நீட் தேர்வு அச்சம் காரணமான தற்கொலைச் செய்திகள், நீட் தேர்வுக்கு எதிரான அரசியல் போராட்டங்கள் என அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி, விவாதங்களில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கிறது நீட் தேர்வுக்கு எதிரான நடிகர் சூர்யாவின் காட்டமான அறிக்கை வரிகள்.
நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா எழுதியிருந்த அந்த அறிக்கையில், 'கொரோனா அச்சம் காரணமாக வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக நீதி வழங்கிவரும் நீதிமன்றம், மாணவர்களை மட்டும் நேரடியாக நீட் தேர்வு மையங்களுக்குச் சென்று தேர்வெழுத உத்தரவிட்டுள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வரிதான் தற்போது சர்ச்சையாகியிருக்கிறது.
`நடிகர் சூர்யா, நீதிமன்றத்தின் மாண்பையே குலைத்துவிட்டார்' என்று வெகுண்டெழுந்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
பா.ஜ.க ஆதரவாளர்களும் நடிகர் சூர்யாவின் அறிக்கையை கடுமையாக விமர்சித்துவருகின்றனர். தமிழக பா.ஜ.க-வின் கலை - கலாசாரப் பிரிவுத் தலைவரான காயத்ரி ரகுராம், `நடிகர் சூர்யா, தனது `சூரரைப் போற்று’ பட விளம்பரத்துக்காக இது போன்ற ஸ்டண்ட்களை செய்துவருகிறார்.
நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் பேனர் வைத்துக் கொண்டாடுகிறார்கள். அப்போது சிலர் தவறி விழுந்து இறக்கவும் செய்கின்றனர். எனவே, திரைப்படங்களைத் தடை செய்யலாமா?' என்று ட்விட்டர் வழியே சூர்யாவுக்கு எதிர்க் கேள்வியை முன்வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா எழுதியிருக்கும் அறிக்கை வரிகள் குறித்துப் பேசும் முன்னாள் நீதியரசர் வள்ளிநாயகம், ``நீதிமன்றம் என்பது புனிதமான ஒரு கோயில். அதனால்தான் `Temple of Justice' என ஆங்கிலேயர்கள் பெயர் வைத்தார்கள்.
ஆனால், நடிகர் சூர்யாவோ, `உங்களுக்கு மட்டும் வீடியோ கான்ஃபரன்ஸிங் வைத்துக்கொண்டீர்களே... அது மாதிரியான வசதியை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் ஏன் வழங்கவில்லை?' என்று நீதிமன்றத்தை நோக்கிக் கேள்வி எழுப்பியிருக்கிறார். அந்தக் கேள்வியை அவர் முறையாக நீதிமன்றத்தில்தான் எழுப்பியிருக்க வேண்டும்.
ஏனெனில், ஒரு நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பைத் தவறு என்று சொல்லக்கூடிய உரிமை, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. அதையும்கூட, கீழமை நீதிமன்றத்திலிருந்து மேல்முறையீட்டுக்காகச் செல்லும்போதுதான் சொல்ல உரிமை இருக்கிறது. மாறாக, இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாத மூன்றாவது நபர் தீர்ப்பு குறித்து விமர்சித்தால், அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும்.
இப்படி ஒவ்வொரு தீர்ப்பையும் தனிப்பட்ட நபர்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டால், நீதிமன்றத்தின் மீதான மாண்பே குலைந்துபோகும். இதேபோன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்தான் அண்மையில் பிரசாந்த் பூஷணுக்கு `ஒரு ரூபாய் அபராதம்' செலுத்துமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
சாதாரணமாக ஒரு தலைவர் சிலையில் வேறு ஏதேனும் ஆடையைக் கட்டிவிட்டாலோ, தண்ணீரை ஊற்றிவிட்டாலோ அல்லது சிலையின் கையை உடைத்துவிட்டாலோ மக்கள் கொந்தளிக்கிறார்கள். ஆக, ஒரு சிலையின் மீது எந்த அளவுக்கு மதிப்பு வைத்திருக்கிறார்களோ அதேபோல், தெய்வத்தின் இருப்பிடமான நீதிமன்றத்தின் மீதும் மதிப்பு வைத்திருக்க வேண்டும் அல்லவா...
நான் வழக்கறிஞராகவும் நீதியரசராகவும் நீண்டகாலம் பணிபுரிந்திருக்கிறேன். `என் தாயைப் பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்' என்பதுபோல், நீதிமன்றத்தின் மரியாதையைக் குறைக்கும்விதமாக யார் பேசினாலும் அதை 'கருத்து சுதந்திரம்' என்றெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது!'' என்றார் உறுதியாக.
இந்நிலையில், `நடிகர் சூர்யாவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது' என்று சூர்யாவுக்கு ஆதரவாக 25 வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்த 25 வழக்கறிஞர்களில் ஒருவரான மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், நீதிமன்றம் குறித்து சூர்யா முன்வைத்திருக்கும் அறிக்கை வரிகள் குறித்துப் பேசும்போது, ``எந்தவொரு விஷயத்தையுமே அதனுடன் தொடர்புடைய சம்பவங்களை முன்வைத்துத்தான் பேச முடியும். அந்த வகையில், கடந்த சில நாள்களில் நீட் தேர்வு அச்சத்தால், அடுத்தடுத்து நான்கு பிள்ளைகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
உணர்ச்சிமயமான இந்தத் தருணத்தில், 'நீதிமன்றங்களே வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியே நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, நீட் தேர்வு மாணவர்களை நேரடியாக தேர்வெழுதச் சொல்லியிருக்கிறீர்களே...' என்று கேட்டிருக்கிறார். ஆக, எந்த இடத்திலும் அவமதிப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் கருத்து சொல்லவில்லை. நீதிமன்றத்தின் மேலுள்ள மதிப்பாலும், நீதிமன்றப் பொறுப்பு குறித்த எதிர்பார்ப்பாலும்தான் இப்படியொரு கருத்தை அவர் முன்வைத்திருக்கிறார். நீதிமன்றம் குறித்து நேரடியாக அவமரியாதையான வார்த்தையைச் சொன்னவர் ஹெச்.ராஜா! அவர்மீது யாராவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார்களா?
என்னைப் பொறுத்தவரையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பதே அரிதாகத்தான் கொண்டுவரப்பட வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதற்கெடுத்தாலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கக் கூடாது. ஏனெனில், கருத்து சுதந்திரம் என்பது நமது அடிப்படையான சுதந்திரம். ஒருவர் தன் கருத்தை வெளியிடும்போது எந்தவொரு தனிப்பட்ட மனிதரையும் குறிப்பிட்டு அவமரியாதையான சொல்லால் தாக்குவது கூடாதே தவிர, விமர்சனம் இருப்பதில் தவறில்லை.
அந்தவகையில் பார்க்கும்போது, சூர்யாவின் அறிக்கையில் தனிப்பட்ட நபர்கள் மீதான தாக்குதல் என்று எதுவும் இல்லை. `வாழ வேண்டிய பிள்ளைகள் இப்படி அநியாயமாக இறந்துபோனார்களே...’ என்ற வலியிலும் வேதனையிலும் தனது ஆதங்கத்தை வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறார். அவர் நடிகராக இருப்பதால், அவரது கருத்து எல்லோரையும் போய்ச்சேருகிறது. அவ்வளவுதான்'' என்றார் விளக்கமாக.
ஓய்வுபெற்ற நீதியரசர்கள் ஆறு பேரும் சூர்யாவுக்கு ஆதரவாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான மேனாள் நீதியரசர் கே.சந்துரு இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது,
``நீதிமன்றத்தை யார் விமர்சித்தார் என்பது இங்கே விஷயம் இல்லை. 'நீதிமன்றத்தை விமர்சிக்க முடியுமா, முடியாதா...' என்பதுதான் விஷயம். ஏனெனில், இந்தியாவில் இருக்கக்கூடிய 130 கோடி மக்களும் எந்தவொரு நிறுவனத்தையும் விமர்சனம் செய்யலாம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட நிறுவனம் என்று எதுவும் கிடையாது. செய்யப்பட்ட விமர்சனத்தில் உள்நோக்கம் எதுவும் இல்லாதபோது, அதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி நடவடிக்கை எடுக்க முடியுமா... என்பதுதான் இங்கே கேள்வி. உதாரணமாக, பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கையே எடுத்துக்கொண்டால், பிரசாந்த் பூஷண் சில தவறான தகவல்களைச் சொல்லிவிட்டார். மற்றபடி மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷணின் கருத்து என்பது நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ய வேண்டும் என்பது மாதிரியான எந்த உள்நோக்கமும் கொண்டதல்ல என்றுதான் இப்போது சொல்லிவருகிறார்கள்.
Also Read: சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தால் கடன்! - விபரீத முடிவெடுத்த தனியார் நிறுவன அலுவலர்
இதேபோல நடிகர் சூர்யாவும் ஒரு சமூக ஆர்வலர்; ஏழைக் குழந்தைகளைப் படிக்கவைக்கிறார். இந்தநிலையில், நீட் தேர்வு அச்சத்தால் சில மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்வதைப் பார்த்து ஆதங்கப்பட்டு அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இந்தச் சூழ்நிலையில், சூர்யாவின் அறிக்கையிலுள்ள வரிகள் நீதிமன்றத்தைத் தாக்குவதற்காக சொல்லப்பட்டவையா அல்லது அவரது கருத்தை வலியுறுத்துவதற்காக சொல்லப்பட்டவையா என்றுதான் பார்க்க வேண்டும்.
'நீங்கள் அச்சப்பட்டு நீதிமன்றங்களை மூடியிருக்கும்போது, மாணவர்களை அச்சமின்றி தேர்வெழுதச் சொல்கிறீர்களே, நியாயமா...' என்று கேட்கிறார். அவ்வளவுதான். நாட்டில் முக்கியமான பிரச்னைகள் ஆயிரம் இருக்கும்போது இதெல்லாம் ஒரு பிரச்னையே கிடையாது. ஏனெனில், அந்த அறிக்கையில் `உயிருக்கு பயந்து...' என்று அவர் குறிப்பிட்டிருப்பதை எந்தவகையில் தவறு என்று சொல்ல முடியும்... அப்படியென்றால், உயிருக்குப் பயப்படுவதே தவறா?
உதாரணமாக, வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஒருவரைக் காப்பாற்றுவதற்காக நீச்சலே தெரியாத நானும் தண்ணீருக்குள் குதித்தால், நான் தைரியசாலி அல்ல... முட்டாள்! மாறாக, கரையிலிருந்துகொண்டே `காப்பாத்துங்க...' என்று கத்தலாம். இது மாதிரியான சூழ்நிலைதான் இந்த விவகாரமும். எனவே, இதில் நீதிமன்ற அவமதிப்புக்கு எந்தவிதமான முகாந்திரம் இருக்கிறது?
அடுத்து, சூர்யாவின் அறிக்கை குறித்த செய்திகளை எல்லோருமே தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஏன் ஒரேயொரு நீதிபதிக்கு மட்டும் கோபம் வருகிறது... அவர் ஏன் தலைமை நீதிபதிக்கு சுயேச்சையாக ஒரு கடிதம் எழுதுகிறார்... அப்படி எழுதும்போதும்கூட, `இந்த நீதிமன்றத்துக்கு இதை விசாரிக்க அதிகாரம் இருக்கிறதா, இல்லையா’ என்பதுகூட தெரியாமல் எப்படி எழுதுகிறார்?
ஏனெனில், நீட் சம்பந்தமான அனைத்து உத்தரவுகளையும் உச்ச நீதிமன்றம்தான் பிறப்பித்திருக்கிறது. அப்படியிருக்கும்போது, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கேள்வி கேட்டு எப்படி கடிதம் எழுத முடியும்?
Also Read: `மனம்விட்டுப் பேசினோம்; பெரும் கனவு புரிந்தது!' - மகனை நீட் தேர்வுக்கு அனுப்பாத பெற்றோர்
இப்படி எல்லா விஷயங்களுக்குமே `நீதிமன்ற அவமதிப்பு' வழக்கை வைத்துத்தான் தன்னுடைய கௌரவத்தை நீதிமன்றம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதனால்தான் நாங்கள் சொல்கிறோம்... `சூர்யா உணர்ச்சிவசப்பட்டு பேசினாரோ இல்லையோ... ஆனால், நீதிமன்றம் இந்த விஷயத்தில் பெருந்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும்' என்று. எனவே, இதில் சரியா, தவறா என்ற விவாதத்துக்குள்ளேயே நாங்கள் போகவில்லை.
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு கேட் பாஸ் வழங்கக்கூடிய அதிகாரம் தலைமை நீதிபதிக்கு இருக்கிறது. எனவே, அவர் இதை நியாயமாகப் பரிசீலிப்பார் என்றுதான் நாங்கள் எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்திருக்கிறோம். 'வழக்கை எடுத்துக்கொள்ள வேண்டாம்' என்றுகூட தலைமை நீதிபதி முடிவெடுக்கலாம். அவரை யாரும் இதற்காக வற்புறுத்த முடியாது.
ஒருவேளை இந்த வழக்கில், தலைமை நீதிபதி கேட் பாஸ் கொடுத்தால், அதன் பிறகுதான் நீதிமன்றத்தின் அதிகார எல்லை பற்றி விவாதிக்க வேண்டிவரும். அதுவும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் செய்ய வேண்டியதுதான். மற்றபடி ஓய்வுபெற்ற நீதியரசர்கள் என்ற வகையில், 'சம்பந்தம் இல்லாத விஷயத்தில் நாம் ஏன் தலையிட வேண்டும்' என்ற எங்கள் கருத்தைத்தான் கேட்டிருக்கிறோம். ஆக, இந்த விவகாரத்தில் புகார் எழுப்பியிருப்பவரும், புகாரில் ஆதாரம் இல்லை என்று கூறுபவர்களுமாக இரு தரப்புமே நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்தாம்'' என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/judiciary/former-judges-comment-on-suryas-neet-statement
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக