Ad

திங்கள், 18 ஏப்ரல், 2022

``அதிபர் பைடன் உக்ரைனுக்குச் செல்லும் எந்த திட்டமும் இல்லை!" - வெள்ளை மாளிகை திட்டவட்டம்

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போரானது, இன்னும் கூட தீவிரம் குறையாமல் 7 வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ரஷ்யாவுக்கு எதிராக, பல நாடுகள் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளையும், ராணுவ உதவிகளையும் அளித்து வருகின்றன. இருப்பினும் அமெரிக்கா முன்பு கூறியது போலவே, ரஷ்யாவுக்கு எதிராக நேரடியாகக் களத்தில் இறங்காமல், உக்ரைனுக்குத் தொடர்ந்து அதிகளவில் ராணுவ உபகரணங்களை வழங்கி வருகிறது. கடந்த வாரம்கூட 800 மில்லியன் டாலர் உக்ரைனுக்கு வழங்குவதாக அதிபர் பைடன் அறிவித்திருந்தார். இதற்கிடையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைனுக்குச் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்துப் போர் நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தினார். ஆனாலும் இதுவரையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்குச் செல்வது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஜென் சாகி

இந்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளர் ஜென் சாகி, ``அதிபர் பைடன் உக்ரைனுக்குச் செல்லும் எந்த திட்டமும் இல்லை என்பதை இங்கு வலியுறுத்துகிறேன். அப்படியே யாரவது சென்றாலும்கூட, பாதுகாப்பு காரணங்களுக்காக யார், எப்போது செல்கிறார் என்பது அரசு தரப்பிலிருந்து எதையும் வெளிப்படையாகக் கூற முடியாது" என்று கூறினார்.

கடந்த வாரத்தில் அதிபர் பைடன், வருங்காலத்தில் கீவ் நகருக்கு தானே நேரில் செல்லத் தயாராக இருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமெரிக்க உயரதிகாரியை உக்ரைனுக்கு அனுப்ப பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், பெரும்பாலும் அந்த உயரதிகாரி வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் அல்லது பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டினாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளிவருகின்றன.



source https://www.vikatan.com/government-and-politics/international/there-is-no-plan-for-bidens-ukraine-visit-us-white-house-told-very-clearly

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக