Ad

வியாழன், 14 ஏப்ரல், 2022

போர்க்களம்: 7 கோல்கள் அடித்து அசத்தியது தடம் அகாடமி... ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தல்!

போர்க்களம் கால்பந்து தொடருன் நான்காவது சுற்றுப் போட்டிகள் கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நடந்தன. வழக்கமாக வார இறுதியில் நடக்கும் போட்டிகள், இம்முறை 'மிட்வீக்' போட்டிகளாக நடத்தப்பட்டன. தொடர்ந்து 3 போட்டிகளாக எதிரணிகளைப் பந்தாடி ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த நோபல் அகாடமியின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது.

செவ்வாய்க்கிழமை நடந்த முதல் போட்டியில் YMSC அணி, வுல்ஃப்பேக் எஃப்.சி-யை எதிர்கொண்டது. இரண்டு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றிருந்ததால், ஆட்டத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இரண்டு அணிகளுமே தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடின. இருந்தாலும், முதல் பாதியில் முடிவு வரை எந்த கோலும் விழவில்லை. முதல் பாதியின் இறுதியில் YMSC அணி ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து புல்ஃப்பேக் பகுதியை சூழ்ந்துகொண்டே இருந்தனர் அந்த அணியின் வீரர்கள். ஆனால், 48-வது நிமிடத்தில் (கூடுதல் நேரம்) அவர்களிடமிருந்து பந்தை மீட்ட வுல்ஃப்பேக், ஒரேயொரு கவுன்ட்டர் அட்டாக்கை மேற்கொண்டு ஆட்டத்தின் முதல் கோலை அடித்தது. இந்த கோலை அடித்தவர் ரீகன்.

60-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து ஆட்டத்தை சமனாக்கியது YMSC. வலது விங்கில் நடந்த அற்புதமான மூவ் மூலம் பாக்சுக்குள் கிராஸ் வர, அதை கோலாக்கினார் மனோஜ். 1-1. ஆனால், அடுத்த இரண்டு நிமிடங்களில் மீண்டும் முன்னிலை பெற்றது வுல்ஃப்பேக். இடது விங்கில் இருந்து வந்த கிராஸை ஹெட்டர் மூலம் கோலாக்கினார் டிஃபண்டர் சூர்யா. முதல் முறை போட்டியை சமனாக்கிய மனோஜ், மீண்டும் ஒரு கோலடித்து போட்டியை டிராவாக்க உதவினார். முதல் 12 போட்டிகளிலுமே முடிவு எட்டப்பட்டிருந்த நிலையில் இந்த சீசனின் முதல் டிரா இந்தப் போட்டிதான்.

இரண்டாவது போட்டியில் யாவே எஃப்.சி அணியைப் பந்தாடி 7 கோல்கள் அடித்தது தடம் சாக்கர் அகாடமி. கடந்த போட்டியில் கோலடித்து அணியை வெற்றி பெற வைத்த வி.விஜேஷ், டி.விஜேஷ் இருவரும் அணியின் முதலிரு கோல்களை அடித்தனர். அந்த இரு கோல்கலோடு முதல் பாதி முடிவுக்கு வந்தது. இரண்டாம் பாதியில் இன்னும் உக்கிரமாக ஆடியது தடம். கலாநிதி, நரேஷ், அஜித் ஆகியோர் 20 நிமிட இடைவெளியில் 3 கோல்கள் அடித்தனர். ஐந்து கோல்கள் அடித்து மிகச் சிறப்பான முன்னிலையில் இருந்த அந்த அணி, கடைசி தருணங்களிலும் இரண்டு கோல்கள் அடித்தது. 86-வது நிமிடத்தில் போட்டியில் தன் இரண்டாவது கோலை அடித்தார் வி.விஜேஷ். கூடுதல் நேரத்தின் இரண்டாவது நிமிடத்தில் விக்கி கோலடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். மூன்றாவது சுற்றுல் YMSC அணிக்கெதிராக 6 கோல்கள் வாங்கிய யாவே, இப்போது 7 கோல்கள் வாங்கியிருக்கிறது.

தொடர்ந்து 3 போட்டிகளாக வெற்றி பெற்று அசத்திக்கொண்டிருந்த நோபல் ஃபுட்பால் அகாடமி, ஃப்யூச்சர் இந்தியா ஃபுட்பால் அகாடமிக்கு (FIFA) எதிராக போராடி டிரா செய்தது. 25-வது நிமிடத்தில் கோலடித்து, FIFA அணிக்கு இளங்கோவன் முன்னிலை ஏற்படுத்திக்கொடுக்க, 38-வது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தை சமனாக்கினார் நோபல் வீரர் அருண். முதல் பாதி 1-1 என முடிந்தது. இரண்டாவது பாதி தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே இரண்டாவது கோலை அடித்தது FIFA. இரண்டாவது கோலுக்கு எவ்வளவு போராடியும் நோபல் அணியால் எதுவும் செய்ய முடியவில்லை. போட்டி முடிய 32 நொடிகளே இருந்த நிலையில், விஜய் அட்டகாசமாக கோலடித்து அணியை வெற்றி பெறவைத்தார்.

புள்ளிப் பட்டியலில் கடைசி 2 இடங்களிலிருந்த எஃப்.சி.ரெவலேஷன், MAFFC அணிகள் இந்தச் சுற்றின் கடைசிப் போட்டியில் மோதின. முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோலடிக்கவில்லை. 55-வது நிமிடத்தில் MAFFC அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை கோலாக்கி அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார் சந்தோஷ் குமார். 73-வது நிமிடத்தில் ஃபீல்ட் கோல் அடித்து அந்த முன்னிலையை இரட்டிப்பாக்கினார் சந்தோஷ். அடுத்த ஐந்து நிமிடங்களில் எஃப்.சி.ரெவலேஷன் முதல் கோலை அடித்தது. 78-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க அதை கோலாக்கினார் ஜன கார்த்திகேயன். 91-வது நிமிடத்தில் வலது விங்கில் இருந்து MAFFC அட்டாக் செய்து பந்துக்குள் பாக்ஸை எடுத்துவர, அதைத் தடுக்க நினைத்த தன் கோலுக்குள்ளேயே தட்டிவிட்டார் பெனால்டியை அடித்த ஜனா. இதனால் 3-1 என வெற்றி பெற்றது MAFFC. இந்த சீசனில் இந்த அணியின் முதல் வெற்றி இது.

இந்தச் சுற்றுப் போட்டியில் டிரா செய்திருந்தாலும் 10 புள்ளிகளோடு முதலிடத்தில் நீடிக்கிறது நோபல் அகாடமி. இந்த வாரம் கோல் மழை பொழிந்த தடம் சாக்கர் அகாடமி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.


source https://sports.vikatan.com/football/porkkalam-football-tournament-round-4-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக