Ad

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

SRH vs KKR: ராகுல், மார்க்ரம் அதிரடி; நடராஜனின் 3 விக்கெட்டுகள்... சன்ரைசர்ஸ் ஹாட்ரிக் வெற்றி!

ஐபிஎல் 2022 தொடரின் 25வது போட்டி இது. டாஸ் வென்றதும் பௌலிங் என்கிற விதி இந்தத் தொடரில் பசு மரத்தாணி போல் எழுதப்பட்டுவிட்டது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற சன்ரைசர்ஸ் அணி, சென்னைக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் விஸ்வரூபம் எடுத்தது. அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறது. டாஸ் வென்ற வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக சுசித்தை தேர்வு செய்தார் வில்லி. ஆனால் சுசித்தான் அந்த நாளின் வில்லன் என வில்லியம்சன் அப்போது யூகித்திருக்க மாட்டார். கொல்கத்தா அணியிலோ மூன்று மாற்றங்கள்.

சன்ரைசர்ஸ் பிளேயிங் XI: அபிஷேக், வில்லியம்சன், ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம், சஷாங்க் , ஜேன்சன், சுசித், புவனேஷ்வர், நடராஜன், உம்ரான்
கொல்கத்தா பிளேயிங் XI: ஆரோன் ஃபின்ச், வெங்கடேஷ் ஐயர், ராணா, ஸ்ரேயாஸ் ஐயர், அமன், ரஸல், ஷெல்டன் ஜேக்சன், சுனில் நரைன், பேட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி

ஃபின்சும், வெங்கடேஷும் ஓப்பனிங் இறங்க, புவி முதல் ஓவரை வீசினார். புவி வீசிய இன்ஸ்விங்கரை அப்படியே அலேக்காக மிட் ஆன் பக்கம் சிக்ஸருக்கு அனுப்பினார் ஃபின்ச். அடேங்கப்பா... வாய்ப்புகள் அமையாது மன்னா, நாம்தான் உருவாக்க வேண்டும் என்பது போல கொல்கத்த்தாவுக்காக இந்த சீசனில் ஆடிய முதல் போட்டியிலேயே கலக்குகிறாரோ என நினைத்து முடிப்பதற்குள் ஜேன்சன் பந்துவீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஃபின்ச்.

ஆரோன் ஃபின்ச் | SRH vs KKR

வெங்கடேஷ் ஐயருடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை வீச வந்தார் நட்டு. முதல் பந்திலேயே வெங்கடேஷ் க்ளீன் போல்ட். இரண்டு விக்கெட்டுகள் சட்டென விழுந்தால், சுனில் நரைன் உள்ளே வந்து காட்டு சுத்து சுத்துவது கொல்கத்தாவின் வழக்கம். இன்றும் அப்படியே... உள்ளே வந்த வேகத்தில் முதல் பந்தை லாங் ஆன் பக்கம் சிக்ஸருக்கு விளாசினார் நரைன். அடுத்த பந்தை லோ ஃபுல் டாஸாக வீச, அதை மீண்டும் ஓங்கி அடித்தார். ஆனால், அது சஷாங் சிங்கின் கைகளில் சென்று தஞ்சமடைந்தது. பவர்பிளே இறுதியில் மூன்று விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எனத் தத்தளித்தது கொல்கத்தா.

நித்திஷ் ரானாவும், ஸ்ரேயாஸ் ஐயரும் ஓவருக்கு ஒரு பவுண்டரி எனக் கொஞ்சம் கொஞ்சமாக ரன்களைச் சேர்த்தார்கள். உம்ரான் மாலிக் வீசிய அதி வேகமான பந்தை ஆஃப் சைடு பக்கம் ஸ்ரேயாஸ் அடிக்க முயல, பந்தோ நேராக ஸ்டம்பைப் பதம் பார்த்தது. ஷெல்டன் ஜேக்சனுடன் ஜோடி சேர்ந்த நித்திஷ் ராணா. பீஸ்ட் மோடுக்கு மாறினார். மிட்விக்கெட் பக்கம் அவர் அடித்த பந்து நேராக ரோப்பிடம் விழுந்தது. சில ரீப்ளேக்களுக்குப் பின்னர் அது சிக்ஸ் ஆனது. நட்டுவின் ஓவரில் 13 ரன்கள். உம்ரான் மாலிக் மீண்டுமொரு வேகமான பந்துடன் ஓடி வந்தார். இந்த முறை 149 கிமீ வேகம். வந்த வேகத்துக்கு அதை தேர்ட் மேன் திசையில் சும்மா கிடந்த ஃபிரிட்ஜின் மேல் ஓங்கி அடித்தார் ரானா. ஃபிரிட்ஜு போச்சே!

உடைந்த ஃபிரிட்ஜ் | SRH vs KKR

ஜேக்சனும் தன் பங்குக்கு ஒரு சிக்ஸ் அடித்துவிட்டு, நரைன் பாணியில் அடுத்த பந்திலேயே அவுட்டானார். ரஸல், ராணா என இரண்டு பீஸ்டுகள். 16 ஓவர்கள் முடிவில் 122 ரன்கள். அடுத்து ஒவ்வொண்ணும் இடி மாதிரி விழணும் என்கிற முடிவோடு அடுத்த நான்கு ஓவர்களை ஆடத் தொடங்கியது கொல்கத்தா. புவி வீசிய ஓவரில் 16 ரன்கள். தேர்ட் மேனில் ஒரு பவுண்டரி; 99 மீட்டருக்கு லாங் ஆனில் ஒரு சிக்ஸ்; கடைசி பந்தில் ஒரு பவுண்டரி என வெளுத்தார் ரஸல். அதுவும் கொஞ்சம் தொட்டிருந்தால் சிக்ஸ் என்பது வேறு கதை.

நட்டுவின் பந்தில் பவுண்டரி அடித்துவிட்டு, அடுத்த பந்தை ஆஃப் சைடு திசையில் அடிக்க ஆயத்தமானார் ராணா. ஆனால், மிஸ்ஸாகி பந்து கீப்பரிடம் சென்றது. கீப்பரும், நட்டுவும் எவ்வளவோ கேட்டும் பிடிகொடுக்கவில்லை அம்பயர். அப்புறம் தேர்ட் அம்பயரிடம் வரம் வாங்கிவந்து ராணாவை அவுட்டென வெளியே அனுப்பினார்கள். 19 இன்னிங்ஸுக்குப் பிறகு அரைசதம் கடந்திருந்தார் ராணா. கடைசி ஓவரை ஸ்பின்னர் சுசித் வீச வந்தார். 'என்னடா இது' என எல்லோரும் ஆர்வமானார்கள். முதல் பந்திலேயே அமன் ஹக்கின் கானை போல்டாக்கினார். உமேஷ் யாதவ் சிங்கிள் தட்டிவிட்டு ரஸலுக்கு ஸ்டிரைக்கை கொடுத்தார். டீப் மிட் விக்கெட், லாங் ஆன் என அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ், அடுத்து ஒரு பவுண்டரி என எட்டு விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. 25 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார் ரஸல்.

ரஸல் | SRH vs KKR
ஆட்டம் ஆரம்பம் முதலே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக இருந்தது. ஜேன்சன் தங்கள் ஊரான ஜொஹான்ஸ்பெர்கில் பந்துவீசுவது போல் இருக்கிறது. எளிதாக இதை சேஸ் செய்துவிடலாம் என்றார். ஆனால், இவ்வளவு எளிதாக சேஸ் செய்ய முடியும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

உமேஷ் வீசிய முதல் ஓவரில் அபிஷேக்கால் பெரிதாக ரன் எதுவும் அடிக்க முடியவில்லை. கம்மின்ஸ் ஓவரில் போல்டாகி வெளியேறினார். 10 பந்துகளில் 3 ரன்கள். ராகுல் திரிபாதியுடன் ஜோடி சேர்ந்தார் வில்லியம்சன். பவர்பிளேயின் கடைசி ஓவர் வீச வந்த ரஸலிடம் போல்டாகி அவரும் வெளியேறினார். மார்க்ரமும், ராகுலும் அடுத்து ஆடியது அடிதடி சரவெடி. ஓவருக்கு ஒரு சிக்ஸர் பறந்தது. யாருமே தப்பவில்லை. அமன் ஹக்கீன் ஒய்டாக வீசிய பந்தை, கூலாக விலகி நின்று அப்பர்கட் ஷாட் அடித்து சிக்ஸாக்கினார் ராகுல். அமன் ஹக்கீமின் ஓவரில் 13 ரன்கள் போக, அடுத்த வேகப்பந்து வீச்சாளரை இறக்கியது கொல்கத்தா. எக்ஸ்டிரா கவர் திசையில் ஒரு பவுண்டரி அடித்து, அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு கூலாக விளாசினார். 16 பந்துகளில் 46 ரன்கள் வந்துவிட்டார் ராகுல். அதில் நான்கு பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள்.

SRH vs KKR

வருண் வீசிய அடுத்த ஓவரில் ஜோடி சேர்ந்து கொண்டார் மார்க்ரம். ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி. நரைனின் முதல் ஓவரில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே போக, அடுத்த ஓவரை அப்படியே வீச வைத்தார் ஸ்ரேயாஸ். முதல் பந்திலேயே லாங் ஆனில் சிக்ஸ். இதே வேகத்தில் அடித்தால் அதிக ரன் ரேட் வந்துவிடும் டாப் 4க்குள் நுழைந்தாலும் நுழைந்துவிடுவோம் என யாரோ அசரீரி போல சொல்லியிருப்பார்கள் போல. நாம் ஆடுவது சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்காக எனத் திடீரென ராகுலுக்கும், மார்க்ரமுக்கும் தோன்றியது. அப்படியே டெஸ்ட் மேட்ச் மோடுக்கு போய்விட்டார்கள். அடுத்த 20 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.

எய்டன் மார்க்ரம் | SRH vs KKR

இப்படியே ஊர்ந்து சென்ற ஆட்டத்தில் உமேஷ் பந்தில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து கேமை மீண்டும் தன் பக்கம் கொண்டு வந்தார் மார்க்ரம். ராகுல் திரிபாதி சிக்ஸ் அடித்துவிட்டு ரஸல் பந்துவீச்சில் அவுட்டானார். இந்தப் போட்டியில் சிக்ஸருக்கு அடுத்த பந்திலேயே அவுட்டாகும் மூன்றாவது விக்கெட் இது. 18 பந்துகளில் 18 ரன்கள் தேவை என்கிற நிலை வந்தவுடன் மீண்டும் மார்க்ரம் மேஜிக்கை நிகழ்த்த ஆரம்பித்தார், அதற்கும் வீசியது கம்மின்ஸ். ஒரு பவுண்டரி, அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் ஆட்டம் ஓவர். ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்தார் மார்க்ரம். 71 ரன்கள் எடுத்த ராகுல் திரிபாதி ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

ஆக, சன்ரைசர்ஸின் வெற்றிப் பயணம் தடையில்லாமல் மூன்று ஆட்டங்களாகத் தொடர்கிறது. இந்த எழுச்சி இறுதிவரை நீடிக்குமா?


source https://sports.vikatan.com/ipl/rahul-markram-shine-as-sunrisers-hyderabad-achieves-hat-trick-of-wins

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக