Ad

வியாழன், 28 ஏப்ரல், 2022

DC v KKR: சொதப்பிய ஸ்ரேயாஸ் பிளான்; குல்தீப்பின் சுழலாலும், வார்னர், பவல் அதிரடியாலும் வென்ற டெல்லி!

கேகேஆருக்கு எதிராக மீண்டுமொரு முறை குல்தீப் விஸ்வரூபமெடுக்க, ராணாவின் அரைசதம் வீணாகும்படி முஸ்தஃபிஸுரின் முடிவுரை முத்தாய்ப்பாக அமைந்தது. பேட்டிங்கிலோ வார்னர் தொடக்கத்தைச் சிறப்பாக்க, இறுதிக் காரியங்களை பவல் சிறப்பாகச் செய்தார்.

மோதல்கள் சுவாரஸ்யமூட்டும் என்றாலும் பழிவாங்கும் படலங்கள் அதை இன்னொரு உயர் தளத்திற்கு எடுத்துச் செல்லும். இந்த சீசனில் கேகேஆர் - டெல்லிக்கு இடையேயான முதல் சந்திப்பில் டெல்லி, குல்தீப்பின் எழுச்சியால் வாகை சூடியது. அதற்கு முன்னதாக 3/4 என காலரைத் தூக்கிவிட்டுச் சுற்றிய கேகேஆர், டெல்லியுடனான அந்த வீழ்ச்சிக்குப்பின் ஒரு போட்டியில் கூட வெல்லவேயில்லை. வரலாறு மாறுமென நினைத்தால் சரித்திரம் திரும்பியது.

ஒரு அணியின் வெற்றிக்கான பாதித் திரைக்கதை பவர்பிளே ஓவர்களிலேயே ஓப்பனர்களால் எழுதப்பட்டு விடும். பல சீசன்களாக கேகேஆர் தடுமாறுவதும் இப்புள்ளியில்தான். 'நிரந்தர ஓப்பனர்கள்' என்பது அவர்களது அகராதியிலேயே இருப்பதில்லை. அதேசமயம், கேகேஆரின் இன்னொரு தலைவலியாக மாறியிருப்பது கடந்த சீசனில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிய வெங்கடேஷின் தற்போதைய ஃபார்ம். 'ஓப்பனரா அல்லது ஃபினிஷரா, அவரை எங்கே குடியமர்த்தலாம?!' என்பதில் கேகேஆரின் தடுமாற்றமும் அதற்காக அவர்கள் கொடுக்கும் விலையும் அளவுக்கும் அதிகமாகவே இருந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள போட்டிகளின் பவர்பிளே ஓவர்களே அதற்கான சாட்சி.

DC v KKR

இப்போட்டியிலும் முதல் ஆறு ஓவர்களில் 29 ரன்கள் என்னும் படுமோசமான தொடக்கம் மட்டுமல்ல, 'ஓப்பனர்களது விக்கெட்டுகள்' என்னும் பேரதிர்ச்சியுமே அவர்களை வரவேற்றன. ஸ்விங்கான பந்துகளும், ஃபின்ச்சின் தடுமாற்றமும் எல்பிடபிள்யூவிலோ, ஸ்டம்புகள் சிதறியோ அவர் வெளியேறுவார் எனக் கட்டியம் கூற, அது சகாரியாவின் ஓவரில் நடந்தேறியது. டெல்லி அணிக்கான தனது அறிமுகப் போட்டியின் முதல் ஓவரிலேயே அவரது அதி அற்புத இன்ஸ்விங் ஃபின்சை வெளியேற்றியது. வழக்கம் போல் தாக்கூரின் பவர்பிளே ஓவர் காஸ்ட்லி ஆனாலும், அக்ஸர் கைகொடுத்து வெங்கடேஷையும் வெளியேற்றினார். அட்டாக்கிங் பேட்டிங்கிற்கும் அவசர பேட்டிங்கிற்கும் நூலிழையில்தான் வேற்றுமை; வெங்கடேஷ் சிக்குவதும் இங்கேதான். கடைசி சீசனில், 40-களில் இருந்த அவரது ஆவரேஜ், இந்த சீசனில் 15-க்கும் கீழ் பாதாளம் பாய இதுதான் காரணம்.

கேகேஆரின் சாபம் ஓப்பனர்களோடு முடியவில்லை, அதன் பின்னும் நீண்டது, குல்தீப்பின் ஸ்பெல் அதை நீட்டித்தது. எட்டாவது ஓவரிலேயே ஸ்ரேயாஸ் - இந்திரஜித் கூட்டணியை உடைக்க பண்ட் அவரைக் கொண்டுவர, இரண்டு பந்துகள், இரண்டு கூக்ளிக்களாகி இரட்டைத் தாக்குதல் நடத்த, இரண்டு விக்கெட்டுகளும் விழுந்தன. அறிமுகப் போட்டியை ஆடிய இந்திரஜித்தாலும் சரி, அனுபவமிக்க நரைனாலும் சரி, அதனை எதிர்கொள்ள முடியவில்லை.

அதிலிருந்து மீளுவதற்கு முன்னதாகவே, குல்தீப்பின் இன்னொரு ஓவரில் ஸ்ரேயாஸ் மற்றும் ரசல் என கேகேஆரின் இரண்டு பெரிய தலைகளும் உருண்டன. அபாயகரமான ஸ்ரேயாஸை வெளியேற்ற பண்ட் பிடித்த அந்தக் கேட்ச் இந்த சீசனின் சிறந்த கேட்ச்களில் ஒன்று. ரசலும் டக் அவுட் ஆகி ரசிகர்களை வேதனைக்கு உள்ளாக்கினார். குல்தீப்பின் இந்த இரு ஓவர்களது தாக்குதல்கள்தான் கேகேஆரை மொத்தமாக உலுக்கின. இவ்வளவுக்கும் தனக்கான நான்கு ஓவர் கோட்டாவை அவர் முழுமையாக வீசவில்லை. 3 ஓவர்களில், 4 விக்கெட்டுகள், 4.7 எக்கானமி என்ற குல்தீப் சூறாவளியின் தாக்கத்தின் வீரியத்தையே கேகேஆரால் தாங்க முடியவில்லை. வான்கடேயில் நடப்பு சீசனில் 70 சதவிகிதம் விக்கெட்டுகள் வேகத்தால் வீழந்திருந்தால்தான் என்ன, 'வல்லவனுக்கு ஸ்பின்னும் வலைதான்' என்பதை குல்தீப் நிருபித்து விட்டார்.

DC v KKR

ஸ்ரேயாஸ் 42 ரன்களில் வெளியேற, இந்த சீசனில் அதிக ரன்களை எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் டாப் 15-ல் இருக்கும் ஒரே வீரர் அவர் மட்டும்தான் என்பதே கேகேஆரின் பலவீனத்துக்கான சான்றாகியது. இருப்பினும் அவர் தவிர்த்து வேகத்தையும் சுழலையும் ஓரளவு தாக்குப்பிடித்த மற்றொரு கேகேஆர் வீரராக இப்போட்டியில் நிதீஷ் ராணா வலம் வந்தார். குல்தீப்பின் முதல் இரட்டைத் தாக்குதல் நடந்தேறிய சோதனைக் காலத்தில் உள்ளே வந்தவர், இறுதி ஓவர் வரை அவர்களது ஒரே நம்பிக்கையாகக் களத்தில் நின்றார். மிரட்டும் டெல்லியின் பௌலிங்கைத் தாக்குப் பிடித்து, 168 ஸ்ட்ரைக் ரேட்டோடு 57 ரன்களை அவர் குவித்ததால் மட்டுமே 146 என்னும் கௌரவ ஸ்கோரோடு கேகேஆர் முடித்தது.

குல்தீப் மற்றும் ராணாவை நாயகர்களாக்கி இடைவேளை விட முடியாத அளவு, நம்ப முடியாத ஒரு ஓவர் கடைசியாக முஸ்தஃபிஸுரிடம் இருந்து வந்தது. மூன்று விக்கெட்டுகளோடு கேகேஆரை மூழ்கடித்தார். ஃபுல் லெந்த்தில் முன்னேறி வந்து ரிங்குவின் மைக்ரோ கேமியோவை முடித்து வைத்த அவரது பந்து, அடுத்ததாக பேக் டு பேக் விக்கெட்டுகளை வாங்கியது. ராணாவிற்கான ஆயுதமாக அவர் வீசிய சவாலான பந்தை ராணா அடிக்க, அந்தக் கேட்சை சகாரியா தவறவிடவில்லை. அடுத்ததாக, சவுத்தியின் ஸ்டம்ப்பை முஸ்தஃபிஸுரின் அதிவேக யார்க்கர் குசலம் விசாரித்தது. முன்னதாக இரு கூக்ளிகள் அதகள தொடக்கமளித்தன என்றால், முஸ்தஃபிஸுரின் யார்க்கர் இறுதியுரை எழுதியது.

நடப்பு சீசனில் வான்கடேயின் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 170-க்கும், தங்களது அணிக்கான இலக்கான 147-க்கும் இடையேயான இடைவெளி, சில டெல்லி ரசிகர்களை 'எங்கள் கணக்கில் இரண்டு' என களிப்படையச் செய்திருக்கும். அதே நேரத்தில் நடப்பு சீசனில் முதல் நான்கு போட்டிகளில் வேண்டுமெனில் அணிகள் சேஸ் செய்திருக்கலாம். அதற்கடுத்த ஐந்து போட்டிகளிலும் அணிகள் ஸ்கோரை டிஃபெண்டே செய்திருக்கின்றன என்ற உபரித் தகவல் தெரிந்தவர்களைச் சற்றே பயம் கவ்வியிருக்கும்.
DC v KKR

அந்த அச்சத்திற்கான அடித்தளத்திற்கு வலுவூட்டும் வகையில் ஆரம்பம் அமைந்தது. புதுப்பந்து தரும் விக்கெட்டுகளின் வாடையை உமேஷின் மூலம் தொடர்ந்து உணர்ந்து வரும் கேகேஆருக்கு இப்போட்டியிலும் அது தொடர்ந்தது. ஃபுல் லெந்த்தில் சென்ற பந்து ப்ரித்வியின் பேட்டில் பட்டு எட்ஜாக, உமேஷின் மூளையும் கைகளும் போட்டி போட்டு இணையாகச் செயல்பட்டு அவரை ஆட்டமிழக்கச் செய்தன. ஆனால் களப்பலிதான் பார்த்துக் கொள்ளலாம் எனக் கடந்து போக முடியாதவாறு அடுத்த ஓவரிலேயே மிட்செல் மார்ஷின் விக்கெட்டை அறிமுக வீரரான ஹர்சிட் ராணா எடுத்தார். அதற்கு முந்தைய பந்தே பவுண்டரியானாலும் அதற்கடுத்த பந்திலேயே மீண்டு வந்தார்.

இந்த இடத்தில்தான் டெல்லி, கேகேஆர் ஸ்க்ரிப்டில் இருந்த தவற்றை தாங்களும் திரும்ப எழுதுவதைத் தவிர்த்தது. பார்ட்னர்ஷிப்கள்தான் அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழும் சமயத்தில் அணிகள் மூச்சு விட்டு நிதானப்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தைத் தரும். அதை உணர்ந்து வார்னர் - லலித் யாதவ் நிதானத்தை பிரதானமாக்கினர். 48 பந்துகள் நீடித்த இக்கூட்டணி, 65 ரன்களைச் சேர்த்ததோடு கப்பல் மூழ்குவதைத் தடுத்து நங்கூரமிட்டது.

இது வேலைக்காகாது என உமேஷை ஸ்ரேயாஸ் கொண்டுவர, வார்னரது கதையை உமேஷின் பவுன்சர் முடிக்க, பார்ட்னர்ஷிப் உடைந்தது. 26 பந்துகளில் 42 ரன்களோடு வெளுத்து வாங்கியிருந்தார் வார்னர். செட்டில் ஆன இன்னொரு பேட்ஸ்மேனையும் நரைனைக் கொண்டு வந்து கேகேஆர் அனுப்பியது. உமேஷுக்கு இன்னுமொரு ஓவரும் கொடுக்கப்பட, ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து பேக் ஆஃப் தி லெந்த்தில் வீசப்பட்ட பந்தில் பண்ட்டின் விக்கெட்டும் பறிபோனது. இந்திய டி20 அணியின் நிரந்தர வீரர்களில் சிலர், இந்த ஐபிஎல்லில் சோபிக்காமல் சொதப்புவது ரசிகர்களிடையே சற்றே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

DC v KKR

அடுத்ததாக பவலுடன் இணைந்து அக்ஸர் படேல் தனது ஆல் ரவுண்டிங் திறமையை நிருபித்துக் கொண்டிருக்க, 15-வது ஓவரில் தேவையில்லாத அவரது ரன் அவுட் திடீர் திருப்புமுனையானது. எனினும் அது வெறும் வளைவே டெத் எண்டல்ல என்பதனை பவல் - தாக்கூர் கூட்டணியும், 30 பந்துகளில் வெறும் 37 ரன்களே தேவை என்பதும் நிருபித்தன. மூழ்க இருந்த டெல்லியை நீர்மூழ்கிக் கப்பலாக மாற்றி இந்த பார்ட்னர்ஷிப்கள் ஏற்கெனவே கரைசேர்த்திருந்தன.

இறுதியாக, ஸ்ரேயாஸின் அட்டகாசமான கேப்டன்ஷிப் நகர்வுகளோ, 19-வது ஓவரில் பந்து வீசும் அவரது துணிகர முடிவோ... எதுவுமே காப்பாற்றவில்லை. போன போட்டியில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்த பவல், முழுமையான ஃபினிஷர் அரிதாரத்தை மீண்டும் பூசி, சிக்ஸரோடு இலக்கை எட்டினார், பவல். ஆறு பந்துகள் மீதமிருக்க, நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று புள்ளிப் பட்டியலில் ஓரடி முன்னேறியது டெல்லி.

பவர்பிளே பற்றாக்குறைகள், பேட்டிங் பரிதாபங்கள், எட்டுப் பேர் பந்து வீசியும் தீராத அவர்களது பந்து வீச்சு பலவீனம் என எல்லாமே சேர்ந்து மறுபடியும் ஒரு தோல்வியை கொல்கத்தாவின் கணக்கில் சேர்த்து விட்டது‌. தொடர்ச்சியான தோல்விகள் அவர்களை பலவீனப்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு தோல்வியும் தொடரை விட்டு அவர்களை வெளியேற்றிக் கொண்டிருக்கும் அடிகள் என்பதே உண்மை.

DC v KKR
டெல்லியைப் பொறுத்தவரை குறைபாடுகள் அங்கங்கே விரவிக் கிடந்தாலும், போராடிக் கிடைத்திருந்தாலும் இந்த வெற்றி அடுத்தடுத்த மோதல்களுக்குத் தேவைப்படும் ஆற்றலையும் நம்பிக்கையையும் அவர்களுக்குள் துளிர்விட வைத்துள்ளது.


source https://sports.vikatan.com/ipl/ipl-2022-delhi-beats-kolkata-with-kuldeep-warner-and-powell

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக