சென்னை தாம்பரம் பகுதியில் பள்ளி, கல்லூரி மைதானங்களில் மாணவர்கள், இளைஞர்களுக்கு போதை மாத்திரைகள் விற்கப்படும் ரகசியத் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. அதன்பேரில் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் பல்லாவரம் உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது பல்லாவரம் தனியார் கல்லூரி அருகே மூன்று பேர் தனிப்படை போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது அவர்களின் பெயர் பவுல் என்கிற பாபி , ஜகருல்லா, உதயசீலன் எனத் தெரியவந்தது. இவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகள் எனக் கூறி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 600-க்கும் மேற்பட்ட வலி நிவாரண மாத்திரைகள், 100-க்கும் மேற்பட்ட ஊசி சிரிஞ்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மும்பையிலிருந்து இந்த மாத்திரைகளை வாங்கி விற்றது தெரியவந்தது.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட ஜகருல்லா, பல்லாவரம் காவல் நிலையம் அருகே பிரியாணிக் கடை நடத்திவருகிறார். இவரின் கடைக்கு வரும் மாணவர்கள், இளைஞர்களிடம் நட்பாகப் பழகி, அவர்களுக்கு வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரை எனக் கூறி விற்று வந்திருக்கிறார். இவருக்கு வலி நிவாரண மாத்திரைகளை யார் சப்ளை செய்தது என்று விசாரித்தோம். அப்போது மீனம்பாக்கத்தைச் சேர்ந்த பவுல், சேலையூரைச் சேர்ந்த உதயசீலன் எனத் தெரியவந்தது. இதில் உதயசீலன், மருந்துக் கடை நடத்திவருவதைப்போல போலி ஆவணங்களைத் தயார் செய்து மும்பையிலிருந்து வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கியிருப்பது தெரியவந்தது. 10 மாத்திரைகளை 310 ரூபாய்க்கு வாங்கும் உதயசீலன் அதை இரண்டு அல்லது மூன்று மடங்கு கூடுதலாக விலை நிர்ணயித்து விற்றுவந்திருக்கிறார். கடந்த மூன்றாண்டுகளாக வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரை என்று கூறி அவர் விற்றது தெரியவந்தது. தொடர்ந்து போதை மாத்திரை, வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை குறித்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.
தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் கூறுகையில் ``வலி நிவாரண மாத்திரை, தூக்க மாத்திரைகளை போதை மாத்திரைகளாகப் பல இளைஞர்கள் பயன்படுத்திவருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக பிள்ளைகளின் நண்பர்கள் குறித்தும் பெற்றோருக்குத் தெரிய வேண்டும். பிள்ளைகளிடம் மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாக அவர்களுக்கு மனரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு காவல்துறை எப்போதும் ஒத்துழைப்பாக இருக்கும். மேலும் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரை என்று கூறி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்கப்படுவார்கள்" என்றார்.
source https://www.vikatan.com/news/crime/tambaram-police-arrested-youths-in-drug-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக