Ad

செவ்வாய், 12 ஏப்ரல், 2022

CSK vs RCB: உத்தப்பா - துபே பேட்டிங் கூட்டணி, தீக்ஷனா - ஜடேஜா பௌலிங் கூட்டணி; சிஎஸ்கே முதல் வெற்றி!

சறுக்கலில் இருந்து சீறி எழ வேண்டிய சிங்கமாக சிஎஸ்கேவும், ஹாட்ரிக் வெற்றி தந்த மொமெண்டத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் உத்வேகத்தில் ஆர்சிபியும் கோதாவில் குதித்தன.

சிஎஸ்கே வெர்சஸ் ஆர்சிபியை விட சிஸ்கே வெர்சஸ் டு ப்ளெஸ்ஸி மோதல்தான், போட்டிக்கு இன்னமும் காரம் சேர்ந்திருந்தது. ஆர்சிபி, ஹர்சலுக்குப் பதில் ஹேசில்வுட்டை கொண்டு வந்திருந்தது. சிஎஸ்கே, முந்தைய போட்டியில் தோற்றாலும் அதே பிளேயிங் லெவனே என்ற முடிவோடு களம் கண்டது.

கடந்த நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே கெய்க்வாட் நான்கு ஓவர்களுக்கு மேல் களத்தில் நின்றிருந்தார். அதனாலேயே, 19 என்னும் மோசமான ஆவரேஜை சிஎஸ்கேயின் பவர்பிளே ஓவர்கள் சந்தித்தன. அந்த இரண்டும் மாறினாலே, நல்ல தொடக்கமாக இருக்கும் என ரசிகர்கள் கனவு கண்டனர். கெய்க்வாட்டின் தொடக்கமும் சிறப்பாகவே இருந்தது. டைட்டான லைனில் வீசிக் கொண்டிருந்த ஹேசில்வுட்டிடம் அடக்கி வாசித்தவர், சிராஜின் பந்துகளில் இரு பவுண்டரிகளைக் களவாடிக் கொண்டார். ஆனால், அந்த ஆட்டம் வெகுநேரம் நீடிக்கவில்லை.

CSK vs RCB

பேக் ஆஃப் லெந்த்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நகரும் பந்துகள், அவரது விக்கெட்டை பலமுறை காவு வாங்கியிருப்பதால் அதைக் கொண்டே அவருக்கு ஹேசில்வுட் குறி வைக்க, அதற்குப் பலியாகி எல்பிடபிள்யூவில் வெளியேறினார் கெய்க்வாட். டெஸ்ட் கிரிக்கெட்டில் நடப்பது போல், செட் செய்து கெய்க்வாட்டின் விக்கெட் ஹேசில்வுட்டால் சூறையாடப்பட்டது.

வழக்கத்திற்கு மாறாக, சாந்த சொரூபியாக நிதானத்தைக் கடைபிடித்த உத்தப்பாவோடு இணைந்த மொயின் அலி, சரியாக மூன்றே ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து, 3 ரன்களோடு நடையைக் கட்டினார். தினேஷ் கார்த்திக்கின் அதிவேக ரன்அவுட்டால் மொயினை ஆட்டமிழக்க வைக்க, லோ ஸ்கோரிங் கேமிற்கு உத்திரவாதம் தந்தது அடுத்தடுத்த அந்த நிகழ்வுகள்.

ஆனால், அந்தப் புள்ளியிலிருந்துதான் எல்லாமே மாறத் தொடங்கியது. உத்தப்பா - ஷிவம் துபே கூட்டணியின் வெ(ற்)றியாட்டம் தொடங்கியது. ஆரம்பத்தில், தங்களைத் தக்க வைத்துக் கொள்ள அவர்களுக்குச் சற்றே நேரமெடுக்க, முதல் பத்து ஓவர்களில் வெறும் 60 ரன்கள் மட்டுமே வந்து சேர்ந்திருந்தது. ரன்கள் குறைவாக இருந்ததே ஒழிய, விக்கெட்டைத் தக்க வைத்து ஆற்றலை பின்வரும் ஓவர்களுக்காக சேமித்துக் கொண்டனர். டு ப்ளெஸ்ஸி கோட்டை விட்ட இடம் இதுதான்.

துபே, உத்தப்பா இருவருமே, ஸ்பின் ஹிட்டர்கள்தான், இருப்பினும் இரண்டு விக்கெட்டுகள் விழுந்த மாத்திரத்தில் நல்ல ஃபார்மில் உள்ள ஹசரங்காவைக் கொண்டு வந்திருந்தால் அதே அழுத்தத்தில் துபேயின் விக்கெட்டோ, ஹசரங்காவின் கூக்ளிக்கு, உத்தப்பாவின் விக்கெட்டோ விழுந்திருக்கலாம். அதைச் செய்யாமல் நரைனை கேகேஆர் பாதுகாப்பதைப் போல், ஹசரங்காவை பத்து ஓவருக்கு மேல் பாதுகாத்து வைத்து இந்த இருவரும் நன்றாக காலூன்றுவதற்கான கால அவகாசத்தை டு ப்ளெஸ்ஸி கொடுத்து விட்டார். விளைவு 11-வது ஓவருக்குப் பின் வாண வேடிக்கையைத் தொடங்கியது கிலோ வாட் கணக்கில் திறனேற்றிய இக்கூட்டணி. சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பஞ்சமே இல்லாமல் நகர்ந்தன அடுத்தடுத்த ஓவர்கள். சூடேறத் தொடங்கியது சிஎஸ்கேயின் ரன் என்ஜின்.

CSK vs RCB

ஹசரங்கா + மேக்ஸ்வெல் + ஷபாஸ் என மூன்று ஸ்பின்னர்களின் ஓவர்களுமே, காஸ்ட்லி ஓவர்களாக மாறி விட்டிருந்தன. ஆர்சிபியில் இருந்த பழைய பாசமோ என்னவோ, கருணையேயில்லாமல் ரன்களைச் சேர்த்தனர். ஆர்சிபியும் விக்கெட்டை விழ வைக்க பெரிய பிரயத்தனமெல்லாம் படவேயில்லை. கைகட்டி இக்கூட்டணியின் மெகா விளாசலை வேடிக்கை பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்தது. போட்டியின் 15-வது ஓவரிலே இருவரது அரைசதமும் வந்து சேர்ந்தது. 10 - 15 ஓவர்கள் இடைவெளியில் 73 ரன்களை வாரிக் குவித்திருந்தனர்.

இப்படியே விட்டால் நிலைமை மோசமாகும் என இறுதி ஓவருக்காக கிடப்பில் வைத்திருந்த ஹேசில்வுட், சிராஜை டு ப்ளெஸ்ஸி கொண்டுவர, அவர்களாலும் ரன் குவிப்பிற்குக் கடிவாளம் இட முடியவில்லை. அவர்களின் ஓவர்கள் கணக்கும், குறைந்து போனதுதான் மிச்சம். ஹர்சல் படேலினை ஆர்சிபி நிரம்பவே மிஸ் செய்தது.

இறுதியில் ஹசரங்கா 19-வது ஓவரில் அடுத்தடுத்து உத்தப்பா மற்றும் ஜடேஜாவின் விக்கெட்டையும் எடுத்திருந்தாலும், போட்டி எப்போதோ, ஆர்சிபிக்கு டாடா சொல்லியிருந்தது. 50 பந்துகளில் 88 ரன்களோடு மிரட்டியிருந்தது உத்தப்பா புயல். இறுதி ஓவரில், ஹேசில்வுட்டையும் இரண்டு சிக்ஸர்களால் அட்டாக் செய்து, 95 ரன்களோடு களத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று 216 ரன்களுக்கு அணியினை எடுத்துச் சென்றிருந்தார் ஷிவம் துபே. இதுவரை நடந்த ஐந்து போட்டிகளில், மூன்றில் குறிப்பிடத்தக்க ஆட்டத்தை ஆடி, சிஎஸ்கேயின் எதிர்காலமாக தன்னை அடையாளம் காட்டியுள்ளார் துபே.

பவர்பிளேயில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டாலும், பௌலிங் மாற்றங்களை அதிரடியாகச் செய்யாமல், சிஎஸ்கேவினை 200-க்கும் அதிகமான ரன்களை அடிக்கவிட்ட இடத்திலேயே போட்டியை சென்னையின் வசம் பட்டா போட்டுக் கொடுத்து விட்டது ஆர்சிபி. ஷிவம் - உத்தப்பா கூட்டணி 73 பந்துகளில் 165 ரன்களை விளாசியது. அதுவும் முதல் 10 ஓவர்களில் 60 ரன்கள் மட்டுமே வந்திருக்க, இறுதி 60 பந்துகளில் 156 ரன்கள் எடுக்கப்பட்டன. ஆர்சிபியின் தோல்விக் கதை பலமுறை வேகப்பந்து வீச்சாளர்களால் எழுதப்பட்டுள்ளது, இம்முறையோ ஸ்பின்னர்களால் அழுத்தமாக எழுதப்பட்டது.

CSK vs RCB
217 என்பது கடின இலக்கென்றாலும், தீபக் சஹார் இல்லாத சிஎஸ்கேயின் பௌலிங் லைன் அப்பால், இதை டிஃபெண்ட் செய்ய முடியுமா என்ற அச்சம் சிஎஸ்கே ரசிகர்களுக்கே எழாமல் இல்லை. அதே சமயம், பனிப்பொழிவு இல்லை என்ற தகவல், சற்றே அவர்கள் வயிற்றில் பாலை வார்த்தது.

வேகப்பந்து வீச்சுதானே வீக்காக இருக்கிறது என வித்தியாசமான அணுகுமுறையாக, ஸ்பின்னோடு பவர்பிளே ஓவர்களைத் தொடங்கியது சிஎஸ்கே. அதற்கு இன்னொரு காரணம், ஸ்பின் பந்துகளைச் சமாளிக்கத் திணறும் ஆர்சிபியின் டாப் ஆர்டர்தான். அதிலும் டு ப்ளெஸ்ஸியின் ஸ்பின் பலவீனம், அறிந்த கதையென்பதால் அவர்கள் துணிந்து இந்த முடிவெடுக்க அதற்குப் பயன் இல்லாமல் இல்லை. போட்டியின் மூன்றாவது ஓவரிலேயே தீக்ஷனாவின் பந்தில் லாங் ஆனில் கேட்ச் கொடுத்து டு ப்ளெஸ்ஸி வெளியேறினார். அடுத்தடுத்த அடியை வாங்கத் தொடங்கியது ஆர்சிபி.

இலக்கு பெரியதென்பதால், ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆடும் நோக்கில் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் இருக்க, அவர்களது கப்பல் மூழ்கத் தொடங்கியதும் அங்கேதான். முகேஷ் சௌத்ரி வீசிய ஷார்ட் ஆஃப் லெங்த் டெலிவரியில் புல் ஷாட் ஆட முயன்ற கோலி, அதனை டீப் பேக்வேர்ட் ஸ்கொயரில் நின்றிருந்த ஃபீல்டரிடம் வேண்டி விரும்பி அனுப்பினார். அடுத்த ஓவரில் தீக்ஷனாவின் பந்துகளை மேக்ஸ்வெல் விளாசினார்தான் என்றாலும், இன்னொரு ஓப்பனரான ரவாட்டினையும் தீக்ஷனா அனுப்ப, பவர்பிளேயில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகரமாகத் தொடங்கியது சிஎஸ்கே. இந்த சீசனில் தீபக் இல்லாததால் குறைந்த அளவிலான பவர்பிளே விக்கெட்டுகளையே, சிஎஸ்கே எடுத்திருந்தது. அதை இந்தப் போட்டி மாற்றி எழுதியது.

இருப்பினும், "மேக்ஸ்வெல் இருக்க பயமேன்?!" என ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்க, "நானே வருவேன்" என ஜடேஜாவும் இறங்கி வந்தார். சந்தித்த 10 பந்துகளில் 26 ரன்களை எடுத்து, அச்சமூட்டிக் கொண்டிருந்த மேக்ஸ்வெல், ஜடேஜா வீசிய பந்தின் லெந்த்தைக் கணிக்காமல் புல் ஷாட் ஆட முயல, பந்து அவரை ஏமாற்றி ஆஃப் ஸ்டம்பை கழறச் செய்தது. டி20-ல் ஜடேஜா பந்தில் மேக்ஸ்வெல் விழுவது இது ஏழாவது முறை.
CSK vs RCB

முக்கிய தலைகள் மூன்றை அனுப்பிய மகிழ்ச்சியோடு இருந்த சிஎஸ்கேவிற்கு சற்று நேரம் ஆட்டம் காட்டியது, பிரபு தேஷாய் - ஷபாஸ் கூட்டணிதான். ஒருபக்கமாகவே நகரப்பார்த்த போட்டியை சற்றே தங்கள் பக்கமாகவும் திரும்ப வைத்தனர். 33 பந்துகள் நீடித்த இக்கூட்டணி 60 ரன்களை விளாசியது. மொயின் அலி - ஜடேஜாவின் சுழலுக்கும் அஞ்சவில்லை, பிராவோ - ஜோர்டானின் வேகத்திற்கும் வீழவில்லை. போதாக்குறைக்கு, பிரோவோ பந்தில் பிரபுதேஷாய் தந்த கேட்ச் வாய்ப்பைக் கைநழுவ விட்டார் முகேஷ். ஒரு வழியாக ஓவருக்கொரு விக்கெட் என எடுத்துக் கொண்டிருந்த தீக்ஷனா, அடுத்த ஓவரிலேயே ஸ்டம்போடு சேர்த்து, இந்தப் பார்ட்னர்ஷிப்பையும் முறித்தார்.

மத்திய ஓவர்களின் கடைசி இரண்டு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் விழுந்து, ஆர்சிபிக்கு அபாயச் சங்கொலித்தது. ஜடேஜா, ஆகாஷ் மற்றும் ஹசரங்கா இருவரையும் அனுப்ப, ஷபாஸினையும் க்ளீன் போல்டாக்கி தனது நான்காவது விக்கெட்டையும் எடுத்துக் கொண்டார் தீக்ஷனா. மாயாஜாலம் காட்டும் இன்னொரு இளம் இலங்கை வீரராக தனது பெயரை உரக்கச் சொல்ல வைத்துள்ளார் தீக்ஷனா.

டெத் ஓவர்களில் 71 ரன்கள் தேவை என சிஎஸ்கே சற்றே ரிலாக்ஸாக இன்னொரு முனையிலிருந்த தினேஷ் கார்த்திக் திடீரென உயிர் பெற்றார். தினேஷ், முகேஷின் ஓவரில் இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி எனப் புரட்டி எடுக்க, அவர் லைனையே மறந்து வொய்டுகளை வீச, அந்த ஓவர் மட்டும் 23 ரன்கள் ஆர்சிபியின் கணக்கில்!

'இவர் ஆரம்பித்தால் நிறுத்த மாட்டாரே?!' என சிஎஸ்கே ரசிகர்கள் பயம் கொண்ட சமயம், டெத் ஓவர் டெவிலான பிராவோ, தனது லோ ஃபுல் டாஸால் தினேஷ் கார்த்திக்கிற்கு ஆசைகாட்ட, அவர் அதை பவுண்டரிக்கு பார்சல் செய்ய, டீப் மிட் விக்கெட்டில் நின்றிருந்த ஜடேஜாவிடம் அது அடைக்கலம் புகுந்தது. சிஎஸ்கேயின் கணக்கில் இரண்டு புள்ளிகளைக் குறிக்க வைத்தது, இந்த விக்கெட்தான்.

CSK vs RCB

இறுதியாக சிராஜ் - ஹேசில்வுட் கூட்டணி இணைந்தபோது, இலக்கானது 16 பந்துகளில், 46 ரன்கள் வேண்டுமென்ற எட்ட முடியாத இடத்திற்குச் சென்றுவிட்டது. நல்ல வேளையாக, முன்னதாக ஒரு போட்டியில் துபே கையில் பந்தைத் தந்த அசம்பாவிதம் எதுவும் நிகழாமல், இறுதி ஓவர்களை ஜோர்டன் மற்றும் பிராவோ வீசி, 23 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேயை வெல்ல வைத்தனர்.

ஆர்சிபி ஸ்பின்னர்களால் சறுக்க, சிஎஸ்கேயின் ஸ்பின்னர்கள் இருவரும் இணைந்து ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை முன்னிலைப்படுத்தினர்.

பௌலிங் சொதப்பல், கேப்டன்ஷிப் தடுமாற்றங்கள், ஆர்சிபியை வீழ வைத்தது. ஆர்சிபினாலே அடிப்போம் என அவர்களை வீழ்த்தி ஃபார்முக்கு வந்துள்ளது சிஎஸ்கே.

தொடர்ந்து காயம்பட்ட சிங்கமாக உலா வந்த சிஎஸ்கேவிற்கு இது ஆறுதல் தரும் உயிர்க்க வைக்கும் முதல் வெற்றியாக மாறியுள்ளது.
இன்று மும்பை இந்தியன்ஸும், பஞ்சாப் கிங்ஸை வென்று தன் கணக்கைத் துவங்குமா? உங்கள் கருத்து என்ன?


source https://sports.vikatan.com/ipl/ipl-2022-csk-registers-their-first-win-after-defeating-rcb-comfortably

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக