Ad

திங்கள், 11 ஏப்ரல், 2022

நச்சு நீக்கம் முதல் எடை குறைப்புவரை - பவர்ஃபுல் அறுகம்புல்! - மூலிகை ரகசியம் - 2

வானிலிருந்து பொழியும் மழையை பஞ்சுபோல செயல்பட்டு, ஈர்த்து சேமித்துவைத்து ஆறாக உருமாற்றும் பெரும்பணி புல்வெளிகளுக்கு உண்டு. பல புல் ரகங்கள் வீடுகளின் கூரையாகவும் உருமாறி பாதுகாப்பளிப்பதுண்டு. மருந்தாக உருமாற்றமடைந்து நோய்களைத் தகர்க்கும் ஆபத்பாந்தவனாகவும் புற்கள் இருப்பதுண்டு. பல பெருமைகளைக் கொண்ட புல் ரகத்தில் அறுகம் புல் குறித்து புல்தரையில் சம்மணமிட்டு அமர்ந்து ஆசுவாசமாகப் பேசுவோமா?!

சிறிய புல் தான்! ஆனால் தனக்குள் பல அதிசயங்களைச் சேமித்து வைத்திருக்கும் பசும்புல் இது!

மழை லேசாக எட்டிப்பார்த்தால் போதும், மறுநாள் எங்கு பார்த்தாலும் ’தளதளவென’ அழகாய் முளைத்திருக்கும் அறுகம் புற்கள். நம்ம ’யானை சாமி’ விநாயகருக்குப் படைக்கப்படும் பொருள்களான எருக்கன் பூ, கொழுக்கட்டை, சுவையான சுண்டலோடு சேர்த்து, அறுகம் புல்லும் தவறாமல் இடம் பிடித்துவிடும். அதிகளவு மருத்துவ குணம் இருப்பதாலோ என்னவோ, அறுகம் புல்லை கடவுளுக்கே பரிசளித்தனர் போலும்!

அறுகம் புல்லானது உடலில் தங்கிய நச்சுகளை நீக்குவது, சரும நோய்களை அழிப்பது, மலக்கட்டை சரிசெய்வது எனப் பல மருத்துவ குணங்களைக் கொண்டது. அறுகம் புல்லை ஆங்கிலத்தில் ‘Bermuda grass’ என்று அழைக்கிறார்கள். அறுகு, மூதண்டம், தூர்வை, மேகாரி, பதம், அறுகை போன்றவை அறுகம்புல்லின் வேறு பெயர்கள். நோய்களை அறுப்பதால், இதற்கு ‘அறுகு’ என்ற பெயர் உருவாகியிருக்கலாம்.

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

நஞ்சு நீக்கும் அறுகம் புல் ஜூஸ்

உடலில் சேர்ந்த அசுத்தங்களை வெளியேற்ற அறுகம் புல் சிறந்த மருந்து. அறுகம் புல்லை இடித்து சாறு பிழிந்து, நீர் சேர்த்து சுவைக்கு சிறிது பனங்கற்கண்டு கூட்டி தினமும் அரை டம்ளர் குடித்து வர, உங்கள் உடம்பில் உள்ள கெட்ட நச்சுப் பொருள்கள் எல்லாம் ’பூனையைக் கண்ட எலியைப் போல’ திரும்பிப் பார்க்காமல் தெறித்து ஓடும். ஆடு, மாடுகள் எல்லாம் புல் வெளிகளில் பசுமையான புற்களை உற்சாகமாக மேய்ந்து விட்டு ஆரோக்கியமாக இருப்பதோடு, நமக்காக சத்தான பாலையும் உற்சாகமாக வழங்குகின்றன. விலங்கினங்களின் குணாதிசயங்களையும் கூர்ந்து கவனியுங்கள். ஒவ்வொரு விலங்கும் உங்களுக்கு ஒரு மருத்துவ செய்தியைச் சொல்லும்!

சரும நோயைப் போக்கும் அறுகன்

சருமத்தில் ஏற்படும் சொறி, சிரங்கு போன்ற நோய்களைப் போக்க, அறுகம்புல் சாற்றைக் குடித்து வரலாம். அதுமட்டுமில்லாமல், அறுகம் புல்லை மஞ்சளோடு சேர்த்து அரைத்து நோய் உள்ள இடங்களில் தொடர்ந்து பூசி வர, சொறியும் சிரங்கும் நம் கண்ணுக்குத் தெரியாத இடத்திற்குச் சென்று மறைந்துகொள்ளும் அறுகம் புல், சரும நோய்களுக்கான சிறந்த மருந்து!

நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகள், தங்கள் உடம்பில் சிறிதாக அடிபட்டு ரத்தம் வடிந்தால், உடனடியாக அறுகம் புல்லைக் கசக்கித் தேய்ப்பதுண்டு! அறுகம் புல்லிற்கு ரத்தப்பெருக்கைத் தடுக்கும் தன்மை (Styptic) இருப்பதால், அடிபட்டு ரத்தம் வடியும்போது, உடனடியாக அறுகம் புல்லினை கசக்கித் தேய்க்கும் வழக்கம் கிராமங்களில் இப்போதும் உண்டு. இனி கிராமங்களுக்குச் செல்லும்போது, அங்கு நடக்கும் மூலிகை சார்ந்த வாழ்வியல் விஷயங்களை மனதில் படம் பிடித்துக்கொள்ளுங்கள்!

அருகம் புல்

விஷங்களை முறிக்கும் அறுகன் குடிநீர்

விஷங்களைக்கூட முறிக்கும் செய்கை நம் அறுகம் புல்லிற்கு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! ஆமாம்... ஒரு கைப்பிடி அறுகம்புல், மூன்று மிளகு, ஒரு வெற்றிலை இவற்றை நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, குடிநீராகக் காய்ச்சி வடிகட்டி அருந்த, விஷங்களின் தாக்கத்தைக் குறைப்பதோடு, நம் ரத்தத்தையும் சுத்தி செய்யும். மலைப்பகுதியில் வசிக்கும் சில இன மக்கள், பூச்சி, தேள் போன்ற விஷ உயிரினங்கள் கடிக்கும் போது, மேற்சொன்ன அறுகன் குடிநீரையே அதிகம் பயன்படுத்துகின்றனர். மாதம் ஒருமுறையாவது இந்த அறுகன் குடிநீரை எடுத்துக்கொள்ளுங்கள். படையப்பா படத்தில் ரஜினி ஒரு டயலாக் சொல்வார்… ’இந்த உடம்புல எந்த பாம்போட விஷமும் ஏறாது…’ என்று... ஒருவேளை ரஜினி இந்த அறுகன் குடிநீரைத் தான் அதிகமாகப் பயன்படுத்தி இருப்பாரோ என்னவோ!

பூச்சிகளின் நடனத்தை நிறுத்த...

உங்கள் வயிற்றுக்குள் குறுகுறுவென நடனமாடும் பூச்சிகளையும் புழுக்களையும் அழித்து, வயிறு மற்றும் குடல் பகுதியினை சுத்தம் செய்யவும் அறுகன் குடிநீர் பயன்படும். நாய்களுக்கும் பூனைகளுக்கும் செரிமானம் தொடர்பான பிரச்னைகள் வரும் போது, அருகம் புல்லை சாப்பிட்டு சரி செய்து கொள்வதாக ஒரு செய்தி உண்டு. இனி நாய்கள் மற்றும் பூனைகளின் செயல்பாடுகளைக் கூர்மையாக கவனித்துப் பாருங்கள்... இயற்கையின் விந்தை உங்களுக்கு பல ஆச்சர்யங்களைக் கொடுக்கும்.

அம்மை நோய் வந்து குணமான பின்பு தலைக்கு நீர் ஊற்றும் பழக்கம் கிராமங்களில் உண்டு. அந்த நீரில் அறுகம் புல்லையும், வேப்ப இலைகளையும் போட்டுக் காய்ச்சித் தலைக்குக் குளிப்பதால், அம்மை நோய் மீண்டும் வராது என்பது கிராமத்து மருத்துவ உத்தி.

அறுகம்புல்

அறுகன் எண்ணெய்

அறுகம் புல்லை வைத்து சரும நோய்களுக்கு ஓர் எண்ணெய் தயாரிக்கலாமா?!

அறுகம்புல் சாறு 1/2 லிட்டரும் தேங்காய் எண்ணெய் 1/4 லிட்டரும் எடுத்துக்கொண்டு, அதில் மிளகுத் தூள் 15 கிராம் சேர்த்து சிறுதீயில் காய்ச்சி கரகரப்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ளவும். இந்த ‘அருகன் எண்ணெய்’ அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான மருந்து. சருமத்தில் தடிப்பு, அரிப்பு, பொடுகுத் தொல்லைக்குத் தடவ பலனளிக்கும். ’எண்ணெயைக் காய்ச்சும்போது கரகரப்பு பதம் என்று சொல்லி இருக்கிறீர்கள்... அதென்ன கரகரப்பு பதம்…’ என்ற உங்கள் கேள்விக்கான பதிலைச் சொல்கிறேன் அன்பர்களே! சித்த மருத்துவத்தின் மருந்து தயாரிப்பு உத்தி அது. ஒவ்வொரு வகையான எண்ணெயைக் காய்ச்சும் போதும், அதிலிருக்கும் பொருள்களின் தன்மை எந்தப் பத்ததில் இருந்தால் எண்ணெயை அடுப்பிலிருந்து இறக்கலாம் என்பதற்கான முக்கியமான மருந்து தயாரிப்பு குறிப்பு அது!

உடல் எடை குறைக்கும் அறுகம் புல்

அறுகம் புல் சாற்றினை அருந்துவதால் சர்க்கரை நோயினை கட்டுப்படுத்தலாம் மற்றும் உடல் எடையையும் சீராகப் பராமரிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இனிமேல் உடல் எடை அதிகரித்து இருப்பவர்களைப் பார்த்தால், அறுகம் புல் சாற்றை குடிக்கச் சொல்லி அவர்களை ஊக்கப்படுத்துங்கள். கூடவே நல்ல உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் இருந்தால் எளிதாக உடல் எடையைக் குறைத்துவிடலாம் என்ற சூட்சுமத்தை அவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

புல் மட்டுமன்றி இதன் சிறிய கிழங்கை பொடி செய்து, சம அளவு நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர, சரும நோய்கள் குணமாகும். ’அறுகம் புல் தெரியும்… அறுகன் கிழங்கா…’ என்று யோசிப்பவர்கள், அறுகம் புல்லின் வேர்ப்பகுதியை மறக்காமல் பாருங்கள்! உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும். அறுகம் புல்லைக் காயவைத்து பொடி செய்து, நாம் சாப்பிடும் தோசை, இட்லி, அடை போன்ற உணவு வகைகளில் கலந்து ருசியாகச் சாப்பிடலாம்.

Weight loss (Representational Image)

ஆரோக்கியமாக வாழ...

அறுகம்புல் ஊறிய நீரில், சம அளவு பால் சேர்த்து பருக, கண் எரிச்சல், உடல் எரிச்சல் குறையும். குடல் இயக்கங்களை முறைப்படுத்தி, மலம் நன்றாக வெளியேற அறுகன் சாறு உதவுகிறது. இதிலுள்ள ஒருவகையான புரதக் கூறு, நம் உடலின் நோய் எதிர்க்கும் திறனை அதிகரிப்பதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், அழற்சி (Anti-arthritic activity) ஆகியவற்றை அறுகம்புல் சாறு குறைப்பதாகவும் ஆய்வு சொல்கிறது. வெகுசமீபத்திய ஆய்வில், விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தின் இயக்கத்திற்கு (Sperm motility) தேவையான ஃப்ரக்டோஸ் அளவை அதிகரிப்பதற்கும் அறுகன்சாறு பயன்படுவது தெரியவருகிறது.

’அறுகம் புல்லிற்கு இத்தனை மருத்துவ குணங்களா!’ என்று நீங்கள் ஆச்சர்யப்படுவது தெரிகிறது. நம் உடலைக் கெடுக்கும் ’கூல் - டிரிங்ஸிற்கு’ டாடா சொல்லிவிட்டு, தினமும் காலையில் அறுகன் ஜூஸ் குடித்துப் பாருங்கள், நோய்த் தொல்லை இல்லாமல், நோயினை எதிர்க்கும் திறனோடு ஆரோக்கியமாக வாழலாம்!

மழைத் துளிகளையும் பனித் துளிகளையும் அருகில் பார்த்து ரசிக்க ஆசையா? விடியற் காலையில் எழுந்து அறுகம் புற்களின் நுனியைப் பாருங்கள்… பனித்துளிகளும் மழைத் துளிகளும் அறுகம் புற்களின் நுனியில் நின்றுக்கொண்டு உங்களைப் பார்த்து அழகாகக் கண்களைச் சிமிட்டும். புல்லோடு சேர்த்து பூவுலகையும் கொஞ்சம் ரசிப்போமா!

அறுகம்புல் அளிக்கும் பலன்கள்!

இலக்கியங்களில்:

’பழங்கன்றுகறித்த பயம்பு அமல் அறுகை (அறுகன்)…’ என்று அறுகம் புல்லைப் பற்றி அகநானூறு குறிப்பிடுகிறது. கன்றுகளுக்கான உணவாகவும், மழை பெய்ததும் உயிர்ப்பெறும் அதன் தன்மை குறித்தும், சர்வ சாதாரணமாக அனைத்து இடங்களிலும் முளைத்துக் கிடக்கும் அதன் வளரியல்பு குறித்தும் சங்க இலக்கியப் பாடல்கள் பதிவு செய்கின்றன.

தாவரவியல் பெயர்:

Cynodon dactylon

குடும்பம்:

Poaceae

கண்டறிதல்:

பல்லாண்டு வாழும் புல் வகையினம்.. கூர்மை மழுங்கிய இலை நுனியைக் கொண்டிருக்கும். குறுகலான இலையின் மேல் ரோம வளரிகள் தென்படும். மழை பெய்தவுடன் உடனடியாக எட்டிப்பார்க்கும் அறுகம் புல்லின் வளர்ச்சியை ரசிக்க மறக்காதீர்கள்!

தாவரவேதிப் பொருள்கள்:

Calcium, Phosphorus, Sitosterol, Carotene, Tritepenoids.

அறுகம் புல்… இயற்கையின் பச்சைப் பஞ்சு!

- மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)



source https://www.vikatan.com/health/healthy/doctor-explains-bermudagrass-health-benefits

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக