Ad

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

விருதுநகர்: `சுய உதவிக்குழு பெண்களுக்கு உதவுவது பிரதமரின் கனவு’ -தெலுங்கு மொழியில் பேசிய எல்.முருகன்

மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளை சந்தித்தல், காரியகர்த்தாக்கள் ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மக்களின் முன்னேற்றத்திற்காக வகுக்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்து பேசினார். மேலும் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, அடுத்து வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் பாஜகவை பலப்படுத்தி வெற்றிபெற செய்வது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

வளா்ச்சிப்பணி ஆய்வுக்கூட்டம்

முன்னதாக, விருதுநகர் மாவட்டம் சின்னமூப்பன்பட்டியில் வாழும் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமை அமைச்சர் எல்.முருகன் தொடங்கிவைத்து பேசினார். கூட்டத்தில், காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் தாய் மொழியான தெலுங்கில் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், "எனக்கு இந்த சந்தர்பத்தில் பேச வாய்ப்பளித்தது மிக்க மகிழ்ச்சி. நாம்படும் கஷ்டத்தை நம் பிள்ளைகள் படக்கூடாது என்பதற்காக இங்கு உழைக்கிறோம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் மக்களின் முன்னேற்றத்திற்காகவே பாடுபடுகிறார். மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு உதவுவது அவரின் கனவாக உள்ளது.

அவரின் அந்த கனவை நோக்கித்தான் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். பிரதமரை பொறுத்தவரை சிறியவர்கள், பெரியவர்கள் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரின் முன்னேற்றத்திற்கான தேவைகளை அறிந்து அதை செயலாக்கி வருகிறார். நிச்சயம் உங்களின் தேவைகளை அறிந்து அதை நிவர்த்திச்செய்ய அரசு தயாராக உள்ளது" என தெலுங்கு மொழியில் பேசினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/union-minister-l-murugan-meet-tribes-in-virudhunagar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக