Ad

செவ்வாய், 12 ஏப்ரல், 2022

அசைவ உணவு மோதல்... ஜெ.என்.யு மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம்!

டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக காவேரி விடுதியில், சென்ற வார இறுதியில் அசைவ உணவு பரிமாறப்பட்டது. ராம நவமியில் அசைவ உணவு பரிமாறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பினர் விடுதிச் செயலாளரைத் தாக்கினர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

அதைத் தொடர்ந்து ஜெ.என்.யு மாணவர் சங்கத்தினருக்கும், ஏ.பி.வி.பி அமைப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் நள்ளிரவில் கலவரமாக உருவெடுக்கத் தொடங்கியது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஏ.பி.வி.பி மற்றும் ஜெ.என்.யு மாணவர் சங்கம் என இரு தரப்பிலிருந்தும் 16 மாணவர்கள் கலவரத்தில் காயமடைந்தனர்.

கலவரத்துக்கு அடுத்த நாள் ஏ.பி.வி.பி அமைப்பினர், `ராம நவமி பூஜை மற்றும் இப்தார் விருந்து இரண்டும் ஒரே நேரத்தில் ஹாஸ்டலில் நடைபெற்றது. அதில் இந்துக்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ எந்தப் பிரச்னையும் இல்லை, இரண்டும் இணக்கமாக நடந்தது. இரண்டு நிகழ்வுகளும் எப்படி ஒரே நேரத்தில் இணக்கமாக நடக்கிறது என, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நிலவும் அமைதியை இடதுசாரிகளாலும் கம்யூனிஸ்ட்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை' எனக் குற்றம் சாட்டினர்.

ஜெ.என்.யு மாணவர் சங்கம் தரப்பிலிருந்து பேசிய மாணவர்கள், 'ஜெ.என்.யு மற்றும் அதன் விடுதி உணவகங்கள், அனைவரையும் உள்ளடக்கியவை. ஜெ.என்.யு மாணவர்களிடையே குழப்பத்தை உண்டாக்கவே இது போன்ற கோமாளித்தனமான நடவடிக்கைகளை ஏ.பி.வி.பி அமைப்பினர் செய்கின்றனர்' எனக் கூறினர்.

JNU Campus

இதற்கிடையில், கல்லூரி வளாகத்தில் நடந்த கலவரம் தேசம் முழுக்கப் பேசுபொருளாக மாறியதைத் தொடர்ந்து, துணைவேந்தர், தாளாளர் மற்றும் அதிகாரிகள் விடுதிக்குச் சென்று மாணவர்களைச் சந்தித்தனர். அதைத் தொடர்ந்து ஜெ.என்.யு நிர்வாகம் ஏப்ரல் 10-ம் தேதி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தச் செயலிலும் மாணவர்கள் ஈடுபட வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. கல்லூரி நிர்வாகம் மற்றும் வளாகத்தில் எந்த வன்முறையும் அனுமதிக்கப்படாது எனவும், அதைப் பின்பற்ற மாணவர்கள் தவறும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தள்ளது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதில் விழிப்புடன் இருக்கும்படியும், ஜெ.என்.யு நிர்வாகத்திடம் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் விடுதி பாதுகாவலருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. மோதல் தொடர்பாக டெல்லி போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.



source https://www.vikatan.com/social-affairs/education/jnu-administration-warns-students-on-the-violence-in-campus

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக