Ad

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

2024 தேர்தல் பிளான்: காங்கிரஸ் கூட்டத்தில் சோனியாவுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!

அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் அண்மையில், ``2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு இன்னும்கூட வாய்ப்பிருக்கிறது. நடந்த முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2024 தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது” எனக் கூறியது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியிருந்தது. அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை பிரசாந்த் கிஷோர் நேரில் சந்தித்துப் பேசியதையடுத்து, பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையப்போவதாகச் செய்திகள் பரவின.

சோனியா காந்தி

இந்த நிலையில், காங்கிரஸின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பிரசாந்த் கிஷோர் கலந்துகொண்டார். காங்கிரஸின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் உட்பட பலரும் பங்குபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் நான்கு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், 2024-ல் நடைபெறவிருக்கும் தேர்தலில் பாஜக-வை எவ்வாறு எதிர்கொள்வது, இது தொடர்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதைப் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ``பிரசாந்த் கிஷோர், 2024-ல் நடைபெறவிருக்கும் தேர்தல் குறித்துதான் சோனியா காந்தியிடம் பேசியிருக்கிறார். பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகம் குறித்து, சோனியா காந்தியால் அமைக்கப்பட்ட குழு ஒன்று முழுமையாக ஆய்வுசெய்து, அதன் அறிக்கையை ஒரு வாரத்தில் சோனியா காந்தியிடம் சமர்ப்பிக்கும். அதன் பிறகுதான், 2024 தேர்தலில் காங்கிரஸுக்கு, பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூகங்களை வகுப்பாரா என்று முடிவு செய்யப்படும்" எனக் கூறினார். இந்தக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோரிடம் காங்கிரஸில் இணைவது குறித்துப் பேசப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.



source https://www.vikatan.com/government-and-politics/politics/political-strategist-prashant-kishor-attend-congress-meeting-and-discuss-about-2024-election-with-sonia-gandhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக