நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல... ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும், ``பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வாக மாற்றாத வரையில், அது பரப்பப்படாது. மத்திய அமைச்சரவையின் 70 சதவிகித நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்றும் அவர் பேசினார்.
அமித் ஷாவின் அந்தக் கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் திரைத்துறையினரும் எதிர்வினையாற்றியுள்ளனர். “இந்தி மாநிலம் மட்டும் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமித் ஷா நினைக்கிறாரா?” என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஏன் எங்கள் மீது இந்தியைத் திணிக்கிறீர்கள்? உங்கள் அஜெண்டா என்ன? எனக்கு தேவை ஏற்பட்டால் நான் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்வேன். அது என் உரிமை. நான் என்ன உண்ண வேண்டும், என்ன மொழி பேச வேண்டும், என்ன உடுத்த வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?” என்று நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசத்துடன் கேட்டிருக்கிறார்.
இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “தமிழ்தான் இணைப்பு மொழி” என்று ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகும் நிலையில், அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைத்திருப்புவதற்காக இந்தி பிரச்னையை மத்திய ஆட்சியாளர்கள் கிளப்புவதாக எதிர்த் தரப்பினர் விமர்சிக்கிறார்கள்.
இந்த சர்ச்சை குறித்து கல்வியாளரும் எழுத்தாளருமான ம.ராசேந்திரனிடம் பேசினோம்.
“இந்தப் பிரச்னையை மொழி அரசியல், இன அரசியல் என இரண்டாகப் பார்க்கலாம். ஏற்கெனவே இங்கு இன அரசியல் பேசிக்கொண்டிருந்தோம். திராவிட நாடு திராவிடருக்கே என்பதெல்லாம் இனத்தின் அடிப்படையிலானது. திராவிட நாடு கோரிக்கை தீவிரமடைந்தபோது, மொழிவாரி மாநிலங்கள் என்ற அடிப்படையில் மாநிலங்களைப் பிரித்தார்கள். அப்போது, மொழி அரசியல் முன்னுக்கு வந்தது. இந்தி ஆட்சி மொழி என்று சொன்னவுடன், இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. தமிழுக்கு எதிராக இந்தியை வைத்து இந்தி எதிர்ப்பு பேசினோம். அப்போதும், இன அரசியலை இங்கு கைவிடவில்லை.
இப்போது, திராவிட மாடல் என்பதை முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக முன்னெடுக்கிறார். அதற்காக, பெரியாரின் நூல்களை இந்திய மொழிகளில் கொண்டுவருவதற்கான திட்டத்தைச் செயல்படுத்துகிறார். எனவே, ஆரிய மாடல் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள், இப்போது இந்தி மாடல் என்று வருகிறார்கள். ஆரிய மாடல் என்று அங்கு சொல்லிக்கொண்டிருந்தபோது, திராவிட மாடல் என்று இங்கு சொன்னோம். இப்போது திராவிட மாடலை தீவிரப்படுத்தும்போது, அவர்கள் ஆரிய மாடல் என்று அல்லாமல், இந்தி மாடல் என்று வருகிறார்கள். இந்தியைக் கொண்டு இந்தியாவைக் கட்டமைப்போம் என்கிறார்கள்.
தமிழைக் கொண்டு இந்தியாவைக் கட்டமைப்போம் என்று சொன்னால் மற்றவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மட்டும்தான் தமிழ் இருக்கிறது. ஆனால், திராவிட மொழி என்று எடுத்துக்கொண்டால், இந்தியாவின் பல மாநிலங்களிலும் அது இருக்கிறது. எனவே, திராவிட மாடல் என்று முதல்வர் சொல்வதற்கு காரணம் அதன் ஊற்றுக்கண் தமிழாக இருப்பதால்தான். அதனால், பிறப்பொக்கும் என்பதை திராவிட மாடல் என்று சொல்கிறார்.
கொரோனா பெருந்தொற்று வந்தபோது, ‘கைதட்டுங்கள்‘, ‘விளக்கேற்றுங்கள்’ என்று சொன்னார்கள். அவற்றால், கொரோனாவை ஒன்றும் செய்யமுடியவில்லை. அதன் பிறகுதான் தடுப்பூசி போடச் சொன்னார்கள். கடைசியில் நீங்கள் வந்து நிற்கும் இடம் பகுத்தறிவாகவும் அறிவியலாகவும் இருக்கிறது. நாங்கள் முன்னாடியே அங்கு வந்து நிற்கிறோம்.
மதம் கடந்து நாங்கள் யோசிப்பதால், அதிலிருந்து திசைத்திருப்புவதற்காக அவர்கள் மொழிக்குள் போகிறார்கள். இந்தி பேசாத மாநிலங்களுடன் ஆங்கிலத்தில் தொடர்புகொள்ள வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. அதற்கு மாறாக, இந்தியில் தொடர்புகொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.
திராவிட மாடலை, பெரியாரிய கருத்துகளை இந்தியா முழுவதும் கொண்டுசெல்வதற்கான முயற்சியைப் பார்த்து, அவர்களுக்கு பதைபதைப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, எமது போராட்டக் களத்தை மாற்ற வேண்டுமென்று இந்தியைக் கையிலெடுக்கிறார்கள். ஆனால், என்ன நடக்கப்போகிறது தெரியுமா? இந்தி பேசாத மாநிலங்களும் நடுநிலையாளர்களும் திராவிட மாடலை ஆதரிக்கப்போகிறார்கள். அதற்கு முதற்படியாக, ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள தமிழ் மாடலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றும்’ என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சொல்லியிருப்பதைப் பார்க்கிறேன்” என்கிறார் ம.ராசேந்திரன்.
இது குறித்து அரசியல் விமர்சகர் ராமசுப்பிரமணியத்திடம் பேசியபோது, “முன்பு காங்கிரஸ் அரசு எப்படியாவது இந்தியைக் கொண்டுவர வேண்டும் என்று முயற்சி செய்தது. அதில், இன்றைய ஆட்சியாளர்கள் மிகவும் தீவிரமாக முனைப்பு காட்டுகிறார்கள். இன்றைக்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. மருந்துகள் விலை உயர்ந்துகொண்டே போகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன.
இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைத்திருப்புவதற்காக இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பது ஒன்று. எனக்கு இந்தியும், சமஸ்கிருதமும் கொஞ்சம் தெரியும். அதே சமயம், பல மொழிகளைக் கொண்ட நம் தேசத்தில் ஒரு மொழியைத் திணிப்பது தேச ஒற்றுமைக்கு நல்லதல்ல. மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பங்களாதேஷ் என்ற ஒரு நாடு உருவாகக் காரணமே மொழித் திணிப்புதான்” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/controversy-on-amit-shah-speech-about-hindi-language
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக