Ad

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

சென்னை: சிக்னலுக்கு காத்திருந்த பைக்; கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி! - அதிர்ச்சி சம்பவம்

சென்னைச் சாந்தோமிலிருந்து அடையாறு நோக்கி செல்லும் சாலையில் பட்டினம்பாக்கத்தில் சிக்னலில் இன்று காலை, சிக்னலுக்காக வாகனங்கள் காத்திருந்தன. அப்போது. அந்தச் சிக்னலில் காத்திருந்த வாகனங்கள் மீது தண்ணீர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதியது. அதனால் சிக்னலுக்காகக் காத்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். லாரியின் சக்கரத்தில் வாகனங்கள் அடுத்தடுத்து சிக்கின. லாரியை நிறுத்த டிரைவர் முயற்சி செய்தார். ஆனால், லாரியை நிறுத்த முடியவில்லை.

விபத்து நடந்த இடம்

அப்போது, எண்ணூரைச் சேர்ந்த பிரனீஷ் (4) என்ற சிறுவன், அவனின் சகோதரி பிரதீஷா (3) ஆகியோர் தங்களுடைய உறவினர்களுடன் பைக்கில் தரமணி செல்ல சிக்னலில் காத்திருந்தனர். தறிக்கெட்டு ஓடிய லாரி, பிரனீஷ் அமர்ந்திருந்த பைக்கின் மீதும் மோதியது. இதில் பிரனீஷ், லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவனின் தங்கை, மற்றும் உறவினர்கள் காயங்களுடன் உயிர்தப்பினர். அதன்பிறகும் தண்ணீர் லாரி நிற்கவில்லை.

சிக்னலில் காத்திருந்த சென்னை கொடுங்கையூர் எழில்நகரைச் சேர்ந்த ரமேஷின் பைக் மீது லாரி மோதியது. உஷாரான ரமேஷ், பைக்கிலிருந்து குதித்து உயிர் தப்பினார். அப்போது அவரின் பைக், லாரியின் சக்கரத்தில் சிக்கி முழுமையாக சேதமடைந்தது. இதையடுத்து, லாரி, அங்கிருந்த சிக்னல் கம்பியை இடித்து தள்ளிவிட்டு அருகிலிருந்த தடுப்பில் மோதி நின்றது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தால் வாகன ஓட்டிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்து பட்டினம்பாக்கம் காவல் நிலையத்துக்கும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சேதமடைந்த சிக்னல் கம்பி

சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ்களில் காயமடைந்தவர்கள் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போலீஸார் வருவதற்குள் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிரிழந்த பிரனீஷின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்துக் குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தண்ணீர் லாரியை ஓட்டியது பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த சமீர் (24) எனத் தெரியவந்தது. அவரைப் பிடித்த போலீஸார் விபத்துக் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``எண்ணூர் சிவகாமி நகரை சேர்ந்த வர் ராஜேந்திர பிரசாத். இவரின் மனைவி ஆசிரியை மரிய ஒளி நிஷா. இந்தத் தம்பதியின் மகன் பிரனீஷ், மகள் பிரதீஷா. இவர்கள் இருவரும் தங்களது உறவினரான கோபால் மற்றும் உமாவுடன் சென்னை தரமணியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்ல பைக்கில் இன்று காலை வந்துள்ளனர். அப்பொழுது பட்டினம்பாக்கம் சிக்னலில் கோபால் பைக்கில் காத்திருந்தார். இந்தச் சமயத்தில்தான் தண்ணீர்லாரி, கோபாலின் பைக்கின் மீது மோதியுள்ளது.

Also Read: சென்னை: பைக்கிலிருந்து தவறி விழுந்த மாநகராட்சிப் பெண் ஊழியர்... உயிரைப் பறித்த பேருந்து!

சக்கரத்தில் சிக்கிய பைக்

அதனால் நிலைத்தடுமாறிய கோபால், பிரதீஷா, உமா ஆகியோர் லாரியின் சக்கரத்துக்கு வெளியில் விழுந்துள்ளனர். ஆனால் பிரனீஷ் மட்டும் லாரியின் சக்கரத்துக்குள் விழுந்து நசுங்கி உயிரிழந்துள்ளார். விபத்துக்குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அடுத்தடுத்து வாகனங்களின் மீது தண்ணீர் லாரி மோதியுள்ளது. அதில் காயமடைந்தவர்களிடமும் விபத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடந்துவருகிறது. இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய டிரைவர் சமீரைப் பிடித்து அவரிடமும் விசாரித்து வருகிறோம்" என்றனர்.

சிக்னலுக்காகக் காத்திருந்தபோது தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/accident/in-chennai-4-years-old-boy-died-in-road-accident

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக