Ad

புதன், 16 செப்டம்பர், 2020

ரூ. 3.1 கோடியில் டெண்டரை தட்டிச் சென்ற டாடா..! - விரைவில் புதிய நாடாளுமன்ற கட்டடம்

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டும் டெண்டரை, 861.9 கோடி ரூபாயில் டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் எடுத்துள்ளது. தற்போதுள்ள கட்டடம் மிகப் பழமையானது. தற்போதைய நிலையிலேயே இட நெருக்கடியும் இருக்கிறது. விரைவில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை செய்யப்பட உள்ளதினால், மேலும் இட நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தற்போது அமைந்துள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகாமையிலேயே, புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதனை தொடர்ந்து புதிய வளாகம் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டது.

நாடாளுமன்றம்

ஏழு நிறுவனங்கள் டெண்டரில் கலந்துகொண்டது. இதில், ஷபூர்ஜி பல்லோன்ஜி & கம்பெனி, லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் தகுதி பெற்றன. இந்த மூன்று நிறுவனங்களும் தங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரி விண்ணப்பித்திருந்தது. லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் 865 கோடிக்கு விண்ணப்பித்திருந்தது. இந்த மதிப்பை விடச் சற்று குறைவாக 861.90 கோடி ரூபாய்க்கு டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் ஒப்பந்தம் கோரியிருந்ததால், கட்டடம் கட்டும் ஒப்பந்தம் டாடா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

Also Read: முன்பெல்லாம் நாடாளுமன்றம் எப்படியிருக்கும் தெரியுமா? - ஒரு குட்டி ஃபிளாஷ்பேக் #MyVikatan

புதியதாக அமைய உள்ள வளாகம், முக்கோண வடிவில் தரை தளம் மற்றும் இரண்டு மாடிகளுடன் அமையவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு அதிக இருக்கை வசதிகள் கொண்ட அரங்குகளும், ஒரே நேரத்தில் 1,000-க்கும் அதிகமான நபர்கள் அமர இடம் இருக்குமாறும் அமைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது. அதோடு, உறுப்பினர்களுக்கான தனி அலுவலகங்கள் அமையவுள்ளது. இந்த கட்டடப் பணி விரைவில் தொடங்க உள்ளது. 2022 ஆம் ஆண்டில், நாடு 75 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் போது, ​​புதிய கட்டடத்தில் அமர்வுகள் நடத்தப்படும் என்று மக்களவை சபாநாயகர் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.

அரசாங்க குடிமை அமைப்பு, புதிய நாடாளுமன்றம் கட்ட ரூ.940 கோடி செலவாகும் என்று மதிப்பிட்டிருந்தது.

தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடம் ஆங்கியேலர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் முடிவடைய ஆறு ஆண்டுகள் ஆனது. பின்னர், 1956-ம் ஆண்டு இடப் பற்றாக்குறை காரணமாக இரண்டு தளங்கள் கட்டப்பட்டது. புதிய வளாகம் கட்டிமுடித்ததும், தற்போதுள்ள வளாகம் புனரமைக்கப்பட்டு வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வளாகப் பணிகள் முடிவடையும் வரை தற்போதுள்ள கட்டடத்திலேயே பணிகள் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/politics/for-new-parliament-building-tata-projects-ltd-won-the-tender

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக