Ad

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

GT vs CSK: ரஷித் ஆடிய கேப்டன்ஸ் கேமியோ; மேட்சை முடித்த மில்லர் தி கில்லர்... போராடித் தோற்ற சென்னை!

புதிய டீம், புதிய கேப்டன் எனக் களம் கண்ட சிஎஸ்கே முதல் நான்கு போட்டிகளைத் தோற்றதும் `இது என்ன 2020 வாடை வருதே' எனப் பதறினர் சென்னையன்ஸ். பிறகு போராடி ஐந்தாவது போட்டியை வென்றது சென்னை. `ஒளி வந்துவிட்டது' எனச் சென்னை ரசிகர்கள் குஷியாக, ஆறாவது போட்டியில் அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தை வாலன்டியராக ஊதி அணைத்திருக்கிறார் கில்லர் மில்லர். `ஏன் இந்த ரத்த வெறி' என டேபிள் டாப்பர்ஸ் குஜராத்தை, கீழிருந்து இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை கேள்வி கேட்டு கொண்டிருக்கிறது.

ஐபிஎல் 2022-ன் 29வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸும், சென்னை சூப்பர் கிங்ஸும் களம் கண்டன. ஏற்கெனவே பிளேயிங் லெவனில் மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே மாற்றம் செய்யும் சென்னை, இந்தத் தடவை கடைசி போட்டியையும் வென்றிருப்பதால், அதே ஆட்டக்காரர்கள்தான் என்றது. ஹர்திக் பாண்டியாவுக்கு நூறு சதவிகித பிட்னஸ் இல்லாததால், ரஷீத் கான் தலைமையேற்றார். இதன் மூலம், ஒரு ஐபிஎல் டீமை வழிநடத்தும் முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். ஹர்திக்கிற்குப் பதில் அல்சாரி ஜோசப், மேத்யூ வேடுக்கு பதில் சாஹா என இரண்டு மாற்றங்கள். பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட சாய் கிஷோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்குப் பதில் மேட்ச் வின்னர் விஜய் சங்கரே அணியில் நீடித்தார். ஆம், மேட்ச் வின்னர், எதிர் அணிகளுக்கு!

GT vs CSK

டாஸ் வென்ற புதிய கேப்டன் ரஷித், ஐபிஎல் 2022 சம்பிரதாயப்படி சேஸிங் என்றார். பூனே மைதானத்தில் பெரிய அளவு மஞ்சள் சட்டைக்காரர்களையும் பார்க்க முடிந்தது. ருத்துராஜ் கெய்க்வாட்டும், ராபின் உத்தப்பாவும் வாள் தூக்கி வர, ஷமி வெடிகுண்டுடன் முதல் ஓவர் வீச வந்தார். முதல் ஓவரில் 3 ரன்கள், அடுத்த யாஷ் தயாள் ஓவரில் 4 ரன்கள் என ஆரம்பத்திலேயே மேட்ச் சென்னைக்கு பிரஷர் குக்கர் கணக்காகப் போக, உத்தப்பா ஷமியின் இரண்டாவது ஓவர், இரண்டாவது பந்தை பேடில் வாங்கினார். எல்பிடபுள்யூ கொடுக்காததால், ரிவ்யூ சென்றனர் டைட்டன்ஸ். 'கலாகுலாஹீட்டரை' எல்லாம் தட்டிக் கணக்குப் பார்த்து 'சாரி அவுட்தான், கிளம்புங்க' என்றார் தேர்ட் அம்பயர்.

இதுவரை சில போட்டிகளில் ருத்து அவுட்டாகி, உத்தப்பா ஆடிதான் பார்த்திருக்கிறோம், ஆனால், இந்த முறை ரிவர்ஸாக ருத்து ஆடியே ஆகவேண்டிய நிலைமை. அந்த எதிர்பார்ப்பைச் சரியாகப் பூர்த்தி செய்தார் அந்த இளம் வீரர்.

பிரஷரைத் தன் பக்கம் அண்டவிடாமல், சிக்ஸர், பவுண்டரி என பவர்பிளேவுக்குள்ளாகவே அடித்து, பெரும்பாலான ஸ்ட்ரைக்கையும் அவரே வைத்திருந்தார். ஆனால், அதுவே வினையாகிப் போனது. அணிக்குள் புதிதாக வந்த அல்சாரி ஜோசப். பவர்பிளேவின் கடைசி ஓவரை வீச, அதன் இரண்டாவது பந்தில் டிரைவ் ஆட ஆசைப்பட்டு, ஸ்டம்பை இழந்தார் மொயின் அலி. அவர் பிடித்தது மொத்தமே 3 பந்துகள்தான். பவர்பிளே கடைசி பந்தில் ருத்து மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்தாலும் சென்னை 6 ஓவர் முடிவில் 39 ரன்களை மட்டுமே குவித்து 2 விக்கெட்களை இழந்திருந்தது.

GT vs CSK

பின்னர் ருத்துவும், ராயுடுவும் 'RRR' ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் கணக்காக ஒரு பார்ட்னர்ஷிப்பை போட்டனர். 10 ஓவர் வரை அமைதி காத்தவர்கள், பின்னர் ரன்ரேட்டை அதிகப்படுத்தும் பணியைக் கையில் எடுத்துக் கொண்டனர். அதிலும் ருத்து டீப் ஸ்கொயர், லாங் ஆஃப் எனப் பல திசைகளில் பவுண்டரி லைனை கிளியர் செய்து சிக்ஸர்கள் அடித்தது கண்கொள்ளக் காட்சியாக அமைந்தது.

அதிரடி பவர் ஹிட்டர்கள் சிக்ஸர் அடிப்பது மாஸ் மசாலா படத்தைப் பார்ப்பது போல என்றால், ருத்து போன்ற டெக்ஸ்ட்புக் பேட்ஸ்மென்கள் சிக்ஸர்கள் அடிப்பது ஒரு கிளாஸான் ஃபீல்குட் சினிமாவைப் பார்ப்பது போன்றது. எது எப்படியோ, இரண்டுமே என்டர்டெயின்மென்ட்தானே!

14வது ஓவர் வரை நீடித்த இந்தக் கூட்டணி, 124 ரன்கள் என்று சென்னையின் ஸ்கோர்போர்டை வாசிக்க வைத்தது. இந்தக் கூட்டணியை 15வது ஓவரில் பிரித்தார் ஜோசப். 31 பந்துகளில் 46 ரன்கள் அடித்திருந்த ராயுடு, விஜய் ஷங்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஏனோ அதன்பிறகு ருத்துவின் பேட்டிங் இன்ஜினும் செல்ஃப் எடுக்கவில்லை. 48 பந்துகளில் 73 ரன்கள் அடித்த நிலையில் யாஷ் தயாள் பந்தில் மனோகரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால், அவர் அடித்த 6 அட்டகாச சிக்ஸர்கள் ரீப்ளே போடாமலே நம் மனத்துக்குள் ஓடிக்கொண்டிருந்தன.

GT vs CSK

அதன்பிறகுதான் ஒரு சர்ச்சை கிளம்பியது. 16வது ஓவரில் ஷமி வீசிய பந்து, துபேவின் பேட்டில் இன்சைட் எட்ஜாகி பவுண்டரிக்குச் சென்றுவிட்டது. ஆனால், குஜராத் எல்பிடபுள்யூ-வுக்கு அப்பீல் செய்ய, ஃபீல்டு அம்பயரும் அவுட் கொடுத்துவிட்டார். ரிவ்யூ சென்ற துபே, அது இன்சைட் எட்ஜ்தான் என்பதை உறுதிசெய்து தன் விக்கெட்டைக் காத்தார். ஆனால், அம்பயர் அவுட் கொடுத்த பந்து என்பதால் அதில் சென்ற பவுண்டரி கணக்கில் எடுக்கப்படவில்லை. விதிமுறைப்படி அது டெட் பாலாகி போனது. இது வழக்கமான நடைமுறைதான் என்றாலும் இந்த முறை இந்தச் சர்ச்சைக்குரிய விதி பேசுபொருளானது.

எது எப்படியோ, பொதுவாகவே சிஎஸ்கே, இன்னிங்ஸ் முழுக்க ஒன்டே மேட்ச் கணக்காக ஆடிவிட்டு, 16வது ஓவரிலிருந்துதான் கியரையே மாற்றும். அதிரடியைத் தொடங்கும். அதில் ரன்கள் வந்தால் உண்டு. அரிதிலும் அரிதாக இந்த முறை மிடில் ஓவர்களில் மிரட்டிய சென்னை, டெத் ஓவர்களில் அடிப்பதற்கான இன்டென்ட்டைக் காட்டவேயில்லை. அதிலும் 17 மற்றும் 19வது ஓவர்களில் எல்லாம் ஆறு ரன்கள்தான் வந்திருந்தன. கடைசி ஓவரில் துபே ஒரு பவுண்டரியும், கேப்டன் ஜடேஜா பேக் டு பேக் சிக்ஸர்களும் அடிக்க, அணியின் ஸ்கோர் 169 ஆனது. 170 ரன்கள் சுலபமான டார்கெட்தான் என்றாலும் முரட்டு ஃபார்மில் இருக்கும் ஹர்திக் பாண்டியா இல்லாததால், சிஎஸ்கே பௌலர்கள் ஃபார்முக்குத் திரும்புவார்கள் என நம்பப்பட்டது.

GT vs CSK

கில் தனது புதிய பார்ட்னரான சாஹாவுடன் களமிறங்கினார். சென்னை தீக்ஷனாவை முதல் ஓவர் வீச வைக்கும் என நினைக்க, ஜடேஜா ஹேட் அதர் ஐடியாஸ். முகேஷ் சௌத்ரி பந்துவீச வந்தார். முதல் ஓவரின் கடைசி பந்தில் கில் கோல்டன் டக். லெந்த் பந்தை நடந்துவந்து அடித்து பாயின்ட்டில் நின்ற உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து அப்படியே பெவிலியன் நோக்கியும் நடக்கத் தொடங்கினார் கில்.

அப்ப அடுத்த ஓவரும் அப்ப ஃபாஸ்ட் பௌலரா என எல்லோரும் எதிர்பார்க்க, மீண்டும் ஜடேஜா 'அதர் ஐடியாஸ்' என தீக்ஷனாவை வீச வைத்தார். மூன்றாவது பந்தில் 'மேட்ச் வின்னர்' விஜய் ஷங்கர் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரும் டக் அவுட்.

3டி பிளேயர் பௌலிங்கும் போடாமல், எந்தத் துறையிலும் சோபிக்காமல் கடனுக்கு ஆடி வருவது குஜராத் ரசிகர்களுக்கே நிச்சயம் எரிச்சலைக் கொடுத்திருக்கும். அடுத்த மேட்ச்சாவது சாய் கிஷோர் வருகிறாரா பார்ப்போம்.

தீக்ஷனா தான் வீசிய அடுத்த ஓவரிலேயே மனோகரின் விக்கெட்டையும் தூக்கினார். ஸ்கோர் நான்கு ஓவர்களுக்கு 16/3. சென்னை ரசிகர்கள், குஜராத் எத்தனை ஓவரில் ஆல் அவுட்டானால், நெட் ரன்ரேட் எக்கச்சக்கமாக எகிறும் என்றெல்லாம் கணக்குப் போடத் தொடங்கினர். ஆனால், அவர்களுக்குப் போகியே கிடையாது என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை. பவர்பிளே முடிவில் குஜராத் 37/3. களத்திற்கு வந்திருந்த மில்லர் வார்ம் அப் செய்யத் தொடங்கி இருந்தார்.

GT vs CSK

அப்போதுதான் சென்னை சாஹாவைக் கவனித்தது. மறுமுனையில் பேட்ஸ்மேன்கள் மாறிக்கொண்டே இருக்க, சாஹா மட்டும் ஓப்பனிங் இறங்கியவர் 18 பந்துகள் பிடித்து 11 ரன்கள் மட்டுமே அடித்து ஒற்றை ஆளாக வெள்ளையடித்துக் கொண்டிருந்தார். ஜடேஜா கட்டிய கட்டத்தில், லெந்த் பாலை டீப் ஸ்கொயர் லெக்கிடம் கேட்ச் கொடுத்து அவரும் வெளியேறினார்.

ராகுல் திவேதியா களத்துக்கு வர, `இருங்கடா எனக்கும் பயமாதான் இருக்கு' என ஜெர்க்காயினர் சென்னையன்ஸ். ஆனால், அதிரடி மோடுக்குச் சென்றது மில்லர்தான். அவர் டார்கெட் செய்தது கேப்டன் ஜடேஜாவை! 12வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 19 ரன்கள் வந்தன. `அடேங்கப்பா, முத்துப் பாண்டியவே அடிச்சுட்டானே, அசலூர்க்காரன்' என பம்மினர் சென்னை ரசிகர்கள். 28 பந்துகளில் அவரது அரைசதமும் எட்டிப் பார்த்தது.

இது வேலைக்கு ஆகாது என டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பிராவோ பந்தை வாங்கினார். திவேதியாவால் அவரின் ஸ்லோ பால்களைக் கணிக்கவே முடியவில்லை. மூன்று பந்துகள் டாட்டாக, பிரஷர் ஏற, 4வது பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அந்த அதிரடி மன்னன். பிராவோ வீசிய அந்த 13வது ஓவர் விக்கெட் மெய்டன்! குஜராத் ரசிகர்கள் உறைந்து போயிருந்தனர்.

GT vs CSK

பிராவோ இப்படி பிரஷர் ஏற்றினால், மற்றொரு புறம் ஜோர்டன் 'நான் மேட்சை பேலன்ஸ் பண்றேன்' என தன் ஓவரில் 12 ரன்களைக் கொடுத்தார். உபயம் - மில்லர். ஆனால், பிராவோ வீசிய 17வது ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே வர, தேவைப்படும் ரன்ரேட் 16-ஐ தாண்டியது. 4 பாயின்ட் கன்ஃபார்ம் என சென்னை ரசிகர்கள் கூத்தாடினர். ஆனாலும் மில்லர் இருப்பது சற்றே திகிலைக் கிளப்பியது.

மறுமுனையில் பொறுமை காத்துக் கொண்டிருந்த கேப்டன் ரஷீத் கான், 'ஹலோ, மில்லருக்கு மட்டும்தான் பயப்படுவீங்களா?' என அவரும் கேப்டனுக்கான கேமியோவை ஆடத் தொடங்கினார். ஜோர்டன் வீசிய 18வது ஓவர் மொத்தமாகச் சென்னையிடமிருந்து போட்டியைப் பறித்தது. மூன்று சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என தன் இஷ்டத்துக்கு அடித்தார் ரஷித். டீப் மிட்விக்கெட், பாயின்ட்டின் மேல் என எல்லா பக்கமும் டீல் செய்தார். போதாக்குறைக்கு பிராவோவின் அடுத்த ஓவரிலும் பவுண்டரி அடித்து அவரின் ஈகோவைச் சீண்டினார்.

GT vs CSK
8 பந்துகளில் 13 ரன்கள்தான் தேவை என்னும்போது, பிராவோ மீண்டும் கேமில் ட்விஸ்ட் ஏற்படுத்தினார். 21 பந்துகளில் 40 ரன்கள் அடித்திருந்த ரஷித், மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த அல்சாரி ஜோசப்பும் முதல் பாலே சிக்ஸர் அடிக்கிறேன் என லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

6 பந்துகளில் 13 ரன்கள் தேவை. ஏற்கெனவே நிறைய ரன்களைக் கொடுத்துச் சொதப்பிய ஜோர்டனுக்குக் கடைசி ஓவரை போடும் வாய்ப்பு. 7 பேர் வரை சுற்றி நின்று அவருக்கு அட்வைஸ் வழங்கினர். முகேஷ் சௌத்ரி, ஜடேஜா என இருவருக்கும் ஒவ்வொரு ஓவர் கையிலிருந்தது. அவர்கள் சிறப்பாகவும் பந்து வீசியிருந்தனர். ஆனால், ஜடேஜாதான் அதர் ஐடியாஸ் வைத்திருப்பாவர் ஆயிற்றே!

GT vs CSK

இருந்தபோதும் சென்னை மேட்சுக்குள் மீண்டும் வந்துவிட்டதாகவே தோன்றியது. ஆனால் மில்லர் 'என்னைத் தாண்டி தொட்றா பார்க்கலாம்' என பேட்டை எடுத்தார். முதல் இரண்டு பந்துகள் டாட் பால். அல்லது அப்படி ஆக்கப்பட்டன. ஏனென்றால் மில்லர் சிங்கிள் எடுக்கவில்லை. ஸ்ட்ரைக்கிலிருந்து மேட்சை முடிக்கவே நினைத்தார். மூன்றாவது பந்தில் ஒரு சிக்ஸர். அதன் ரீப்ளே முடிவதற்குள் அடுத்த பந்தில் ஷார்ட் தேர்ட் மேனில் கேட்ச். சென்னை ரசிகர்கள் உற்சாகமாக, ஆனால், அது ஹைட் காரணமாக நோ பால் ஆனது. பின்னர் ஃப்ரீஹிட்டும் ஆனது.

ஜாலியாக அந்தப் பந்தை பவுண்டரிக்குத் தட்ட, 5வது பந்தில் இரண்டு ரன்களை ஓடி எடுக்க, வெற்றி இலக்கை ஒரு பால் மீதமிருக்கும்போதே எட்டவைத்தார் மில்லர் தி கில்லர்! இந்த இரண்டு ரன்களை ஓடி எடுக்கும்போதும் ரன் அவுட் வாய்ப்பு வர, ஜோர்டன் முன்யோசனையின்றி ஸ்டம்புகளுக்கு முன்னர் நின்று பாலை கலெக்ட் செய்து, ஸ்டம்புகளைப் பெயர்த்தார். ஒருவேளை அவர் பின்னால் நின்றிருந்தால், அது ரன் அவுட்டாகி இருக்கக்கூடும். மேட்ச் இன்னமும் சுவாரஸ்யம் ஆகியிருக்கும். எது எப்படியோ, குஜராத் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று டேபிள் டாப்பராகவே இருக்கிறது. மில்லர் ஆட்டநாயகன் ஆனார்.

GT vs CSK
சென்னை அணியைப் பொறுத்தவரை, ருத்துராஜ், முகேஷ் சௌத்ரி, அம்பதி ராயுடு, ஜடேஜா, பிராவோ ஆகியோர் ஜொலித்திருப்பது ஆரோக்கியமான விஷயம். குறிப்பாக, அவர்கள் போராடியே தோற்றுள்ளனர். சென்னை ரசிகர்களைப் பொறுத்தவரை, `நானாவது சைக்கிள்ல லைட் இல்லாம வர்றேன், பின்னாடி ஒருத்தன் சைக்கிளே இல்லாம வர்றான்' என மும்பையைக் கைகாட்டி ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.


source https://sports.vikatan.com/ipl/ipl-2022-gujarat-titans-beats-chennai-super-kings-in-a-last-over-thriller

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக