Ad

திங்கள், 14 செப்டம்பர், 2020

`ஆபத்து சூழ்ந்துள்ளது!' - பா.ஜ.க-வைக் கண்டு பயப்படுகிறதா தி.மு.க?

தமிழகத்தில் அதிகாரத்தில் இருக்கும் அ.தி.மு.க-வைக் காட்டிலும், டெல்லியில் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் பா.ஜ.க-வைத்தான் தி.மு.க கடுமையாக விமர்சித்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், பிரதமர் நரேந்திர மோடியையும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்துவருகிறார். `மண்புழுவைப் போல ஊர்ந்துசென்று முதலமைச்சர் ஆனவர்’ என்பதுதான் எடப்பாடி பழனிசாமி மீது ஸ்டாலின் வைத்த உச்சபட்ச விமர்சனம். அதைவிட, `மோடி ஒரு சாடிஸ்ட்’ என்று பிரதமர் மோடி மீது மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார் ஸ்டாலின்.

ஸ்டாலின்

தனது நேரடி எதிரியான அ.தி.மு.க-வைக் காட்டிலும், பா.ஜ.க-வைத்தான் பிரதான எதிரியாக தி.மு.க கருதுகிறது என்பதை ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க தலைவர்களின் தொடர்ச்சியான பேச்சுகளிலேயே பார்க்க முடியும். குறிப்பாக, மத அரசியல், மாநில சுயாட்சி மீதான தாக்குதல், ஜனநாயக விரோதம் ரீதியிலான விமர்சனங்களைத் தொடர்ச்சியாக முன்வைத்துவருகிறார்கள். கடந்த வாரம் தி.மு.க பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்ட துரைமுருகனின் பேச்சிலும் அது வெளிப்பட்டது.

``இந்த இயக்கத்துக்கு வந்திருக்கக்கூடிய சவால் என்பது, இந்த இயக்கத்தையே அழிக்கக்கூடிய புதிய கலாசாரப் படையெடுப்பு. இந்த சித்தாந்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன்பு மத்தியில் இருந்தவர்கள் கொஞ்ச நஞ்சம் ஜனநாயகம் தெரிந்தவர்கள். இப்போது நம்மை எதிர்ப்பவர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள். சட்டத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள். அரசியல் சாசனத்தில் மத்தியப் பட்டியலில் இருக்கும் கல்வியை எடுத்துக்கொண்டார்கள்.

துரைமுருகன்

கல்வி அமைச்சர்களை அழைத்துப் பேச வேண்டியவர்கள். கவர்னர்களை அழைத்துப் பேசுகிறார்கள். `இந்தியைத் திணிப்போம், சம்ஸ்கிருதத்தைக் கொண்டுவருவோம். எங்களை யாரும் எதிர்க்க முடியாது’ என்று ஆக்ரோஷமாக வந்திருக்கிறார்கள். இதை எதிர்ப்பதற்கு மகத்தான சக்தியை நாம் பெற வேண்டும். இந்தப் புதிய எதிர்ப்பை, இந்தக் கலாசாரப் படையெடுப்பை, நம்மை நசுக்குகிற வேலையை லேசாக நினைக்காதீர்கள்” என்று பேசியிருக்கிறார் துரைமுருகன்.

Also Read: தி.மு.க: பொதுச்செயலாளர் துரைமுருகன்... பொருளாளர் டி.ஆர் பாலு... சமாளிப்பாரா ஸ்டாலின்?

பா.ஜ.க-வுக்கு எதிரான துரைமுருகனின் பேச்சு குறித்து திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளரான பேராசிரியர் சுப.வீரபாண்டியனிடம் பேசினோம். ``தி.மு.க-வின் பொதுச்செயலாளர் துரைமுருகன், நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துச்சொல்லியிருக்கிறார். ஏனென்றால், இதுவரை நாம் சந்தித்த எதிரிகளுக்கும் இப்போது பார்க்கிற அரசியல் எதிரிகளுக்கும் ஒரு தெளிந்த வேறுபாடு இருக்கிறது . அந்த வேறுபாட்டை,`புதிய கலாசாரப் படையெடுப்பு’ என்று துரைமுருகன் மிகவும் சரியாக எடுத்துச்சொன்னார்.

சுப.வீரபாண்டியன்

மத்தியில் இதற்கு முன்பு இருந்த அரசு, ஜனநாயகத் தன்மை கொண்டது. இப்போது இருக்கிற அரசோ, ஜனநாயகத்தை மதிக்காத அரசாக இருக்கிறது. அதுதான் பெரிய வேறுபாடு. ஜனநாயகம் புறக்கணிக்கப்படுகிறது என்றால், பாசிசம் தலைதூக்குகிறது என்று பொருள். பாசிசத்துக்கான அடிப்படைப் பொருளே கருத்தைக் கருத்தால் எதிர்க்காதீர்கள், கருத்தைத் தடிகொண்டு தாக்குங்கள் என்பதுதான். முசோலினியிடமிருந்து வந்த பாசிசம் என்ற சொல், ஜனநாயகத்துக்கு நேர் எதிரானது. எனவே, அதைக் குறிப்பிட்டு பேசிய பொதுச்செயலாளர் துரைமுருகன், `ஜனநாயகத் தன்மையற்ற, ஜனநாயகத்தைச் சகிக்காத ஒரு கட்சியோடும் ஒரு கருத்தியலோடும் நாம் மோதுகிறோம் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று சொன்னார்.

இன்றைக்கு ஒரு கலாசாரம் யுத்தம் தொடங்குகிறது. இது, வெறுமனே தேர்தல் யுத்தம் அல்ல. அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க.வு-க்கும் இடையே நடப்பது வெறும் தேர்தல் போட்டி. அடிப்படையில் திராவிடக் கொள்கையை அ.தி.மு.க-வினர் ஏற்கிறார்களோ இல்லையோ, வெளிப்படையாகத் திராவிடர் இயக்கம் என்றுதான் அவர்களைச் சொல்கிறார்கள். பெரியாரையும், அண்ணாவையும்தான் அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க என்பது முற்றிலும் எங்கள் தளத்துக்கு நேர் எதிரானது.

துரைமுருகன்

எனவேதான், அந்தக் கருத்தில் போராட்டத்துக்கு வாருங்கள் என்று பொதுச்செயலாளர் துரைமுருகனின் உரை அமைந்திருப்பதாகக் கருதுகிறேன். அதற்காக, பா.ஜ.க-வைப் பார்த்து தி.மு.க அஞ்சுகிறது என்று அர்த்தமல்ல. இதில் எந்த விதமான அச்சமும் கவலையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை . கவனமும் எச்சரிக்கையும் இருப்பதாக நான் பார்க்கிறேன். காஷ்மீர் பிரச்னை உள்பட எந்தப் பிரச்னையையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுதான் செய்கிறார்களே ஒழிய, என்றைக்கும் நாடளுமன்றத்தைக் கலந்துகெண்டு இவர்கள் செய்வதில்லை. நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் இடம்பெறுவதற்குக்கூட போராட வேண்டியிருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியிலும் இந்தித் திணிப்பு இருந்தது . அப்போது அவர்களிடம் கொஞ்சம் ஜனநாயகப் பண்பு இருந்தது. இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை அவர்கள் மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது என்ற உறுதியைத் தந்தார்கள். அந்த உறுதியைச் செயல்படுத்தவும் செய்தார்கள். ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் எந்த உறுதியையும் தருவதுமில்லை. எந்த உறுதியையும் காப்பாற்றுவதும் இல்லை” என்றார் சுப.வீரபாண்டியன்.

நரேந்திர மோடி

பா.ஜ.க மீது தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்வைத்த விமர்சனங்கள் குறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித்தொடர்பாளர் நாராயணனிடம் பேசினோம். ``பண்பாட்டுப் படையெடுப்பு என்று துரைமுருகன் யாரைச் சொல்கிறார் என்பது தெரியவில்லை. ஏனென்றால், `அடைந்தால் திராவிட நாடு... இல்லையேல் சுடுகாடு’ என்று பேசிவிட்டு பிறகு அதைக் கைவிட்டுவிட்டார்கள். ஒரு காலத்தில் நாத்திகம் பேசிவிட்டு, பிறகு `ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று மாற்றிக்கொண்டார்கள்.

ஆங்கிலேயர்களைப் பார்த்து, `தமிழ்நாட்டைவிட்டு தயவுசெய்து போய்விடாதீர்கள். எங்களுக்கு சுதந்திரம் வேண்டாம். நீங்கள் ஆட்சி செய்தால் உங்களுக்கு அடிமையாகவே இருக்கிறோம்’ என்று சொன்னவர்கள் இவர்கள். எனவே, இவர்களெல்லாம் பண்பாடு குறித்து பேசுவது வியப்பாக இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காத ஒரு கட்சி இருக்கிறதென்றால், அது தி.மு.க-தான். மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருந்த நேரத்தில், இவர்கள்தான் சட்டங்களை மதிக்கவில்லை. அப்படிப்பட்டவர்கள் மற்றவர்களைப் பார்த்து சட்டத்தை மதிக்கவில்லை என்றும் ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்றும் சொல்வதற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது.

நாராயணன்

தி.மு.க-வினர் இதுவரை அடுக்குமொழியில் பேசி மக்களை ஏமாற்றி வந்தனர். தமிழகத்தில் பா.ஜ.க-வின் செல்வாக்கு அதிகரித்துவரும் சூழலில், அவர்களின் அடுக்குமொழிப் பேச்சு இனி எடுபடாது என்பதை தி.மு.க தலைவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் அந்த ஏமாற்று பேச்சை நாங்கள் அம்பலப்படுத்துவோம்; அவர்களைத் தோலுரித்துக் காட்டுவோம் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என்ற நாடகமெல்லாம் இனி எடுபடாது.

Also Read: ‘ராம ஜென்மபூமி’க்கு அடுத்து ‘கிருஷ்ண ஜென்ம பூமி’யா?'

இலங்கைத் தமிழர் பிரச்னை, மீத்தேன் விவகாரம், ஸ்டெர்லைட் பிரச்னை, ஜி.எஸ்.டி போன்றவற்றில் மத்தியிலும் மாநிலத்திலும் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது என்ன நிலைப்பாடு எடுத்தது, ஆட்சியில் இல்லாதபோது அந்த நிலைப்பாடுகளை எப்படி மாற்றிக்கொண்டது என்பதையெல்லாம் நாங்கள் அம்பலப்படுத்திவருகிறோம். எனவே, பா.ஜ.க-வைக் கண்டு தி.மு.க பயப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக கருணாநிதி ஆதரவு, கருணாநிதி எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் மக்கள் வாக்களித்துவந்தார்கள். இன்றைக்கு தலைமைக்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, முந்தைய சூழல் வரக்கூடிய தேர்தலில் இருக்காது. அதனால், எந்தக் கட்சி நல்ல கட்சி என்று பார்த்து மக்கள் வாக்களிக்கப்போகிறார்கள். மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் நல்லாட்சி நடந்துகொண்டிருக்கிறது. நரேந்திர மோடி தலைமையை மக்கள் விரும்புகிறார்கள். அதைப் பார்த்து தி.மு.க மிரளுகிறது” என்றார் நாராயணன் திருப்பதி.

உதயநிதி ஸ்டாலின்

பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஆற்றிய அந்த முதல் உரையில், `மிகப்பெரிய ஆபத்து நம்மைச் சூழ்ந்திருக்கிறது’ என்று குறிப்பிட்ட துரைமுருகன்,`அந்த ஆபத்தை எதிர்கொள்வதற்கு இளைய சமுதாயம் வந்தாக வேண்டும். அந்த இளைய சமுதாயத்தை, இதோ உதயநிதியின் பட்டாளத்தை நம்பித்தான் பெற வேண்டும்’ என்று மேடைக்குக் கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினைப் பார்த்து கைகாட்டினார் துரைமுருகன்.

வரக்கூடிய 2021 சட்டமன்றத் தேர்தல் களத்தில் அ.தி.மு.க-வுக்கு தி.மு.க என்கிற ஒரே ஓர் எதிரிதான். ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க என இரண்டு எதிரிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தி.மு.க இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/is-dmk-afraid-of-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக