Ad

புதன், 16 செப்டம்பர், 2020

500 மரக்கன்றுகள், 1000 பனை விதைகள்... வறட்சி கிராமத்தை `பசுமை'யாக்கும் கரூர் இளைஞர்கள்!

ஓசோன் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஓசோன் மண்டலத்தைப் பாதுகாக்க ஐ.நா சபை ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 16-ம் தேதியை ஓசோன் தினமாகக் கொண்டாடுகிறது. ஓசோன் படலம் என்பது நமது பூமியைப் போர்த்தியிருக்கும் ஒரு மெல்லிய வாயுப் படலமாகும். இன்றைய நவீன உலகம் இந்தப் படலத்துக்கு ஓட்டை போடும் வேலையைச் செய்து வருகிறது. அந்த ஓட்டையை அடைக்கும் பணியை மரங்கள் செய்கின்றன. ஓசோன் தினத்தை முன்னிட்டு மரம் வளர்ப்பில் ஈடுபடும் இளைஞர்களைச் சந்திக்கச் சென்றோம்.

`இளைஞர்கள் 24 மணிநேரமும் சமூக வலைதளங்களில் வீணாகப் பொழுதைக் கழிக்கிறார்கள், சமூக வளர்ச்சிக்கு அவர்கள் துரும்பையும் கிள்ளிப்போடுவதில்லை' என்று இளைய தலைமுறையினர்மீது இருந்த குற்றச்சாட்டு எல்லாம் மலையேறிவிட்டது. மரக்கன்றுகள் நடுவது, இயற்கை விவசாயம் செய்வது என்று சூழலுக்கும் மனிதகுலத்துக்கும் நன்மை பயக்கும் காரியங்களில் பல இளைஞர்கள் இறங்கி, செவ்வனே செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள்.

தொடக்கப்பள்ளியில் இளைஞர்கள் நட்ட மரங்கள்

அந்த வகையில், கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்தில் உள்ள வடசேரி என்ற வறட்சி கிராமத்தை, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, 500 மரக்கன்றுகள், 1,000 பனைவிதைகளை விதைத்து, பசுமையாக்கும் முயற்சியில் சீரும் சிறப்புமாக இறங்கியிருக்கிறார்கள்.

வடசேரி கிராமம் என்பது, கரூர் மாவட்ட எல்லையாகவும், திருச்சி மாவட்ட எல்லையையொட்டியும் உள்ள கிராமம். வானம் பார்த்த பூமி. `மழைபெய்தால்தான் விவசாயம்' என்ற நிலை. ஆனால், மழையும் இங்கு அதிகம் பெய்யாது என்பதால், இங்குள்ள ஏரியும் விளைநிலங்களும் `வறண்டபூமி'யாகக் காட்சியளிக்கின்றன. சொற்பமாக நடக்கும் விவசாயத்திலும் கிணறு பாசனம் மூலம் `வெள்ளாமை' நடக்கிறது.

மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் இளைஞர்கள்

ஆனால், பல கிணறுகளும், தங்களது அகல வறட்சி வாயைக் காட்டி, `தண்ணீர் தண்ணீர்' என்று தவிக்கின்றன. மரங்களும் இங்கு குறைவு. ஆனால், வறட்சியிலும் தழைத்தோங்கி வளரும் சீமைக்கருவேலம் மரங்கள், வடசேரி கிராமத்தைச் சுற்றி, நீக்கமற `பசுமை'யாக வளர்ந்திருக்கின்றன. இப்படி, தங்கள் கிராமத்தை பீடித்த வறட்சியை போக்கி, பசுமையாக்கும் முயற்சியில் இளைஞர்கள் இறங்கியிருக்கிறார்கள்.

கிராமத்தின் வறட்சியைப் போக்கும் காரியத்தில் இறங்கியிருக்கும், இளைஞர் சக்திவேலிடம் பேசினோம்.

``கரூர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமாக வடசேரி இருப்பதால், அரசும் எங்களை வஞ்சிக்கிறது, இயற்கையும் வஞ்சிக்கிறது. எங்க ஊர் வழியாக அரியாறு என்ற காட்டாறு ஓடுகிறது. அந்த ஆற்றில், கடவூர் ஒன்றியத்தில் உள்ள பொன்னணியாறு நிறைந்தால், அதன்மூலமாகத் தண்ணீர் வரும். எங்க ஊரில் 344.4 ஏக்கரில் உள்ள வடசேரி ஏரி நிறையும். அந்த ஏரி நிறைந்தால், அதன்மூலமாக இங்குள்ள நூற்றுக்கணக்கான கிணறுகளில் தண்ணீர் ஊறி, அதன்மூலமாகக் கிராமத்தில் உள்ள ஆயிரக்கணக்கான நிலத்தில் விவசாயம் நடக்கும்.

சக்திவேல்

ஆனால், கடவூர் மலைப்பகுதியில் மழை அதிகம் பெய்யாது போனதால், கடந்த 20 வருடங்களாகவே அரியாற்றில் தண்ணீர் வரலை. வடசேரி ஏரியும் நிரம்பலை. இதனால், கிணறுகளும் வத்திப்போய் 20 வருஷமா எங்க ஊரு விவசாயம் பொய்த்துப்போச்சு. இதனால், இங்குள்ள மக்கள் வருமானத்துக்கு வழியில்லாம தவிக்கத் தொடங்கினாங்க. ஆடு, மாடுகள் வளர்த்தாலும், அதற்கும் தண்ணீர் கொடுக்க முடியாம, மேய்க்க பசுமை இல்லாம அல்லாடி வந்தார்கள்.

இந்த நிலையில்தான், இளைஞர்களெல்லாம் ஒன்றுசேர்ந்து, எங்க கிராமத்தின் வறட்சியைப் போக்க, களத்தில் இறங்க முடிவெடுத்தோம். 2000-மாவது வருஷமே, 110 இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, `வடசேரி பகத்சிங் நற்பணி மன்றம்' என்ற அமைப்பைத் தொடங்கினோம். அதற்கு நான்தான் தலைவர். ஆனால், ஆரம்பத்துல சரியா செயல்படலை. 2011-ம் வருஷம் அமைப்பை முறையா பதிவுசெஞ்சோம். அதன்பிறகு, எங்க ஊர்ல இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில், புங்கன், வேம்பு, பூமரம் என்று 2013-ம் வருஷம், 40 மரக்கன்றுகளை நட்டோம்.

மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் இளைஞர்கள்

நட்டதோடு விடாம, தினமும் இளைஞர்கள் நாங்களே குடங்களில் காலையும் மாலையும் தண்ணீர் பிடிச்சுட்டு வந்து ஊற்றி காபந்து பண்ணினோம். எல்லா மரக்கன்றுகளும் தழைச்சு வளர்ந்துச்சு. அதேபோல், 2016-ம் ஆண்டு, எங்க ஊர் பிடாரி அம்மன் கோயில்ல 20 தென்னைக் கன்றுகளை வச்சு, அதற்கு ஊர் பொது பைப்பில் இருந்து சொட்டுநீர் மூலம் பாசனம் கிடைக்கச் செய்தோம். சொட்டுநீர் அமைப்பை இளைஞர்களே சேர்ந்து பணம் போட்டு, செலவழிச்சு செஞ்சோம்.

அதேபோல், ஊருக்கு மேற்கால உள்ள நாகம்மாள் கோயில் வளாகத்தைச் சுற்றி, வேம்பு, புங்கன், ஆலம், அரசு, வாழை என்று 100 மரக்கன்றுகளை நட்டோம். அதற்கும் முறையா தண்ணீர் பாய்ச்சி வளர்த்தெடுத்தோம். இந்த நிலையில், எங்க ஊரில் 344.4 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக வறண்டு, சீமைக் கருவேலம் மரங்கள் மண்டிக்கிடக்கும் வடசேரி ஏரிக்கரையில், கடந்த வருஷம் 1,000 பனைவிதைகளை விதைச்சோம்.

உயர்நிலைப் பள்ளியில் இளைஞர்கள் நட்ட மரக்கன்றுகள்

அதேபோல், எங்க ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் புங்கன், மலைவேம்பு, ஆப்பிரிக்கா மகாகனி, வேம்பு என்று 50 மரக்கன்றுகளை நட்டோம். அந்த மரக்கன்றுகளுக்கும் இளைஞர்கள் நாங்களே தண்ணீர் பாய்ச்சி வளர்த்தோம். இதைத்தவிர, ஊரைச்சுற்றி உள்ள பொது இடங்கள், நாகம்மாள் கோயிலுக்கு முன் உள்ள விளையாட்டு மைதானத்தைச் சுற்றி என்று 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். அந்த மரக்கன்றுகளைச் சுற்றி, வேலி அல்லது இரும்புக்கூண்டு வைத்து, தகுந்த முறையில் பாதுகாத்து வருகிறோம்" என்றார்.

அடுத்து பேசிய, அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜெகதீசன்,

``எங்க ஊர்ல ஆரம்பத்துல அரசு தொடக்கப் பள்ளியில் அத்தனை மரக்கன்றுகளும், எங்களது கண்ணும் கருத்துமான கவனிப்பில் நல்லா வளர்ந்து, இப்போ மரங்களாயிட்டு. அதேபோல், தொடர்ந்து நாங்க வைத்த மரக்கன்றுகளுக்கு உரிய பாதுகாப்பையும், விடாமல் நீர்பாய்ச்சும் முயற்சியையும் கடைப்பிடிச்சு, இப்போ 500 மரக்கன்றுகளையும் வளர்த்துட்டோம். அதேபோல், எங்க ஊர்ல யாராச்சும் திருமணம் பண்ணினா, அந்தத் திருமண ஜோடி, இரண்டு மரக்கன்றுகளையும், மரக்கன்றுகளைப் பாதுகாக்க கம்பிவலை கூண்டையும் அன்பளிப்பா தரணும்னு அறிவிச்சோம். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ். பல கல்யாண ஜோடிங்க ஆர்வமா அப்படிப் பங்களிப்பைச் செய்ய ஆரம்பிச்சாங்க. அவங்க தரும் மரக்கன்றுகளை, அவர்களை வைத்தே நட வைத்தோம். தினமும் காலையும் மாலையும் எங்க அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் டூவீலர் மூலம் குடங்களில் தண்ணீர் பிடிச்சுக்கிட்டு போய், மரக்கன்றுகளுக்கு ஊற்றணும்.

ஜெகதீசன்

இதை எல்லா இளைஞர்களும், `முறை' வச்சுக்கிட்டு, மாறி மாறி ஊத்தி, பதமா மரக்கன்றுகளை வளர்த்து வருகிறோம். அதோடு, விரைவில் கிராமத்தில் உள்ள பொது இடங்களில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகளை உருவாக்க இருக்கிறோம். அப்படி செஞ்சுட்டா, எங்க ஊரைச் சுற்றி இயற்கைச் சூழல் அருமையாக மாறிவிடும். அதன்மூலமாக, இயற்கை சூழ்நிலை மாறி எங்க ஊர்ல நல்லா மழை பெய்யும். அப்படி நல்லா மழை பெய்யும் சூழல் வரும்போது, எங்க ஊர் ஏரியும் கிணறுகளும் இயற்கையாகவே நிரம்பி வழியும் வாய்ப்பு ஏற்படும். அதன்மூலமாக, பொய்த்துப்போன விவசாயமும் நல்லா நடக்க ஆரம்பிச்சுரும். அந்த நிலை வரும்வரையில், எங்களின் இந்தப் பசுமைப்புரட்சி வேட்கை தொடரும்" என்றார் முத்தாய்ப்பாக!

பசுமை இளைஞர்களுக்கு வாழ்த்துகள்!



source https://www.vikatan.com/news/environment/karur-village-youngsters-planted-500-trees-to-retrieve-greenery-in-their-village

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக