Ad

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

நீட் தேர்வு:`மீள முடியாத வேதனையுடன் கேட்கிறோம்... கைவிடுங்கள்!’ - நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன்

நீட் தேர்வு அச்சத்தால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 12-ம் தேதி ஒரே நாளில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு யார் காரணம் என்று ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் வார்த்தை போர் நடத்தி வருகிறது.

நீட் தேர்வு அச்சத்தில் மரணம்

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று நீட் தேர்வு ஏற்படுத்தி வரும் விபரீதத்தைப் பற்றி வேதனையுடன் பேசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.

Also Read: நீட் தேர்வு: தர்மபுரி, நாமக்கல்லை சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை! - தமிழகத்தை உலுக்கும் மரணங்கள்

``அனிதா முதல் ஜோதி ஸ்ரீதுர்கா வரை பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரணத்தின் துயரத்திலிருந்து மீள முடியாமல் வேதனையுடன் கேட்கிறோம் நீட் எனும் தேசிய தகுதித் தேர்வினை எப்போது கைவிடுவீர்கள்?

சு.வெங்கடேசன்

நீட் எனும் திரிசூலத்தில் மூன்று முனை இருக்கிறது. ஒரு முனை, மாநில அரசின் கல்வி முறையையும், மாநில உரிமையையும் குத்திக் கிழிக்கிறது, மற்றொரு முனை டீச்சிங்கை கொன்று, கோச்சிங்கை கொண்டாடுகிறது, மூன்றாவது முனை, மாணவர்களின் உளவியலை சிதைத்து தற்கொலைக்குத் தள்ளுகிறது. இந்த கொடிய கொலைக்கருவியை இன்னும் எத்தனை குழந்தைகளின் மரணத்துக்குப் பின்பு கீழே போடுவீர்கள்?

மருத்துவ மாணவர் சேர்க்கை சம்பந்தமாக தமிழக சட்டப்பேரவை ஏக மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசுத்தலைவர் திருப்பி அனுப்பினார். அரசமைப்புச் சட்டம் 201-ன் படி மசோதாவை திருப்பி அனுப்பினால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். ஆனால் இன்றுவரை காரணம் தெரிவிக்கப்படவில்லை.

நீட் தேர்வு எழுத வந்தவர்கள்

இது பற்றி நீதித்துறை ஆளுமைகள் கேள்வி எழுப்புவதில்லை. ஆனால், திரைக்கலைஞர் சூர்யா கருத்து கூறினால் உடனே எதிர்வினை புரிகிறார்கள். நீதியும், தேர்வும், மனு நீதியின் சாயலாகவும், சாரமாகவும் மாறிவிடக்கூடாது என்பதால் கேட்கிறோம். நீட்டினை கைவிடுங்கள். கைவிடுங்கள். கைவிடுங்கள்.....'' என்று பேசினார். இவரின் பேச்சு மற்ற மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களை உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/suvengatesan-speech-at-parliament

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக