தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸாரின் தாக்குதலினால், கோவில்பட்டிச்சிறையில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அக்காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 10 போலீஸாரை சி.பி.சி.ஐடி., போலீஸார் கைது செய்தனர். அதே காவல்நிலையத்தில் பணிபுரிந்த மற்ற போலிஸாரும் கூண்டோடு பிற காவல் நிலையங்களுக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி-யிடமிருந்து இவ்வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
கணவர் மற்றும் மகனை ஒரே நேரத்தில் இழந்த சாத்தான்குளம் வீட்டில் இருக்கமுடியாமல் தென்காசி மாவட்டம் புளியங்குடியிலுள்ள தன் மகள் பெர்சியின் வீட்டிற்குச் சென்றுவிட்டார் பென்னிக்ஸின் தாயார் செல்வராணி. தற்போது பென்னிக்ஸின் வீடு பூட்டப்பட்டுள்ளது. அந்த சோகத்திலிருந்து பென்னிக்ஸின் குடும்பத்தினர் இன்னும் மீளாத நிலையில், பென்னிக்ஸைத் தேடி பூட்டப்பட்ட வீட்டிற்கும் கடைக்குமாக அலைந்து கொண்டிருக்கிறது பென்னிக்ஸின் வளர்ப்பு நாயான டாமி.
Also Read: “அவன் வெச்ச மரமெல்லாம் வளர்ந்துடுச்சு; ஆனா அவன் இல்லையே!”
“சின்னக் குட்டியா இருக்கும்போதே, பென்னிக்ஸ் இந்த நாயைத் தூக்கிட்டு வந்து வளர்த்தான். அவன் பைக் நிறுத்தியிருக்கும் இடத்துலதான் டாமியும் படுத்திருக்கும். குளிப்பாட்டுறது, சாப்பாடு வைக்கிறது எல்லாமே பென்னிதான் செய்வான். ‘டாமி...’ன்னு கூப்பிட்டா அடுத்த நிமிஷமே அவன் முன்னால வந்து நிற்கும். பென்னிக்ஸ் இறந்ததுக்குப் பிறகு டாமி, சரியா சாப்பிடுறதில்ல. அவனையே நினைச்சுக்கிட்டு இருக்கு.
’இங்க இருந்தா இன்னும் அதே நியாபகமா இருக்கும். என்னோட வீட்டுக்கு வாங்கம்மா’ன்னு மூத்த மகள் பெர்சி அவங்க அம்மாவை அழைச்சுட்டுப் போயிட்டாங்க. பெர்சி, வீட்டைப் பூட்டிவிட்டு அம்மாவைக் அழைச்சுட்டுப் போகும்போது குரைச்சுக்கிட்டே ரொம்ப தூரம் வரை கார் பின்னாலே போச்சு டாமி. பூட்டிக்கிடக்கும் வீட்டுக்கு முன்னாலயே படுத்திருக்கும். ராத்திரி ஆனா, பென்னிக்ஸின் கடை முன்னால படுத்திருக்கும். கடைக்கும் வீட்டுக்குமா சுத்திக்கிட்டே இருக்கு. நாங்கதான் டாமிக்கு, இப்போ சாப்பாடு வைக்கிறோம்.
எப்பவுமே தட்டுல மிச்சம் வைக்காம சாப்பிடுற டாமி, ஏதோ பேருக்கு மட்டும் சாப்பிடுது. புதுசா யாரைப் பார்த்தாலும் குரைச்சுக்கிட்டே இருக்குற டாமி, கம்பீரம் இழந்து இப்போ, சோகமா படுத்திருக்கிறதைப் பார்க்கும்போது ரொம்பவே பாவமா இருக்கு” என்றனர். இந்நிலையில், இரண்டு மாதத்திற்குப் பிறகு பென்னிக்ஸ் நடத்தி வந்த செல்போன் சர்வீஸ் கடையை திறக்கலாம் என சி.பி.ஐ போலீஸார் அனுமதி அளித்தனர். அதன்படி, உடன்குடியைச் சேர்ந்த பென்னிக்ஸின் சித்தி ஜோதியின் மகன் இம்ரானிடம் கடை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடையைத் திறந்த உடனேயே டாமி, வேகமாக பாய்ந்து வந்து கடைக்குள் சென்று சுற்றிச்சுற்றி குரைத்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டனர் பக்கத்து கடைக்காரர்கள். இம்ரானிடம் பேசினோம், “பென்னிக்ஸ் இறந்ததுக்குப் பிறகு கடையை மூடிட்டோம். கொஞ்ச நாளுக்கு முன்னாலதான் கடையைத் திறக்க அனுமதி கொடுத்தாங்க. அவன் நடத்திட்டு வந்தக் கடையை காலி செய்யவும் மனசு இல்ல.
‘இந்த சின்னக் கடையை பெரிய மொபைல் ஷோரூமா மாத்தணும்’னு பென்னி அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பான். எனக்கும் மொபைல் சர்வீஸ் தெரியும்ன்றதுனால, கடையை நானே எடுத்து நடத்த சம்மதிச்சேன். கடையைத் திறந்த அடுத்த அஞ்சாவது நிமிஷம் டாமி எங்க இருந்தோ பாய்ஞ்சு ஓடி வந்துட்டான். எப்பவும் கடை வாசலோடு நிற்குற டாமி, கடைக்குள்ள வந்து குரைச்சுக்கிட்டே இருந்தான்.
கடைக்குள்ளயே சுத்தி சுத்தி வெறிச்சுப் பார்த்துட்டே இருந்தான். கடைக்குள்ளேயும் வெளியேயும் ஓடிக்கிட்டே இருந்தான். டாமி, பென்னியைத்தான் தேடுறான்னு எனக்குப் புரிஞ்சுது. அவன் சத்தமா குரைக்குற சத்தம்கேட்டு பக்கத்துக் கடைக்காரங்களும் வந்துட்டாங்க. அண்ணனை டாமி தேடிக்கிட்டே பரிதவிச்சு நின்னதைப் பார்த்து எங்க எல்லோருக்குமே கண்ணு கலங்கிடுச்சு” என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/sathankulam-bennixs-pet-dog-tommy-is-in-search-of-him
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக