Ad

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

பொத்தி வச்ச மல்லிகையும் `மண் வாசனை'யும்... பாரதிராஜா சொன்ன தமிழ் கிராமங்களின் கதை!

எண்பது மற்றும் தொண்ணூறுகளில், சினிமாக் கனவுடன் சென்னையை நோக்கி படையெடுத்த கிராமத்து இளைஞர்களுக்கு பெரும் உத்வேகமாக இருந்தவர் பாரதிராஜா. நகர்ப்புறம் சார்ந்த இளைஞர்களுக்கு மணிரத்னம் ஆதர்சம் என்றால் சிறுநகரம் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு பாரதிராஜா.

பாரதிராஜாவின் வருகைக்கு முன்னாலும் கிராமத்துப் பின்னணி கொண்ட தமிழ் சினிமாக்கள் இருந்ததுதான். ஆனால் அவை பெரும்பாலும் செயற்கையான பூச்சுகளைக் கொண்டிருந்தன. அசலான கிராமத்து மனிதர்களையோ, நிலப்பரப்புகளையோ அவற்றில் பெரும்பாலும் காண முடியவில்லை. எல்லோமே ‘செட்டப்’கள்தான். ஓர் அசலான கிராமத்து வீட்டு திண்ணையைக் கூட பார்க்க முடியவில்லை.

பாரதிராஜா

இந்த நெடுங்கால மரபை உடைத்தவர் பாரதிராஜா. செயற்கையான உள்அரங்குகளில் சிறைப்பட்டிருந்த தமிழ் சினிமாவை கரிசல் மண்ணுக்கு அழைத்துச் சென்று கிராமத்துக் காற்றை சுவாசிக்க வைத்தவர். ஒரு நல்ல சினிமா என்பது உள்ளூர் மண்ணின் கலாசாரத்தை, பண்பாட்டை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். அந்தத் திசையை நோக்கி தமிழ் சினிமாவை வழிநடத்திச் சென்ற முன்னோடி என்று பாரதிராஜாவைச் சொல்ல வேண்டும்.

‘எங்களின் கிராமத்து திரையரங்குகளில் நிறைய சினிமாக்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் எங்கள் கிராமத்தையே திரையில் பார்த்து பிரமித்துப் போனது, பாரதிராஜாவின் படத்தில்தான்’ என்று பதினாறு வயதினிலே படத்தை முன்னிட்டு வைரமுத்து சொன்னது இன்னமும் நினைவில் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் இப்படியெல்லாம் கூட காட்ட முடியுமா, எங்களின் கிராமத்துக் கிழவிகளையும் திண்ணைப் பெரிசுகளையும் நாத்து நடும் பெண்களையும் மரங்களையும் வயல்களையும் ஃப்லிம் சுருளில் பதிய வைக்க முடியுமா?’ என்று இளைஞர்களை பிரமிக்க வைத்து சென்னையை நோக்கி படையெடுக்க வைத்த படமாக ‘பதினாறு வயதினிலே’ அமைந்தது.

ஆனால் பாரதிராஜாவின் படைப்புகளில் ‘கிராமத்துச் சாயல்’ இருந்ததைப் போலவே வணிக அம்சங்களைக் கொண்ட ‘சினிமா’வும் அதிகம் இருந்தது. அசலான கிராமத்து மனிதர்கள் ஒருபுறம் நடமாடிக் கொண்டிருப்பார்கள் என்றால் அதன் இன்னொரு பக்கம் மரத்தின் மறைவில் இருந்து ஒரு கண் மட்டும் தெரிய வெட்கப்பட்டு வானத்தை நோக்கி சிரிக்கும் ‘சினிமா ஹீரோயினும்’ இருந்தார். இப்படி யதார்த்தமும் ரொமாண்டிசஸம் ஆகிய இரு பண்புகளும் கலந்ததுதான் பாரதிராஜாவின் சினிமா.

மண் வாசனை

தலைப்பிற்கு ஏற்றபடி ஒரு தமிழக கிராமத்தின் அசலான வாசனையை வெளிப்பட்ட திரைப்படம். இதில் காட்டப்பட்ட கிராமத்து சந்தைக் காட்சிகள், ஜல்லிக்கட்டு, சடங்குகள், கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தித்தனங்கள், அறியாமை, விரோதங்கள், வீறாப்புகள் போன்றவை நகரம் சார்ந்த பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவமாக அமைந்தன.

சினிமா என்பது மிகப்பெரிய வணிகம் என்பதால் அதில் ரிஸ்க் எடுக்க பெரும்பாலும் தயங்குவார்கள். எனவே முன்னணி நடிகர்களாக இருப்பவர்களை ஹீரோவாக போடுவதுதான் பாதுகாப்பான வழக்கம்.

ஆனால் ஒரு சில இயக்குநர்கள் மட்டுமே இதிலிருந்து வேறுபட்டிருந்தார்கள். எந்தவிதமான சினிமா அனுபவமும் இல்லாத இளைஞர்களை, இளம் பெண்களை நடிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் வெற்றி பெற்றும் காட்டினார்கள். தங்களின் திறமை மீதும் கதையின் மீதும் அவர்கள் வைத்த அசாதாரணமான நம்பிக்கைதான் இதற்கு காரணமாக இருந்திருக்க முடியும். பாலசந்தர் போன்ற முன்னோடிகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த வரிசையில் பாரதிராஜா முக்கியமானவர். அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு பின்பு நன்றாக பிரகாசித்த நடிகர், நடிகையர் ஏராளம்.

‘மண்வாசனை’ திரைப்படத்தின் நாயகனாக ‘பாண்டியன்’ தேர்ந்தெடுக்கப்பட்டதே ஒரு சுவாரஸ்யமான கதைதான். படப்பிடிப்பு துவங்குவதற்குச் சில நாள்கள் முன்பு வரை இதற்கான நாயகன் அமையவில்லை. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பிய பாரதிராஜாவின் காரைச் சுற்றிலும் கூட்டம். அதில் ஓர் இளைஞன் எக்கி எக்கி பாரதிராஜாவைப் பார்த்தான். அவனையே ‘குறு குறு’வென்று பார்த்த பாரதிராஜா, அருகிலிருந்த தயாரிப்பாளரைப் பார்த்து “அந்தப் பையனை கார்ல ஏத்துங்க. அவன்தான் நம்ம படத்தோட ஹீரோ” என்றிருக்கிறார்.

மண் வாசனை

‘மண்வாசனை’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணனுக்கு அதுதான் முதல் திரைப்படம். மூன்று வருடங்களாக சிரமப்பட்டு இப்போதுதான் பாரதிராஜாவின் கால்ஷீட் கிடைத்து படத்தை ஆரம்பிக்கவிருக்கிறார். ‘இத்தனை சாதாரண தோற்றம் கொண்டவனா, நம் திரைப்படத்தின் நாயகன்?’ என்கிற தயக்கமும் அவஸ்தையும் அவருக்குள் எழுந்திருக்கிறது. அவருக்கு மட்டுமல்ல, ஏறத்தாழ ஒட்டுமொத்த படப்பிடிப்பு குழுவிற்குமே பாண்டியனின் சாதாரண தோற்றம் பிடிக்கவில்லை. “அவ்ளோதான்... இவனை ஹீரோவாகப் போட்டால் படம் க்ளோஸ்” என்று அருள்வாக்கு சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் எவருக்குமே பாரதிராஜாவிடம் இதைச் சொல்ல தயக்கமும் அச்சமும் இருந்திருக்கிறது. அவரின் கோபம் பிரசித்தமானது. ஆனால் பாரதிராஜாவும் இதை உள்ளூர அறிந்திருந்தார். எதிர்ப்பு அதிகரிக்க அதிகரிக்க அவருக்குள் இருந்த பிடிவாதவுணர்வும் அதிகரித்திருக்கிறது. “இவன்தான்யா.. படத்தோட ஹீரோ... சூட்டிங் போறோம்” என்றிருக்கிறார்.

ஆக... மதுரை மீனாட்சியம்மன் கோயில் வாசலில் வளையல் கடை வைத்திருந்த பாண்டியன் என்கிற இளைஞன், ஒரே கணத்தில் ஹீரோவான கதை இதுதான். ஏராளமான இளைஞர்கள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் ஒரு தங்க வாய்ப்பு, தட்டில் வைத்தபடி பாண்டியனை நோக்கி வந்ததை காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு சிறிய களிமண் உருண்டைதான். ஆனால் அது ஒரு நல்ல கலைஞனின் கையில் கிடைத்தால் சிறிது நேரத்திற்குள் என்னென்னவோ நகாசு வேலைகள் செய்யப்பட்டு அற்புதமான பொம்மையாகி விடுகிறது. இதைப் போலவே புதுமுக நடிகர்களிடம் வேலை வாங்குவதிலும் அவர்களை மெல்ல மெல்ல மெருகேற்றுவதிலும் பாரதிராஜா விற்பன்னராக இருந்திருக்கிறார். ‘மண்வாசனை’ திரைப்படத்தில் பெரிய குறை கூற முடியாத அளவிற்கு நடித்து முடித்தார் பாண்டியன். கதையும் காட்சிகளும் வலுவாக இருந்ததால் பாண்டியனை ஒரு நாயகனாக தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இது உண்மையில் பாரதிராஜாவிற்கு கிடைத்த வெற்றி.

மண் வாசனை

பாரதிராஜா அறிமுகப்படுத்திய ‘ஆர்’ வரிசை நாயகிகள் பெரும்பாலும் நல்ல புகழையும் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் ஹீரோக்கள் பெரும்பாலும் சோபித்ததில்லை. சுதாகர், ராஜா போன்று நெடும்வரிசையை சொல்லலாம். பாண்டியனும் இதில் சேர்க்கப்பட வேண்டியவர். பாக்யராஜ், கார்த்திக் போன்றவர்கள் மட்டுமே விதிவிலக்கு.

இதைப் போலவே நாயகியின் தேர்வு. இந்தத் திரைப்படத்திற்காக முதலில் பரிசீலிக்கப்பட்டவர் நடிகை ஷோபனா. தேர்விற்காகப் படித்துக் கொண்டிருந்ததால் அவரால் நடிக்க இயலவில்லை. இதற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆஷா கேளுண்ணி என்கிற இயற்பெயர் கொண்ட நடிகை ரேவதி.

ரேவதியின் நடன அரங்கேற்றப் புகைப்படங்கள் எப்படியோ பாரதிராஜா குழுவின் கண்ணில் பட்டதால் இந்த வாய்ப்பு கிடைத்தது. ‘காதல் ஓவியம்’ திரைப்படத்திற்காக முன்பே ரேவதி பரிசீலிக்கப்பட்டார். ஆனால் அப்போது மிகவும் இளம் பெண்ணாக இருந்ததால் தேர்வாகவில்லை. மண்வாசனை திரைப்படத்தில் நடித்த போதும் ரேவதியின் வயது 17-க்குள்தான் இருக்கும்.

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாத, நடிப்பதில் பெரிதும் ஆர்வம் இல்லாத ரேவதி, தற்காலிக முடிவாக சினிமாவிற்குள் நடிக்க வந்தார். ஆனால் பின்னாளில் அவர் ஒரு மிகச்சிறந்த நடிகையாக மிளிர்ந்தது மட்டுமல்லாமல் இயக்குநர் ஆவது வரை உயர்ந்தார்.

மண் வாசனை

‘மண் வாசனை’ திரைப்படத்தில் பாண்டியனோடு ஒப்பிடும் போது ரேவதியின் நடிப்பும் பங்களிப்பும் மிக உயர்ந்த அளவில் இருந்தது. ‘டைரக்டர் நடிச்சுக் காண்பிச்சதை அப்படியே செய்ய டிரை பண்ணேன்’ என்று சொன்னாலும் சில இடங்களில் ரேவதியின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது என்று சொல்ல வேண்டும். குறிப்பாக தன் கனவுக் காதல் சிதைந்து போனதை அறிய நேரும்போது காதலனைக் கூட குறை சொல்லாமல், தான் வேண்டிக் கொண்ட கருப்பசாமியை கேள்வி கேட்டு குமுறும் இடத்தில் ரேவதியின் ஆவேசமான நடிப்பு பிரமிக்க வைக்கிறது. தன் கணவனுக்காக ஊரையே கொளுத்த முயன்ற கண்ணகியின் நவீன பிம்பமாக ரேவதியைக் காண முடிகிறது.

இந்தத் திரைப்படத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக காந்திமதியை சொல்ல வேண்டும். ‘ஒச்சாயி’ என்னும் கிழவியின் வேடத்தில் பட்டையைக் கிளப்பியிருலேந்தார். அவரின் கலைப்பயணத்திலேயே ‘பெஸ்ட்’ என்று இந்தப் பாத்திரத்தைத்தான் சொல்ல வேண்டும்.

‘ஊசி வெடி... பாசி வெடி... விருதுநகர் யானைவெடி... கேட்டுக்கடி ருக்கு... நான் வத்தலக்குண்டு கொக்கு’… என்று குறிப்பிட்ட வட்டார வழக்கின் இழுவையில் காந்திமதி இறைக்கும் சொலவடைகளும் வசனங்களும் அபாரமானது. இப்போது நோக்கும் போது காந்திமதியின் ‘கெட்டப்’ சற்று நகைச்சுவையாகத் தோன்றினாலும் அந்தக் காலத்தில் இதற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள்.

காதுகளில் பாம்படம் தொங்க, கறையான பற்களுடனும், முகச்சுருக்கங்களுடனும் கையில் கம்புடன், வெள்ளைப் புடவையுடன் ஜாக்கெட் அணியாமல் ஒரு தென்தமிழக கிராமத்தின் விதவைக் கிழவியைப் போலவே தோற்றத்திலும் உடல்மொழியிலும் அசத்தியிருக்கிறார் காந்திமதி. இந்தத் திரைப்படத்தின் ‘ப்ரிவியூ’ ஷோவில் காந்திமதியின் அசாதாரணமான நடிப்பைக் கண்ட கமல்ஹாசன், அவரை மிகவும் பாராட்டி அன்று மாலையே பட்டுப்புடவை ஒன்றை பரிசளித்ததாகத் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்த தகவல் ஒன்றின் மூலம் நாம் அறிய வருகிறோம். இதையொட்டியே ‘தேவர் மகன்’ திரைப்படத்திலும் காந்திமதியை கமல்ஹாசன் நடிக்க வைத்திருக்கலாம்.

இது தவிர, ரேவதியின் தந்தையாக விஜயன், வில்லனாக வினுச்சக்கரவர்த்தி, பஞ்சாயத்து தலைவராக கே.கே.செளந்தர், வாத்தியாராக ஜனகராஜ், பெரியகருப்புத் தேவர் என்று பாரதிராஜாவின் படங்களில் வழக்கமாகத் தோன்றுபவர்கள், இதில் நடித்திருக்கிறார்கள். செல்வாக்கு மிகுந்த பெரிய மனிதர்களிடம் கவர்ச்சி காட்டி ஒட்டிக் கொள்வதில் திறமையுள்ள ஆசைநாயகியாக ஒய்.விஜயா நடித்திருக்கிறார். அவரது அடிப்பொடி ஆசாமியாக சூர்யகாந்த்.

மண் வாசனை

இந்தத் திரைப்படத்தில் ‘நிழல்கள்’ ரவியின் பாத்திரம் அநாவசியமான திணிப்பாகத் தெரிகிறது. ஊருக்குள் புதிய ஆசிரியராக வரும் இவர், ரேவதியைக் கண்டு வியந்து ஒருதலையாக காதலிக்கத் துவங்குகிறார். வைரமுத்து எழுதிய புதுக்கவிதைகள், பாரதிராஜாவின் குரலில் பின்னணியில் ஒலிக்க மருகி மருகி காதலிக்கிறார்.

“இந்த மண்ணிலே நடந்த ஓர் உண்மையான சம்பவத்தை கற்பனைப் பெயர்களுடன் கலந்து தந்திருக்கிறேன்” என்று படத்தின் துவக்கத்தில் பாரதிராஜாவின் குரல் சொல்கிறது. எனவே ‘நிழல்கள்’ ரவியின் பாத்திரம், இயக்குநரின் தனிப்பட்ட அனுபவமாக இருப்பதற்கான சாத்தியம் இருக்கிறது.

‘மண் வாசனை’ திரைப்படத்தின் கதைப் போக்கு இதுதான்.

பள்ளிக்கு கூட அரிவாள் எடுத்துப் போகும் வெள்ளந்தியான கிராமத்து இளைஞன் வீரண்ணன். முன்கோபம் கொண்டவன். அவனது முறைப் பெண் முத்துப்பேச்சி. அக்காளின் மகள். அவளுக்கு மாமனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் வரதட்சணை தொடர்பாக இரு குடும்பத்தாருக்கு இடையே பகை நிலவுகிறது.

முத்துப்பேச்சியின் தந்தையான மூக்கையன், குடும்பப் பகை காரணமாக தன் மகளை வீரண்ணனுக்கு திருமணம் செய்து தர மறுக்கிறார். முத்துப் பேச்சியின் காதல் மீது வீரண்ணனுக்கு பாராமுகமும் அலட்சியமும் துவக்கத்தில் இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவளின் மீது காதல் கொள்ளத் துவங்குகிறான்.

ஜல்லிக்கட்டில் நிகழும் ஒரு பிரச்சினை தொடர்பாக ‘மாட்டைப் பிடிப்பவருக்கு என் மகளைத் திருமணம் செய்து தருகிறேன்’ என்று குடிபோதையில் உளறி விடுகிறார் மூக்கையன். வில்லன் சதி செய்து அவ்வாறு சொல்லி விடச் செய்கிறான். பக்கத்து ஊரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், ஏமாற்று வழியில் மாட்டை அடக்கி விட, அவர்கள் பெண் கேட்டு வந்து மல்லுக்கட்டுகிறார்கள். மனமுடையும் மூக்கையன் தற்கொலை செய்து கொள்கிறார்.

மண் வாசனை

வில்லனின் அராஜகத்தை வீரண்ணன் எதிர்க்கிறான். அவனது ஊரும் இதையொரு தன்மானப் பிரச்னையாக எடுத்துக் கொள்கிறது. வில்லன் அடியாட்களை வைத்து வீரண்ணனை அடிக்கத் திட்டமிட, நடக்கும் சண்டையில் ஆட்கள் வீழ்ந்து விட, அவர்கள் இறந்து விட்டார்கள் என்று அஞ்சி ஊரை விட்டு அகன்று ராணுவத்தில் சேர்ந்து விடுகிறான் வீரண்ணன்.

வீரண்ணன் எப்போது திரும்பி வருவான் என்று ஆவலும் காதலுமாக காத்திருக்கிறாள் முத்துப் பேச்சி. வீரண்ணன் திரும்பி வருகிறான். ஆனால் அது நல்ல செய்தியாக முத்துப் பேச்சிக்கு அமையவில்லை. இதன் இடையே பக்கத்து ஊர் வில்லன் மீண்டும் முத்துப்பேச்சியை தூக்கிச் செல்ல வருகிறான்.

இதற்குப் பிறகு நிகழும் சம்பவங்களை உணர்ச்சிகரமாகவும் விறுவிறுப்பாகவும் மீதமுள்ள திரைப்படம் விவரிக்கிறது.

பாரதிராஜாவின் இயக்கத் திறமைக்கு ஒரு காட்சிக் கோர்வையை உதாரணம் சொல்லலாம். முத்துப்பேச்சி பூப்பெய்து விடுகிறாள். வழக்கப்படி அவளது வீட்டார் முறைமாமனின் வீட்டிற்குத் தகவல் சொல்லி அழைத்து முறை செய்யச் சொல்ல வேண்டும். குடும்பப் பகையால் மூக்கையன் மறுத்து விடுகிறார்.

ஆனால் ஊரார் இதை, “வழக்கத்தை விட்றாதப்பா.. என்ன இருந்தாலும் முறை மாமன் உறவு விட்டுப் போயிடுமா?” என்று மூக்கையனிடம் எடுத்துச் சொல்கிறார்கள். இதுவே நகரமாக இருந்தால், இது அவர்களின் ‘தனிப்பிரச்சினை, குடும்பப்பிரச்சினை’ என்று விட்டு விடுவார்கள். ஆனால் கிராமத்தில் இப்படியில்லை. ஒரு குடும்பப் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு அந்த உறவுகள் அறுந்து போகாமல் ஊரே நின்று பஞ்சாயத்து பேசுகிறது.

ஊராரின் வற்புறுத்தல் காரணமாக அரைமனதுடன் ஒச்சாயியின் வீட்டிற்கு செல்கிறார் மூக்கையன். அங்கிருக்கும் கன்றுக்குட்டியின் கழுத்தைத் தடவிக் கொண்டே தரையைப் பார்த்து. ‘பொண்ணு சடங்காயிட்டா.. வந்து முறை செய்யுங்க” என்கிறார். “ஏலெய்.. அந்தக் கன்னுக்குட்டியை அவுத்து விடு. அது போய் மொற செஞ்சிட்டு வரும்" என்று வக்கணையாக நையாண்டி செய்கிறாள் ஒச்சாயி. அசலான கிராமத்து குசும்பு இது.

மண் வாசனை

பிறகு இந்த நிகழ்வு நடக்கும் போது, ‘ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு சேல எடுத்து வெச்சிருக்கு... பொண்ணு அதைக் கட்டினா போதும்’ என்று வீம்பு செய்கிறார் மூக்கையன். ஒச்சாயி கொண்டு வந்த புடவையின் விலை 99 மட்டுமே. “முக்காத் துட்டுக்கு சீல வாங்கி மூணு காசுக்கு நக வாங்கினாலும் மொற மாமன் சீரு.. அதக் கட்டிக்க சிறுக்கிக்கு கொடுத்து வெச்சிருக்கணும்” என்கிறாள் ஒச்சாயி கிழவி.

ஒரு குடும்ப உறவுகளுக்குள் நிகழும் உரசல்கள், வீம்புகள், வீறாப்புகள், சமாதானங்கள் போன்றவை மிகச்சிறப்பாக வெளிப்படும் காட்சிக் கோர்வை இது. இன்னொரு பக்கம் பாரதிராஜாவின் பிரத்யேக பாணியில் வெளிப்படும் காதல் காட்சிகள் உண்டு. முன்பே சொன்னது போல் யதார்த்தமும் புனைவும் கலந்து வெளிப்படும் பாரதிராஜாவின் பாணி.

திரைக்கதையின் போக்கில் பழைமைவாதத்தின் நெடி பலமாக அடிக்கும் காட்சிகளும் உண்டு. ஒரு சூழலில் “என்னைக் கட்டிக்கப் போறவன்தான்.. என்னை அடிக்கலாம்... புடிக்கலாம்’ என்கிறார் ரேவதி. அடுத்த கணம் ரேவதியின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார் பாண்டியன். உடனே ரேவதிக்குள் இருந்த காதல் உணர்வு பெருகியோடுகிறது. அடுத்து ஒரு பாடல் காட்சி. கணவன், மனைவியை அடிக்கலாம் என்கிற வழக்கத்தை உறுதிப்படுத்தும் விதமாக காட்சியை அமைத்திருப்பது நவீன போக்கிற்கு எதிரானது.

இதைப் போலவே கிராமத்தில் நிகழும் விரோதங்களும் சாதியப் பெருமைகளும் அவற்றைத் தொடரும் வன்முறைகளும் பெருமித நோக்கில் ரொமாண்டிசைஸ் செய்யப்பட்டிருக்கின்றன. பள்ளிக்கூடத்திற்கு பென்சில் சீவுவதற்கு கூட அரிவாளை எடுத்துச் செல்கிறான் வீரண்ணன். முறைப் பெண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்கிற்கு தங்களை அழைக்கவில்லை என்பதால் “முறை மாமன் உரிமையை விட்டுத்தரக்கூடாதுடா” என்று ஒச்சாயி எடுத்துத் தந்த அரிவாளோடு சென்று தகராறு செய்கிறான்.

மண் வாசனை

இப்படி சில ஆட்சேபகரமான காட்சிகள் இருக்கின்றன. கிராமத்தில் நிகழும் பழைமைவாத போக்குகளை இயக்குநர் அப்படியே யதார்தத்துடன் பதிவு செய்திருக்கிறாரா, அவற்றை விமர்சிக்க வேண்டிய பொறுப்பு இயக்குநருக்கு இல்லையா என்பதெல்லாம் தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டியது. இதே பாரதிராஜாதான், பின்பு இதே ஜோடியை வைத்து ‘புதுமைப்பெண்’ என்கிற படத்தையும் இயக்கியவர் என்பதையும் நினைவுகூர வேண்டியிருக்கிறது.

இரண்டு ஊர்களுக்கு நடுவே பகை பெரிதாகும் போது பக்கத்து ஊரில் ‘வாக்கப்பட்டு’ சென்றிருக்கும் பெண்கள் பிறந்த வீட்டிற்கு விரட்டியடிக்கப்படுகிறார்கள். இது போன்ற சித்திரிப்புகள், ‘வெள்ளந்தியான’ கிராமங்களின் இன்னொரு பக்க கொடூர யதார்த்தத்தைக் காட்டுகின்றன.

நெருங்கிய உறவுகளுக்குள் நிகழும் திருமணங்களின் மூலம் குறையுள்ள குழந்தைகள் பிறப்பதற்கான சாத்தியம் அதிகம் என்கிறது நவீன மருத்துவம். ஒரு குடும்பத்தின் சொத்து வெளியில் சென்று விடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளில் ஒன்றுதான் ‘அத்த மக... மாமன் மகன்...' திருமணங்கள்.

‘தான் எண்ணியவனைத் தவிர இன்னொருவனுக்கு ஒரு தமிழ்ப்பெண் முந்தி விரிக்க மாட்டாள். அதுதான் இந்த மண்ணின் கலாசாரம்’ என்றெல்லாம் இறுதியில் வரும் டைட்டில் கார்டில் பெருமிதம் பேசுகிறார் பாரதிராஜா. ஆனால் நடைமுறையில் இது எத்தனை தூரம் சாத்தியம் என்பதையும் பார்க்க வேண்டும்.

ஒரு கட்டம் வரை சுவாரஸ்யமாக நகரும் திரைக்கதை, பாண்டியனின் தலைமறைவிற்குப் பின்னால் நிறையவே தடுமாறுகிறது. படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் இயக்குநர் குழு அநாவசியமாக ஓர் அந்நிய பெண்ணை ‘பலி’ கொடுத்திருக்கிறார்கள். போலவே சினிமாத்தனம் பெருகி வழியும் காட்சிகளாக இவை அமைந்திருக்கின்றன.

மண் வாசனை

பாரதிராஜாவின் படங்களுக்கு இளையராஜாவின் இசை ஆதார பலம் என்பதை ‘மண் வாசனை’யும் அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கிறது. பாரதிராஜாவிற்கும் இளையராஜாவிற்கும் இடையில் நிகழ்ந்த ஊடல் காரணமாக சில திரைப்படங்களில் ராஜா பணியாற்றவில்லை. அந்தத் திரைப்படங்களில் பெரும்பாலானவை, பரவலான கவனத்தையும் வெற்றியையும் பெறவில்லை என்பதைக் காணலாம். சக்தியும் சிவனும் போல பாரதியும் ராஜாவும் இணைந்து இயங்கினால்தான் அது பலம். இந்தக் கூட்டணியில் வைரமுத்துவையும் விட்டு விட முடியாது.

இந்தப் படத்தின் ஹைலைட்டான பாடல் என்றால் ‘பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு’தான். இன்றைக்கு கேட்டாலும் அதன் தித்திப்பு குறையாத, துளிகூட சலிப்பை ஏற்படுத்தாத பாடல் இது. எஸ்.பி.பியும் ஜானகியும் மிக அருமையாகப் பாடியிருக்கும் ‘டூயட்’ பாடல். ‘இது சாயங்காலமா... மடி சாயும் காலமா’ என்று வார்த்தைகளில் விளையாடியிருப்பார் வைரமுத்து. இதையே சோக ரசத்திலும் இட்டு விருந்து படைத்திருப்பார் ராஜா.

Also Read: 29 வயதில் கமல் ஏற்ற 60 வயது வேடம்; `இந்தியப் பேரழகி’ ஜெயப்ரதா... `சலங்கை ஒலி' வெற்றி பெற்ற கதை!

படம் வெளிவருவதற்கு முன்பே அதிக ஹிட் ஆகி விட்ட பாடல் ‘அரிசி குத்தும் அக்கா மகளே…’. இதைப் படத்தில் வைக்க இடம் இல்லாமல் பாரதிராஜா தவிர்க்க முயன்றிருக்கிறார். ஆனால் இது மக்களிடையே மிகவும் புகழ் பெற்று விட்ட பாடலாகி விட்டதால் வேறு வழியின்றி அதைப் படத்திற்குள் வைக்க வேண்டியதாயிற்று. கிராமத்து இசையின் சாயல் வலுவாக வெளிப்படும் பாடல்களும் இதில் உண்டு.

என்னளவில் ‘மண் வாசனை’ ஆல்பத்தின் சிறந்த பாடல் என்று ‘ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்’ பாடலைத்தான் சொல்வேன். மலேசியா வாசுதேவனின் குரல் இத்தனை இனிமையானதா என்கிற பிரமிப்பை ஏற்படுத்தும் பாடல்களில் ஒன்று இது. ஜானகியைப் பற்றியெல்லாம் சொல்லவே வேண்டாம். இடையிசைகளில் ராஜாவின் அழுத்தமான முத்திரைகள் அட்டகாசமாக விழுந்திருக்கும்.

மண் வாசனை

ஆனால் பாடலின் இனிமைக்கு முரணாக சில இடங்களில் பரபரப்பான இசைத்துணுக்குகளும் வரும். வேறு ஒரு சூழலுக்கு உருவாக்கப்பட்ட பாடலை இதற்கு உபயோகப்படுத்திக் கொண்டார்களா என்கிற சந்தேகத்தை எழுப்பும் வகையில் இருக்கும்.

‘மண்வாசனை’ திரைப்படத்தின் இன்னொரு பலம் என்று ஒளிப்பதிவாளர் B.கண்ணனைச் சொல்ல வேண்டும். பெரும்பாலான பிரேம்களில் சம்பந்தப்பட்ட நிலவெளியின் வசீகரத்தை அத்தனை அழகியலுடன் பதிவு செய்திருப்பார். பல காட்சிகளில், அண்மைக் கோணங்களில் ரேவதி ஒரு தேவதை போல் தோன்றுவதற்கு ஒளிப்பதிவு பிரதான காரணமாக இருக்கிறது.

போலவே பாண்டியனின் வெள்ளந்தித்தனமும் பல காட்சிகளில் பிரகாசிக்கிறது. ஜல்லிக்கட்டு தொடர்பான காட்சிகள் அருமையாகப் பதிவாக்கப்பட்டிருக்கின்றன. முறைப்பெண்ணுக்காக ஓலை கட்டும் பாண்டியன், அதன் வழியாக ரேவதியைப் பார்க்கும் காட்சி ஒன்றே போதும், கண்ணனின் திறமையைச் சொல்ல. அத்தனை அழகான காட்சிப் பதிவு.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜா பல வெற்றிகளையும் சில வீழ்ச்சிகளையும் சந்தித்துள்ளார். அவரது திரைப்படங்களில் வரும் காட்சிக் கோர்வைகளும் அப்படியே. சில காட்சிகள் யதார்த்தத்திற்கு அருகில் பயணிக்கும் அதே நேரத்தில் வேறு சில காட்சிகள் அவற்றிலிருந்து விலகி மிகு கற்பனையுடன் காற்றில் மிதந்து செல்லும் இறகைப் போல பயணிக்கும். இந்த வசீகரமான கலவைதான் பாரதிராஜாவின் பிரத்யேக பாணி என்றாலும் இதுவே அவரின் பலமும் பலவீனமும் என்று தோன்றுகிறது.

மண் வாசனை

தமிழ் நிலம், அதன் பண்பாடு, கலாசாரம், சமூகம், சடங்கு போன்றவற்றின் கூறுகளை வலுவாகப் பதிவு செய்த திரைப்படங்கள் மிக அரிதானவை. ‘மண் வாசனை’ அதில் உறுதியாக இடம் பிடிக்கும். தமிழகத்தின் இளைய தலைமுறை, குறிப்பாக நகர்ப்புறத்தைச் சார்ந்த இளம் பார்வையாளர்கள், இந்தத் திரைப்படத்தின் மூலம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளமாக இருக்கின்றன.

'மண் வாசனை' படம் குறித்த உங்களின் கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள். இந்தத் தொடரில் அடுத்து எந்தப் படத்தைப் பற்றி பார்க்கலாம் என்பதையும் தெரிவியுங்கள்.


source https://cinema.vikatan.com/tamil-cinema/nostalgia-series-revisiting-bharathirajas-mann-vasanai-movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக