ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டு முதலீட்டுக்காகப் பரபரப்பாக ரிலையன்ஸ் பேசப்பட்டது. இப்படித் திரட்டிய நிதிக்கு ரிலையன்ஸ் நிறுவனம் எப்படி வரி கட்டாமல் சமாளித்தது என்பது இப்போது சமூக வலைதளங்களில் பலராலும் விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கிறது.
என்ன செய்தது ரிலையன்ஸ்?
கடந்த ஏப்ரல் முதல் இதுவரை சுமார் ரூ.1.5 லட்சம் கோடி வரை ரிலையன்ஸ் நிதி திரட்டி இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். திரட்டிய முதலீட்டுக்கு எப்படி வரி கட்டாமல் இருக்க முடியும் என்கிற கேள்வி பலருக்கும் எழுவது இயற்கையான விஷயமே.
இந்த விஷயத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் என்ன செய்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அந்த நிறுவனத்தின் வடிவமைப்பை முதலில் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
ரிலையன்ஸ் வேறு, ஜியோ வேறு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்பது ஒரு நிறுவனம். ஜியோ பிளாட்ஃபார்ம் என்பது வேறு நிறுவனம். ரிலையன்ஸ் நிதி திரட்டியதாகப் பலராலும் சொல்லப்பட்டாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருப்பது ஜியோ பிளாட்ஃபார்ம் நிறுவனத்தில்தான். இந்த நிறுவனத்தில்தான் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 33% அளவுக்கு பங்குகள் உள்ளன.
சுமார் ஓர் ஆண்டுக்கு முன்பு ஜியோ பிளாட்ஃபார்ம் என்னும் நிறுவனத்தை ரிலையன்ஸ் உருவாக்கியது. இந்த நிறுவனத்துக்கு பங்கு முதலீடு மூலம் ரூ.4,961 கோடி முதலீடு செய்யப்பட்டது. ஓபிசிஎஸ் மூலமாக (optionally convertible preference shares) ரூ.1.77 லட்சம் கோடி ஜியோ பிளாட்ஃபார்மில் முதலீடு செய்யப்பட்டது. இந்த மதிப்புக்கு பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இந்தப் பத்திரங்களை பிற்பாடு பங்குகளாக மாற்றிக்கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பு.
வெளிநாட்டிலிருந்து நிதி திரட்டினால்..?
ரிலையன்ஸ் நிறுவனம் நிதி திரட்டி இருக்கிறது என்னும் செய்திகள் வரத்தொடங்கியவுடன் இந்தப் பத்திரங்களை பங்குகளாக மாற்றி, அந்தப் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ரிலையன்ஸ் விற்று இருக்கும். அப்படி விற்ற பங்குகளுக்கு வரி செலுத்த வேண்டும் அல்லவா? இந்த இடத்தில்தான் ரிலையன்ஸ் நிறுவனம் சமயோசிதமாக யோசித்து செயல்பட்டது.
ஜியோ பிளாட்ஃபார்ம் புதிய பங்குகளை வெளியிட்டு அதன் மூலம் நிதி திரட்டி இருக்கிறது. அந்த நிதியைப் பயன்படுத்தி ஓ.பி.சி.எஸ் பாண்டுகள் வழியாக ரிலையன்ஸ் நிறுவனம் செய்துள்ள முதலீட்டைத் திரும்ப பெற்றுக்கொண்டது. செய்யப்பட்ட முதலீட்டைத் திரும்ப பெற்றுக்கொள்வதால் அந்தத் தொகைக்கு எந்த வரியும் செலுத்தத் தேவையில்லை.
அதேபோல, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தப் பங்குகளை விற்கும்பட்சத்தில் வரி செலுத்தத் தேவையில்லை என விதி இருக்கிறது. எனவேதான், ஜியோ பிளாட்பாரத்துக்குத் தேவையான முதலீடுகளை அந்நிறுவனம் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்தே பெற்றிருக்கிறது.
ஒருவேளை, உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தப் பங்குகளை விற்று இருந்தால், கிடைக்கும் லாபத்துக்கு (பங்குகளின் பிரீமியத்துக்கு) ரிலையன்ஸ் நிறுவனம் வரி செலுத்தியிருக்க வேண்டும்.
ஆக, சட்ட விதிகளை சரியாகப் புரிந்துகொண்டு பயன்படுத்தியதால் முதலீடு செய்த தொகையையும் ரிலையன்ஸ் திரும்பப் பெற்றுவிட்டது. அதேசமயம், ஜியோ பிளாட்ஃபார்ம் நிறுவனத்துக்கும் புதிய முதலீடு கிடைத்துவிட்டது. இதற்கு வரி எதையும் செலுத்தாமல் பல ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்திவிட்டது.
இது குறித்து ஒரு தொழில்முனைவோர் இப்படிச் சொன்னார். ``நன்கு திட்டமிட்டு செய்யப்பட்ட பரிவர்த்தனை இது. விதிமுறைகளை நன்றாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பங்குகள் பரிவர்த்தனை நடந்திருக்கிறது. இதில் எங்கேயும் விதிமீறல் இல்லை இருப்பதாகத் தெரியவில்லை. புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், 80சி பிரிவின்கீழ் ரூ.1.5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால், வரி விலக்கு பெற்றுக்கொள்ளலாம் என விதி இருக்கிறது.
அந்த விதியின் கீழ் முதலீடு செய்வது வரிவிலக்கு பெற்றுக்கொள்வது வரி ஏய்ப்பு ஆகாது. கிட்டத்தட்ட அதே போலவே ரிலையன்ஸ் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம் பரிவர்த்தனையும் நடந்திருக்கிறது’’ எனக் கூறினார்.
ரிலையன்ஸ் சொல்லும் பாடம்
வரி கட்டுவது தொடர்பாக அரசின் விதிமுறைகள் பல ஆயிரம் உள்ளன. தொழில்முனைவோர்கள் தொழிலை நன்றாகச் செய்ய வேண்டும் என்று காட்டும் ஈடுபாட்டை, சட்ட விதிகளைச் சரியாகப் படித்து, புரிந்துகொண்டு சாமர்த்தியமாக செயல்படுவதிலும் காட்டினால், நமக்குதான் லாபம் என்பதே இந்த நிகழ்வின் மூலம் ரிலையன்ஸ் சொல்லும் பாடம்!
source https://www.vikatan.com/business/finance/how-reliance-avoided-tax-for-the-new-foreign-investments-in-its-jio-platform
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக