இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ, வாடிக்கையாளர்கள் ரூ.10,000-க்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. இந்தப் புதிய விதிமுறையானது செப்டம்பர் 18-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதற்கு முன்னரே ஜனவரி 1, 2020 முதல், ரூ.10,000-க்குமேல் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்மில் பணம் எடுப்பவர்கள் தங்களது மொபைலுக்கு வரும் ஓ.டி.பி எண்ணையும் பதிவிட்ட பின்னரே பணத்தைப் பெற முடியும். ஆனால், இந்த வசதியானது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே இருந்தது. தற்போது இதை மாற்றி 24 மணி நேரமாக உயர்த்தியுள்ளது எஸ்.பி.ஐ. இதனால் வாடிக்கையாளர்கள் வாரத்தின் எல்லா நாள்களிலும், எல்லா நேரங்களிலும் ரூ.10,000-க்குமேல் பணம் பெற டெபிட் கார்ட் பின்னுடன் (PIN) மொபைலுக்கு வரும் ஓ.டி.பி-யையும் வழங்க வேண்டும்.
ஓ.டி.பி என்பது கணினியால் உருவாக்கப்படும் தற்காலிக கடவு எண் ஆகும். இதை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்புத்தன்மை அதிகரிக்கும். மேலும், அங்கீகரிக்கப்படாத பணப் பரிவர்த்தனைகளையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.
இதுபற்றி எஸ்.பி.ஐ நிர்வாகம், ``இப்போது நடைமுறைக்கு வரவுள்ள ஓ.டி.பி விதிமுறை மூலம் 24 மணி நேரமும் ரூ.10,000-க்கு மேல் பணம் எடுக்கலாம். இந்த வசதியானது பாதுகாப்புத் தன்மையை இன்னமும் அதிகரிக்கும். இதை நாள் முழுவதும் அமல்படுத்துவதால் டெபிட் கார்டு பயனாளர்கள் மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கலாம். மேலும், பயனாளருக்குத் தெரியாமல் பணம் எடுத்தல், போலியான கார்டைத் தயாரித்து பயன்படுத்துதல் ஆகியவற்றையும் இந்த விதிமுறையைக் கையாளுவதன் மூலம் தடுக்க முடியும்" என தெரிவித்துள்ளது.
நேஷனல் ஃபைனான்ஷியல் ஸ்விட்ச்!
`நேஷனல் ஃபைனான்ஷியல் ஸ்விட்ச் (National Financial Switch)' என்பது ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தைப் பிற வங்கி ஏடிஏம்களுடன் இணைக்கும் நெட்வொர்க் ஆகும். பிற வங்கிகளின் ஏடிஎம்களுக்கு நேஷனல் ஃபைனான்ஸியல் ஸ்விட்ச் வசதி இன்னமும் உருவாக்கப்படவில்லை என்பதால், தற்போதைய நிலையில் எஸ்.பி.ஐ ஏ.டி.எம் இயந்திரங்களில் மட்டுமே இந்த வசதி இருக்கிறது. இதனால் எஸ்.பி.ஐ கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பிற ஏ.டி.எம்-களைப் பயன்படுத்தும்போது இந்த வசதியைப் பெற இயலாது.
அதே நேரம், பயனாளர்களின் பாதுகாப்புத்தன்மையை இது அதிகரிக்கும் என்பதால், கூடிய விரைவிலேயே இந்த நடைமுறை எல்லா ஏ.டி.எம்-களிலும் பின்பற்றப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
source https://www.vikatan.com/business/banking/sbi-changing-its-atm-cash-withdrawal-rules-from-september-18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக