Ad

சனி, 12 செப்டம்பர், 2020

மதுரை: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை! - கடிதத்தின் அடிப்படையில் விசாரணை

நீட் தேர்வால் மதுரையைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வதில் ஏற்படும் குழப்பத்தாலும் அச்சத்தாலும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்கதையாகி வருவது தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜோதி துர்கா குடும்பத்தினர்

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையும் மருத்துவக் கனவையும் காலி செய்யும் நீட் தேர்வை தடை செய்யவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த வாரம் அரியலூர் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி மறைவதற்குள் மதுரை மாணவி தற்கொலை செய்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பில் வசிக்கும் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரத்தின் மகள் ஜோதிதுர்கா. இவர் கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெறவில்லை. அதனால், இந்தாண்டும் நீட் தேர்வுக்கு தயாரகி வந்தார்.

அமைச்சர் ஆறுதல்

ஆனால், அவருக்கு நீட் தேர்வு எழுதுவதில் விருப்பமில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் குடும்பத்தினரின் விருப்பத்துக்காக தொடர்ந்து இரவு பகலாக படித்து தேர்வுக்காக தயாராகி வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவருடைய தாயார் அவர் அறைக்கு சென்றபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்த தகவல் அறிந்து பல்வேறு தரப்பினரும் ஜோதி துர்க்கா வீட்டுக்குச் சென்றனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். சமூக செயற்பாட்டாளர் சபரிமாலா, ஜோதி துர்கா பெற்றோரை சந்திக்க வந்த நிலையில் அவரை காவல்துறை அனுமதிக்கவில்லை. துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

ஜோதி துர்கா

`நீட் தேர்வுக்கு தயாராகி நான் மிகவும் சோர்ந்து போய் விட்டேன்’ என்று தன் மனக்குமுறலை அக்கடிதத்தில் பதிவு செய்துள்ளார் ஜோதிதுர்கா. இந்த சம்பவத்தால் மதுரை நகரம் அதிர்ச்சி அடைந்துள்ளது. நாளைய தினம் நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில் ஜோதி துர்காவின் தற்கொலைக்கு நியாயம் கேட்டு பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.



source https://www.vikatan.com/news/crime/student-who-prepared-for-neet-exam-suicide-in-madurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக