Ad

புதன், 16 செப்டம்பர், 2020

``இப்பத்தான் எனக்கு உசுரு வந்திருக்கு!" - விகடன் உதவியால் நெகிழ்ந்த வனிதா

பட்டுக்கோட்டை அருகே, விபத்தில் அடிப்பட்டதால் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட கணவரின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அவருடைய மனைவி வனிதா துயரத்தில் தவித்ததை பற்றி விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதை தொடர்ந்து, அவருக்கு உதவ நினைத்த விகடன் வாசகர்கள் அவருக்கு சேர்க்க நினைத்த தொகையை, நாம் பகிர்ந்திருந்த அவர்களின் வங்கிக்கணக்கு மூலமாக வனிதாவுக்கு அனுப்பிவைத்து உதவினர். இப்போது ரூ 1,44,710 வனிதாவுக்குக் கிடைத்துள்ளது.

''இக்கட்டான இந்தக் கொரோனா காலகட்டத்துல, இந்த உதவியை மறக்கவே மாட்டோம். எங்களுக்கு உதவி செஞ்ச நல்ல மனசுகளுக்கு எல்லாம் நன்றி'' என்று நெகிழ்ந்தார் வனிதா. விரைவில் அவர் கணவருக்கு சிகிச்சை தொடங்கப்பட உள்ளது.

வங்கி கணக்கு புத்தகம்

பட்டுக்கோட்டை அருகே உள்ள அழகியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், 28 வயதாகும் நீலகண்டன். அவர் மனைவி, 24 வயதாகும் வனிதா. இந்தத் தம்பதிக்கு 10 வயதிற்குட்பட்ட இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். டிராக்டர் டிரைவரான நீலகண்டன் கூலி அடிப்படையில் விவசாயப் பணிகளுக்கு டிராக்டர் ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு டிராக்டரை ஓட்டிச் சென்றபோது நாய் ஒன்று குறுக்கே வந்துவிட, பதறிய நீலகண்டன் நாயைக் காப்பாற்றுவதற்காக வேகமாக பிரேக்கை அழுத்தியதில் நிலை தடுமாறி டிராக்டரிலிருந்து தூக்கி வீச்சப்பட்டார்.

இதில் நீலகண்டனுக்கு இடுப்புப் பகுதியில் பலமான அடிபட்டதில் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதியுற்றார். அரசு மருத்துவமனைக்குச் சென்றவருக்கு முதலுதவி சிகிச்சை கொடுத்து, கொரோனா பரவி வருவதால் உடனடியாக ஆபரேஷன் செய்ய முடியாது என சிறுநீர் கழிப்பதற்காக வயிற்றில் டியூப் வைத்து, அதில் பாக்கெட் பொருத்தி அனுப்பி வைத்து விட்டனர்.

நீலகண்டன் வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் அடுப்பு எரியும் என்ற நிலையில், அந்த ஏழைக் குடும்பம் சின்ன குடிசை வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டது. 20 நாள்களுக்கு ஒரு முறை நீலகண்டனுக்கு டியூப் மாற்ற வேண்டும் என்ற நிலை தொடர்ந்தது. கணவரின் சிகிச்சைக்குப் பணம் இல்லை, மறுபக்கம் சோறு வடிக்க அரிசி இல்லை. இந்த நிலையில் மூன்று பிள்ளைகளை வைத்துக்கொண்டு நீலகண்டனின் மனைவி வனிதா கடும் துயரத்தில் தவித்தார். எப்படியாவது கணவருக்கு சிகிச்சை அளிக்க வழிகிடைத்துவிடாதா என்று கண்ணீர் வடித்தார்.

வனிதாவின் நிலை குறித்து விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதை படித்த விகடன் வாசகர்கள் பலர், உடனே வனிதாவிற்கு உதவ நேசக்கரம் நீட்ட முன்வந்தனர். இதையடுத்து நீலகண்டனின் அம்மாவுடைய வங்கிக் கணக்கு எண்ணைப் பெற்று வாசகர்களிடம் கொடுத்தோம். அவர்கள் தங்களால் முடிந்த தொகையை நேரடியாக அந்த வங்கிக் கணக்கிற்கு செலுத்தினர்.

நீலகண்டன் மனைவி வனிதா

இதில் மொத்தம் ரூ.1,44,710 வரை பணம் சேர்ந்துள்ளது. ''இனி வீட்டுக்காரருக்கு ஆபரேஷன் செஞ்சுடலாம். எங்க துயரமெல்லாம் தீரப்போகுது'' என தன் பிள்ளைகளைக் கட்டிக்கொண்டு கண்ணீரில் கரைந்தார் வனிதா.

''மூணு மாசமா கணவர் படுத்த படுக்கையாகிட்டதால வீட்டுல சுத்தமா காசு இல்ல, வடிக்க அரிசியும் இல்லை. அவரை விட்டுட்டு வேலைக்கும் போக முடியலை. வலி தாங்காம ராத்திரி முழுக்க முணகிக்கிட்டே இருப்பாரு. அவருக்கு ஒத்தாசையா நானும் தூங்காம முழிச்சுருப்பேன்.

'இப்படியே டியூப் வெச்சுக்கிட்டே இருந்தா உசுருக்கு ஆபத்தாகலாம், தனியார் ஆஸ்பத்திரியில ஆபரேஷன் செஞ்சா சரியாகிடும்'னு உறவுக்காரவுக சொன்னாங்க. பயந்துபோன நான் கையில காசு இல்லாம சிகிச்சைக்காக அல்லாடினேன். யாராவது உதவ மாட்டாங்களானு மருகி நின்னேன். அப்போதான் தானா தேடி வந்து எங்க நிலையை விகடன்ல எழுதுனீங்க.

எங்க வங்கிக் கணக்குக்கு, நல்ல மனசுக்காரங்க பணம் அனுப்பத் தொடங்கினாங்க. மொத்தம் ரூ.1,44,710 கிடைச்சிருக்கு. உடனே ஆபரேஷன் செய்யுறதுக்காக டாக்டர்கிட்ட பேசினோம். வர்ற வியாழக்கிழமை வந்து பெட்ல சேரச் சொல்லியிருக்காங்க. தஞ்சாவூர்ல உள்ள பெரிய தனியார் ஆஸ்பத்திரியில சேர்க்கப்போறோம்.

நீலகண்டன் குடும்பம்

இப்பதான் என் வீட்டுக்காரர் முகத்துல சிரிப்பும், எனக்கு உசுரும் வந்திருக்கு. எல்லாம் நல்லபடியா நடக்கும்ங்கிற நம்பிக்கை வந்திருக்கு. சின்ன உசுருக்குக்கூட தீங்க நினைக்காத என் வீட்டுக்காரர் துயரத்தையும், எங்க கண்ணீரையும் விகடன் துடைச்சிருக்கு. இதை ஆயுசுக்கும் மறக்கமாட்டோம்'' என நெகிழ்ந்தார்.

நல் உள்ளங்களுக்கு நன்றிகள்!

நீலகண்டன், வனிதா தம்பதிக்குப் பண உதவி செய்தவர்கள்

ராஜம் - ரூ.500

சரவணன் - ரூ.500

கோமளம் - ரூ.1,000

ராஜகுணசீலன் - ரூ.15,000

குப்புசாமி - ரூ.1,000

எவ்லின் தயா ஜான்ஸ் - ரூ.2,000

சிவசங்கர் - ரூ.1,000

மதுரைவீரன் - ரூ.2,000

செந்தில் வேல் - ரூ.21,710

செந்தில் குமார் - ரூ.10,000

ஆர். சிவராமன் - ரூ. 5,000

ஜெகதீசன் - ரூ.5,000

சதீஷ் குமார் - ரூ.1,000

ஜனார்த்தனன் - ரூ. 3,000

ராமு - ரூ.5,000

சேகர் - ரூ.10,000

அந்தோணி பிரசாத் - ரூ.10,000

முருகேசன் - ரூ.1,000

பெயர் குறிப்பிடாதவர்கள் - ரூ.50,000



source https://www.vikatan.com/lifestyle/vikatan-readers-helped-pattukottai-woman-vanitha-to-save-her-husband

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக