புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே உள்ள பொன்னன் விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. இவரது மனைவி செல்வம். ராஜாக்கண்ணு-செல்வம் தம்பதியின் மகன் சந்திரசேகரன்(29). ராஜாக்கண்ணு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து ஒன்றில் உயிரிழந்து விடுகிறார். ராஜாக்கண்ணுவின் திடீர் இறப்பால் அந்த குடும்பம் நிலைகுலைந்து போகிறது. குடியிருக்கச் சொந்த வீடும் இல்லை. செல்வத்தின் சகோதரர் அந்த குடும்பத்திற்கு தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுக்கின்றனர்.
தாய் செல்வம் கூலி வேலை செய்து சந்திரசேகரனைப் பட்டப்படிப்பு படிக்க வைத்திருந்தாலும், பல இடங்களில் தேடியும் வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. செல்வமும் உடல் நலக்குறைவால் தொடர்ந்து கூலி வேலை பார்க்க முடியாத சூழலில் குடும்பம் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, சொந்த ஊரில் பிழைக்க வழியில்லை என்பதால், செல்வம் தன் உறவினர்களிடமும் வெளியிலும் ரூ.6 லட்சம் வரையிலும் வட்டிக்குக் கடன் வாங்கி மகன் சந்திரசேகரனைச் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்பி வைத்தார்.
சில மாதங்கள் மட்டுமே வேலை பார்த்த நிலையில், உலகம் முழுவதையும் அச்சுறுத்திய கொரோனா வைரஸால், சந்திரசேகரன் வேலை பார்த்த நிறுவனம் மூடப்பட்டது. தொடர்ச்சியாக 5 மாதங்களுக்கும் மேலாகச் சந்திரசேகரனுக்கு வேலை இல்லாததால், எந்த வருமானம் இல்லை. ஊரில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலை. கடனை எப்படி அடைக்கப்போகிறோம்.

வீட்டிற்கு வந்து என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமல், அங்குப் புலம்பித் தவித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு "தான் வேலை பார்த்த நிறுவனத்தில் இப்போ வேலை இல்லை. சொந்த ஊருக்குப் போகச் சொல்லி கட்டாயப்படுத்துறாங்கம்மா’’ன்னு சொல்லி தாய் செல்வத்திடம் கூறி புலம்பி இருக்கிறார். தாய் ஆறுதல் படுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில் தான், தொடர் மன உளைச்சலிலிருந்தவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சந்திரசேகரனின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து சந்திரசேகரனின் உறவினர்களிடம் கேட்டபோது, “கணவர் இறந்த நிலையில், மகனை மட்டுமே நம்பியிருந்த செல்வம் தனது மகனுக்காக, ஆங்காங்கே வட்டிக்குக் கடனை வாங்கி சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார். 5 மாதங்கள் மட்டுமே அங்கு வேலை பார்த்திருப்பார். அதன்பிறகு தான் கொரோனா பிரச்சினை வந்துவிட்டது.
6 மாசத்துக்கும் மேலாக வேலை இல்லை. செலவுக்கே வழியின்றி கஷ்டப்பட்டிருக்கிறார். வேலை பார்த்த நிறுவனம் வீட்டிற்குப் போகச்சொல்லிக் கூறியிருக்கிறது. வெறுங்கையுடன் எப்படி வீட்டிற்குச் செல்வது என்று யோசித்து, தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரையே நம்பி இருந்த தாய்க்கும் அவரது குடும்பத்திற்கும் தமிழக அரசு நிவாரண உதவி செய்ய வேண்டும். வெளி நாட்டில் தற்போது இதுபோன்ற பலரும் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். அவர்களுக்கும் அரசு உதவிகள் செய்ய வேண்டும்” என்றார்.
source https://www.vikatan.com/news/crime/young-man-suicide-after-losing-job-in-abroad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக