்திய வரிசை வீரர்களின் முதுகில் சவாரி செய்தே பிளே ஆஃப் வரை வேண்டுமென்றால் எட்டலாம், கோப்பையெல்லாம் பெருங்கனவாகி விடும் என்பதை ஆர்சிபி உணர வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

எது எப்படியோ, இனிமேல் ஏப்ரல் 23 அன்று போட்டி இருக்கக் கூடாதென்பதே ஆர்சிபி ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கும்.


source https://sports.vikatan.com/ipl/ipl-2022-rcb-rattles-again-and-sets-another-low-score-to-lose-the-match-against-srh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக