Ad

வியாழன், 17 செப்டம்பர், 2020

அன்னா ஹசாரேவின் போராட்டப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்-ஸும் பா.ஜ.க-வும் இருந்தனவா?

மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது ஏராளமான ஊழல் புகார்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், 2 ஜி ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், நிலக்கரி ஊழல் என்று ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் வரிசைகட்டின. அந்த நிலையில், 2011-ம் ஆண்டு அன்னா ஹசாரே தலைமையில் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் டெல்லியில் முன்னெடுக்கப்பட்டது. `ஊழலுக்கு எதிரான இந்தியா’ (India Against Corruption) என்ற பெயரில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தின் தாக்கம் இந்தியா முழுவதும் ஏற்பட்டது. அதற்கு ஆதரவாகப் பெருமளவில் மக்கள் திரண்டனர்.

பிரசாந்த் பூஷண்

தற்போதைய டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் அந்த இயக்கத்தின் முக்கிய கர்த்தாக்களாக இருந்தனர். 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கு, அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டமும் முக்கியக் காரணம் என்று கருதப்படுகிறது. தற்போது, அந்தப் போராட்டம் குறித்து பிரசாந்த் பூஷண் ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

அன்னா ஹசாரேவின் போராட்டத்தை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்ஸும் பா.ஜ.க-வும்தான் என்பது அந்தக் குற்றச்சாட்டு. `காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ்-ஸும் பா.ஜ.க-வும் இணைந்து வகுத்த திட்டம் அது’’ என்றும், ``அவர்களின் பின்னணியை அப்போது கவனிக்கத் தவறிவிட்டேன்’’ என்றும் பிரசாந்த் பூஷண் கூறியிருக்கிறார்.

பிரசாந்த் பூஷண் கூறியிருக்கும் குற்றச்சாட்டு குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான எம்.ஜி.தேவசகாயத்திடம் பேசினோம். ``2009 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுவிடுவோம் என்று பா.ஜ.க-வினர் நினைத்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. அதன் பிறகு, பல்வேறு துறைகளில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்டவர்களை வைத்து பல பிரிவுகளை அமைத்தனர். அவற்றில் ஒன்றுதான் `ஊழலுக்கு எதிரான இந்தியா.’ அன்னா ஹசாரேவை உள்ளே கொண்டுவந்தார்கள்.

அவர், ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அதற்கு ஊடகங்களில் மிகப்பெரிய அளவுக்கு கவரேஜ் கிடைத்தது. வேறு எந்தப் போராட்டத்துக்கும் அவ்வளவு மீடியா கவரேஜ் கிடைக்காத நிலையில், அந்தப் போராட்டத்துக்கு மிகப்பெரிய கவரேஜ் கிடைத்ததன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் பா.ஜ.க-வும் இருந்தன. அது, பிரசாந்த் பூஷணுக்கு எப்படித் தெரியாமல் போனது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

அர்விந்த் கெஜ்ரிவால்

அன்னா ஹசாரேவைத் தவிர அந்தப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய அர்விந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் உள்ளிட்டோருடன் எனக்கு நேரடி அறிமுகம் உண்டு. `ஊழலுக்கு எதிரான இந்தியா’ எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அது ஆரம்பிக்கப்பட்டபோது நானும் அதில் இருந்தேன். அந்த இயக்கத்தின் அஜெண்டா மற்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களின் பின்னணி ஆகியவற்றை அறிந்த பிறகு அதிலிருந்து விலகி வந்துவிட்டேன். என்னை உள்ளே இழுப்பதற்கு அவர்கள் தொடர்ந்து முயன்றார்கள். அவர்களின் வலையில் நான் விழவில்லை” என்கிறார் அவர்.

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்ஸும் பா.ஜ.க-வும் இருந்ததாக பிரசாந்த் பூஷண் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, ``இது அப்போதே எங்களுக்குத் தெரியும்’’ என்று கூறியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. மேலும், ``எங்களுக்குத் தெரிந்ததை இப்போது பிரசாந்த் பூஷண் உறுதிசெய்திருக்கிறார்’’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோபண்ணா

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு ஊடகப் பிரிவு தலைவரான கோபண்ணாவிடம் பேசினோம்.

``காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிமீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அத்தகைய சூழலில், `ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம்’ என்று அன்னா ஹசாரே தொடங்கினார். ஊழலை ஒழிக்கும் உண்மையன இயக்கம் என்று சொல்லிக்கொண்டு, தேசியக்கொடியையெல்லாம் ஏந்திக்கொண்டு அந்த இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருந்தது என்பது உண்மைதான். ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்பாட்டைக் கண்டறிவது மிகவும் கடினமானது. அதன் செயல்பாடுகள் மிகவும் நுட்பமாக இருக்கும்.

அன்னா ஹசாரேவை ‘காந்தியவாதி’ என்ற போர்வையில் முன்னிறுத்தினர். அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் அவருக்கு நெருக்கமான தொடர்புகள் உண்டு. அதை அவர் மறுத்ததும் கிடையாது. இப்போது, அந்த இயக்கத்தின் தூண்களில் ஒருவராக இருந்த பிரசாந்த் பூஷணே, அந்தப் போராட்டத்தை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்-தான் என்று குற்றம்சாட்டியிருப்பதை புறந்தள்ளிவிட முடியாது” என்றார்.

அன்னா ஹசாரே தலைமையிலான அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தவர் சமூக ஆர்வலர் பானுகோம்ஸ். அவரிடம் பேசியபோது, பிரசாந்த் பூஷணின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். ``பிரசாந்த் பூஷண் கூறுவது தவறு. இந்தியா முழுவதும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. முதலில் அதை ஆரம்பித்தவர்கள் அர்விந்த் கெஜ்ரிவாலும் பிரசாந்த் பூஷணும் யோகேந்திர யாதவும்தான். அப்படியொரு இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர்களும், அதற்கு உருவம் கொடுத்தவர்களும் அந்த மூன்று பேர்தான். அன்னா ஹசாரேவுக்கு காந்தியவாதி என்ற ஒரு இமேஜ் இருந்ததால், அந்த இயக்கத்துக்குத் தலைமை தாங்குமாறு அவரை அழைத்தனர்.

பானுகோம்ஸ்

அவர்களுடன் கிரண் பேடியும் சேர்ந்தார். `நேர்மையான அதிகாரி’ என்று பெயர் வங்கியவர் கிரண் பேடி. அவர் அந்த இயக்கத்துக்குள் வந்தபோது, அவருக்கு எந்த அரசியல் சார்பும் கிடையாது. இந்த ஐந்து பேரும்தான் அந்த இயக்கத்தில் முக்கியப் பங்குவகித்தனர். அந்த இயக்கம் நாடு முழுவதும் பரவி, மிகப்பெரிய அளவில் மக்கள் ஆதரவைப் பெற்றது. கட்சி வித்தியாசமின்றி எல்லாத் தரப்பு மக்களும் அதை ஆதரித்தனர். அந்த இயக்கம் அரசியல் சார்புகொண்டதாக இருந்திருந்தால், அவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்திருக்காது.

அது எப்போதும் மக்களுக்குப் போராடும் இயக்கமாகத்தான் இருக்கும் என்பதில் அன்னா ஹசாரே மிகத் தெளிவாக இருந்தார். எனவே, அர்விந்த் கெஜ்ரிவாலும் பிரசாந்த் பூஷணும் யோகேந்திர யாதவும் அதிலிருந்து வெளியேறினர். `ஆம் ஆத்மி’ என்ற கட்சியை ஆரம்பித்து டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தனர். இப்போது ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருந்ததாக பிரசாந்த் பூஷண் குற்றம்சாட்டுவது தவறு.

காங்கிரஸ் கட்சியில் கட்டுக்கடங்காத அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றதை உலகமே அறியும். எனவே, 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. காங்கிரஸை மக்கள் நிராகரித்தனர். பா.ஜ.க வெற்றிபெற்றது. இதில் எங்கே ஆர்.எஸ்.எஸ் வந்தது... இந்தக் குற்றச்சாட்டு மிகவும் அபத்தமானது. அன்னா ஹசாரே உண்ணாவிரத இயக்கம் நடைபெற்றிருக்காவிட்டாலும் காங்கிரஸ் தோற்றுத்தான் போயிருக்கும்” என்றார் அவர்.

Also Read: டெல்லி வன்முறை வழக்கு: ``தலைவர்கள் பெயர் சேர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான்''- சி.பி.எம் கனகராஜ்!

கிரண் பேடி

ஊழலை ஒழிப்பதற்கு மத்தியில் `லோக் பால்’ சட்டம் கொண்டுவரப்பட வேண்டும், மாநிலங்களில் `லோக் ஆயுக்தா’ கொண்டுவரப்பட வேண்டும் என்பது அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தின் முக்கியக் கோரிக்கை. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு, ஆட்சியதிகாரத்துக்கு இரண்டாவது முறையாக பா.ஜ.க வந்திருக்கிறது. ஆனால், லோக்பால் என்ன கதியில் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அது குறித்து அன்னா ஹசாரே உட்பட அன்றைக்கு போராட்டம் நடத்திய யாரும் வாய் திறப்பதில்லை.

ஊழல் எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிவிட்டார். கிரண் பேடி புதுச்சேரி கவர்னர் ஆகிவிட்டார். அந்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்த பாபா ராம்தேவ் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புகொண்ட தொழிலதிபராகிவிட்டார். தற்போது, `பிஎம் கேர்ஸ்’ நிதி குறித்து பல விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. அன்று ஊழலுக்கு எதிராக முழங்கிய யாரும் இது பற்றிக் கருத்து தெரிவிக்கவில்லை. பிரசாந்த் பூஷணின் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல வேண்டிய அன்னா ஹசாரே எங்கே இருக்கிறார், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதும் தெரியவில்லை.



source https://www.vikatan.com/government-and-politics/politics/was-bjp-propped-up-anna-hazare-movement-in-2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக