Ad

புதன், 16 செப்டம்பர், 2020

`இந்த நிகழ்ச்சிக்கு நான் வருவதால் எந்த பயனும் இல்லை!’ - ஜெ., முன்னாள் உதவியாளர் பூங்குன்றன்

பட்டுக்கோட்டை அருகே அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளரான பூங்குன்றன், `இருக்கிறதை அனுபவிச்சுட்டு வாழ்ந்தோம்; சென்றோம் என இல்லாமல் அடுத்த தலைமுறைக்கு இயற்கையை விட்டுச்செல்ல வேண்டும்' என பேசினார்.

பூங்குன்றன்

பட்டுக்கோட்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் அரசும் மற்றும் புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்களால் நடத்தப்படும் பசுமை போர்வை அமைப்பும் இணைந்து, `நீர் ஆதாரங்களின் மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம்’ என்ற நிகழ்ச்சி நடத்தின. இதில், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பயன்பாடு இல்லாமல் குப்பை கொட்டும் இடமாக மாறிப்போன 1 ஏக்கர் அளவிலான குளத்தைச் சுத்தம் செய்து குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரியதுடன், நிகழ்ச்சியின்போது குளத்தை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட மரகன்று நடப்பட்டது. மரக்கன்றை நட்டுவிட்டு பேசிய பூங்குன்றன், ``இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரக்கன்று நட்டது எனக்கு உற்சாகத்தைத் தந்தது. என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தபோது, `நான் வருவதால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை, அரசை சேர்ந்த ஒருவரை அழைத்தால் உங்களுக்கு பயன் ஏற்படும்’ என்றேன்.

பூங்குன்றன்

`கண்டிப்பாக நீங்க வரணும்’ என இயற்கையைக் காப்பாற்றத் துடிக்கும் இளைஞர்கள் அழைத்ததால், கலந்து கொண்டேன். `நீர்நிலைகளை ஒட்டியே மனிதன் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டான்’ என சொல்கிறது வரலாறு. உலகில் மூன்றில் இரண்டு பங்கு நீர். இதேபோல் மனித உடலில் 75 சதவீதம் நீர் தான் உள்ளது.

நீரை மதிக்காதவன் தாயை மதிக்கத் தெரியாதவன். காவிரியை நாம் காவிரித்தாய் என்றே அழைக்கிறோம். இதிலிருந்தே நீரின் முக்கியத்துவத்தை நம்மால் உணர்ந்து கொள்ளமுடியும். நீரை நம் முன்னோர்கள் புனிதமாகப் போற்றி பாதுகாத்தனர். 'நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவன் வாக்கு. சாப்பிடாமல் கூட மனிதனால் வாழ்ந்துவிட முடியும். ஆனால், நீரில்லாமல் ஓரிரு நாட்கள்கூட உயிர் வாழ முடியாது.

மரக்கன்று

பருவமழை பொய்த்தது என்பதைவிட, பெய்த மழை நீரை நாம் சரியாக சேமிக்க தவறிவிட்டோம். அதுவே இன்றைய நீர் தட்டுப்பாட்டிற்குக் பெரும் காரணம். நீர் ஆதாரங்களை நம் முன்னோர்கள் பாதுகாத்தனர். அதனால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. காரணம், பஞ்சமில்லாத காலத்திலேயே நீரை சேமிக்க அவர்கள் கற்றிருந்தார்கள். நாம் தான் அவர்களுடைய வழியை பின்பற்றாததால் தண்ணீர் தட்டுப்பாட்டை உருவாக்கிவிட்டு, துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

Also Read: `அப்போது கோடிக்கணக்கில் கொடுக்க வருவார்கள்!' -ஜெ,. உதவியாளர் பூங்குன்றன் வேதனை

நீரை சேமிப்பதற்கு நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியும், நாம் நம் ஆயுளை நீட்டித்துக் கொள்கிறோம் என்று அர்த்தம். நீர் சேமிப்பு முறைகளை நாம் கடைபிடிக்க வேண்டிய அவசரத்தில், அவசியத்தில் இன்று இருக்கிறோம். வருமுன் காப்பதே சிறந்தது. இருக்கிறதை அனுபவிச்சுட்டு வாழ்ந்தோம் சென்றோம் என இல்லாமல் அடுத்த தலைமுறைக்கு இயற்கையை விட்டு செல்ல வேண்டும்” என்றார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வெளியே தலைகாட்டாமல் அமைதியாக இருந்த பூங்குன்றன் தற்போது பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்



source https://www.vikatan.com/news/tamilnadu/jayalalithas-assistant-poonguntran-speaks-in-a-event

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக