Ad

வியாழன், 17 செப்டம்பர், 2020

நாய்களுக்கும் வந்துவிட்டது ஹெல்த் இன்ஷூரன்ஸ்... இந்தியாவில் இதுதான் முதல்முறை!

குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கும் வாய்ப்பு இருந்தால், நாய் காதலர்கள் தங்களின் நாயின் பெயரைக் கண்டிப்பாக அதில் சேர்த்துவிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு செல்லத்துக்கு, உடல்நிலை சரியில்லை, விபத்து ஏற்பட்டுவிட்டது என்றால், நம்மைப் போலவே அவற்றுக்கு மருத்துவம் பார்க்க வேண்டியது கட்டாயமாகிறது.

செல்லப் பிராணிகளிலேயே, நம் அனைவராலும் அன்போடு ஏற்றுக்கொள்ளப்பட்ட, காதலிக்கும் அளவுக்கு நம்மோடு பழகி வருகிற செல்லப்பிராணி என்றால் அது நாயைத் தவிர வேறொன்றாக இருக்கவே முடியாது.

Pet dogs | நாய்கள்

ஆனால், நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அதற்கான செலவுகளுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. நம் செல்லப்பிராணிகளான நாய்களுக்கு அப்படியான ஒரு திட்டமும் இல்லையே என யோசிப்பவராக நீங்கள் இருந்தால். இனி கவலையே படாதீர்கள்.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காகவே பிரபல இன்ஷூரன்ஸ் நிறுவனமான பஜாஜ் அலையன்ஸ், 'பெட் டாக் இன்ஷூரன்ஸ்' பாலிசியை (Pet Dog Insurance Policy) அறிமுகம் செய்துள்ளது. இந்த பாலிசியின் மூலம் உங்கள் செல்ல நாய்க்கு தலை சிறந்த மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்க முடியும், ஹாஸ்பிட்டல் பில்லே கட்டாமல்.

Also Read: `செல்லப் பிராணிகளே பெட்டர்!' -பெண்களின் தூக்கத்துக்கு ஆய்வுகள் சொல்வது என்ன?

இந்தத் திட்டத்தின்படி 3 மாதம் முதல் 10 வயதுக்கு உட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு வாழ்நாள் முழுவதும் காப்பீடு பெற முடியும். 3 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரையிலான நாய்க்கு, ஆண்டுக்கு ரூ.315 பிரீமியம் தொகையாகச் செலுத்த வேண்டும். இதில் பெடி கிரீ, நான் பெடிகிரீ, கிராஸ் பிரீட் (pedigree, non-pedigree, cross-bred ) மற்றும் அழிந்து வரும் அரிதான ரக நாய்களுக்கும் காப்பீடு பெற முடியும். இந்தப் புதிய திட்டத்தில் காப்பீடு செய்துவிட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், அறுவைசிகிச்சை ஆகியவற்றைப் பணம் செலவில்லாமல் பெறலாம்.

Pets

இதைத் தவிர மூளைப் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு போன்ற உயிர்கொல்லி நோய்கள், ஓபிடி சிகிச்சை, நீண்ட கால நோய்கள், வெறிநாயாக மாறிவிடுதல், நாய் தொலைந்து போதல் போன்றவையும் இந்தக் காப்பீட்டின் வரம்புக்குள் வந்துவிடுகிறது.

பிறகு என்ன, உங்களுக்கு எடுக்கும்போதே, உங்களுடைய செல்லத்துக்கும் சேர்த்து இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள்!



source https://www.vikatan.com/business/bajaj-allianz-introduced-new-pet-dog-insurance-policy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக