Ad

சனி, 16 ஜூலை, 2022

யூரோ டூர் 44: போலந்து - வளர்ந்துவரும் பொருளாதாரம் சரி; எல்லையில் அகதிகளிடம் பாகுபாடு எதற்காக?

உலகின் பழைமையான உப்பு சுரங்கங்கள், உலகின் மிகப்பெரிய அரண்மனை, ஐரோப்பாவிலேயே மிகவும் மாறுபட்ட இயற்கை சூழலியல், ஐரோப்பாவின் பழைமையான உணவகம் எனப் பல உலகப் பிரசித்தி பெற்ற பெருமைகளை தன்னகத்தே கொண்டு, இரண்டாம் உலகப்போரில் கிட்டத்தட்ட முற்று முழுதாக தரைமட்டமாக அழிக்கப்பட்டு, தன் சாம்பலிலிருந்து மீண்டு வந்த ஐரோப்பாவின் ஃபீனிக்ஸ் பறவை போலந்து இவ்வார யூரோ டூரில்...

வளர்ந்துவரும் பொருளாதாரம்

ஏப்ரல் 16, 2003 அன்று ஏதென்ஸில் கையெழுத்திடப்பட்ட அணுகல் ஒப்பந்தத்தின் கீழ், மே 1, 2004 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள போலந்து சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாத ஒரு ஐரோப்பிய நாடு.

மேற்கில் ஜெர்மனி, தெற்கில் செக் குடியரசு, சிலோவாக்கியா (Slovakia), கிழக்கில் உக்ரைன், பெலாரஸ் ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்ட போலந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்ததன் மூலம் பெரியளவு நன்மைகளை அனுபவித்த முக்கியமான ஒரு கிழக்கு ஐரோப்பிய நாடு. ஐரோப்பாவின் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் சமீபத்தில் இணைந்து, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வரையறையின்படி, 0.880 மனித வளர்ச்சிக் குறியீட்டுடன் (Human Development Index) உயர் வளர்ச்சியடையும் பொருளாதாரங்களில் ஒன்றாக போலந்து கருதப்படுகிறது. 2004 - 2020 வரையில் பதிவுசெய்யப்பட்ட உலகளாவிய ஏற்றுமதியில் பொருள்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியில் போலந்தின் பங்கு முழு ஐரோப்பிய ஒன்றியத்திலும் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக மோட்டார் வாகனங்கள், உணவு, நுகர்வோர் பொருள்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதேபோல, சமீபத்திய ஆண்டுகளில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் முக்கியத்துவமும் வளர்ந்துள்ளதால் போலந்த்தின் தொழில்நுட்பத் துறை அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது.

Wawel Castle in Kraków, Poland

மேற்கு ஐரோப்பாவின் பல நாடுகள் தமது தொழிற்சாலைகளையும், BPO கால் சென்டர்களையும் போலந்தில் நிறுவியுள்ளன. வணிக நடவடிக்கைகளை பல்வகைப்படுத்தவும், விநியோகச் சங்கிலி செலவுகளைக் குறைக்கவும் பல சர்வதேச நிறுவனங்கள் ஆசியாவிலிருந்த தமது உற்பத்தி ஆலைகளை போலந்துக்கு இடமாற்றம் செய்யத் தொடங்கியுள்ளன. கோவிட் தொற்று பரவலின் பின் ஆசிய உற்பத்தி ஆலைகள் மற்றும் ஐரோப்பியச் சந்தைகளுக்கு இடையிலான விநியோகச் சங்கிலிகள் சமீபகாலமாகச் சீர்குலையும் நிலையில், குறைந்த விலையில் அதிக திறனுள்ள ஊழியர்கள் கிடைப்பதால், பல நிறுவனங்கள் போலந்தின் மீது அதிகளவில் கவனம் செலுத்துகின்றன. ஐரோப்பாவில் மைய இடம், வலுவான, வளரும் பொருளாதாரம், ஒரு உறுதியான தொழிலாளர் சந்தை மற்றும் மாநில உதவி உத்திகள் ஆகியவற்றின் கலவையானது போலந்தின் உற்பத்தித் துறையில் ஐரோப்பிய, ஆசிய மற்றும் அமெரிக்க முதலீட்டை ஈர்க்கிறது.

சமீபத்தைய சர்ச்சைகள்

வரலாற்றை எடுத்துப் பார்த்தால் ஐரோப்பாவில் அதிகளவு படையெடுக்கப்பட்ட நாடுகளில் போலந்துக்கு குறிப்பிட்ட இடம் உள்ளது. இதன் முக்கிய காரணம் அதன் புவியியல் அமைப்பு. போலந்து கிட்டத்தட்ட ஐரோப்பாவின் நடுவில் அமைந்துள்ளது, எனவே போலந்தை எந்தத் திசையிலிருந்தும் தாக்கலாம். அதே போல போலந்து அதன் எல்லைகளில் ஜெர்மனி மற்றும் ரஷ்யா என்னும் சக்திவாய்ந்த இரு அண்டை நாடுகளைக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் போது உலகையே உலுக்கிய ஹிட்லரின் ஆஷ்விட்ஸ் - பிர்கெனாவ் (Auschwitz - Birkenau) நாஜி மரண முகாம்கள் தெற்கு போலந்தில் அமைந்திருந்தன. இவ்வாறு தொன்று தொட்டு சர்வதேச செய்திகளில் அடிக்கடி இடம்பெறும் ஒரு பெயராக இருந்துவரும் போலந்து, இன்றுவரை பரபரப்புக்குப் பஞ்சமில்லாத ஐரோப்பிய நாடு.

Auschwitz

POLEXIT

கடந்த வருடம் பிரெக்ஸிட்டுக்கு அடுத்தபடியாக பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு விஷயம் போலெக்ஸிட். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு போலந்து வெளியேறப்போகிறது என்று எழுந்த பரபரப்பான விவாதம் தற்போது அடங்கிப்போயிருந்தாலும் உண்மையில் இதன் பின்னணி என்ன?

சென்ற வருடம் போலந்து உச்ச நீதிமன்ற நீதிபதியின் நியமனத்தோடு இந்த விஷயம் சூடு பிடித்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளை போலந்து உதாசீனப்படுத்தி விட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்தது.

இதன் பின்னணியில் பல அரசியல் உள்நோக்கங்களும், சதுரங்க ஆட்டங்களும் மறைந்திருந்தாலும் போலந்து பகிரங்கமாக வைத்த முதல் குற்றச்சாட்டு ஐரோப்பிய ஒன்றியம் தமது கொள்கைகளை எல்லாவிதத்திலும் தம்மீது திணிக்கின்றது என்பதே. கத்தோலிக்க நாடான போலந்து கருக்கலைப்பு, LGBT உறவு போன்ற பல விஷயங்களுக்கு எதிரான சட்டங்களை உறுதியாகக் கொண்டுள்ளது. அதுவே ஐரோப்பிய ஒன்றியம், இதுபோன்ற விஷயங்களில் மிகவும் திறந்த கொள்கையைக் கடைப்பிடிக்கிறது.

POLEXIT
“பணத்தை விடப் பாரம்பரியத்திற்கும், கொள்கைகளுக்கும் அதிகம் முக்கியத்துவம் அளிப்பவர்கள் நாங்கள்” என்று கூறும் போலந்து ஜனாதிபதி, "ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருப்பதால் அவர்கள் சொல்வதற்கு எல்லாம் நாங்கள் தலையாட்ட முடியாது" என்று சென்ற வருடம் அறிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பெருமளவில் நன்மைகளை அனுபவிக்கும் நாடுகளில் போலந்து முன்னிலையில் இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பிறகு போலந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெருமளவில் அதிகரித்தது. அதே போல வேலையின்மை விகிதமும் குறைந்துள்ளது. மேற்கு ஐரோப்பா நோக்கித் திரள் திரளாகப் படையெடுக்கும் போலந்து நாட்டவர் அதன்பின் தமது நாட்டுக்குப் போகவே விரும்புவது இல்லை. எனவே 'Polexit' என்பது அரசியல் தலைவர்களால் மட்டுமே ஆதரிக்கப்படும் ஒரு விஷயமாக உள்ளது. ஐக்கிய ராஜ்ஜியம் ஐரோப்பாவிலிருந்து வெளியேறப்போவதாகச் சொன்ன போது, அதன் மக்கள் தொகையில் 51% பேர் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் போலெக்ஸிட் பற்றிப் பேச்சு வந்த போதே சுமார் 75% போலந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் போலந்துக்கு ஏற்படும் இழப்பு கணக்கில் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கும் என்பதுதான் உண்மை. இதனை போலிஷ் மக்களும் நன்கு அறிந்திருப்பதால் போலெக்ஸிட் என்பது நடைமுறையில் நடக்கச் சாத்தியமே இல்லை.

அகதிகளுக்கு எதிரான போலந்தின் பாரபட்சம்!

மனித உரிமைகள் பற்றி பக்கம் பக்கமாக அறிக்கை விடும் ஐரோப்பிய நாடுகள் எல்லாமே அதை நடைமுறையில் பின்பற்றுகின்றனவா என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் அகதிகள் விவகாரத்தில் போலந்து நடந்துகொண்ட முறை.
போலந்து

பெலாரஸ் எல்லையில் போலந்து அமைத்த மிகப்பெரிய எல்லை வேலி சமீபத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. புகலிடக் கோரிக்கையாளர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில், பெலாரஸ் நாட்டின் எல்லையில் போலந்து 186 கிமீ (115 மைல்கள்) அளவு நீளமான எல்லைச் சுவரைக் கட்டத் தொடங்கியது.

பெலாரஸின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ (Alexander Lukashenko), மத்திய கிழக்கிலிருந்து சிரிய அகதிகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய மின்ஸ்க் நகரை ஒரு பாதுகாப்பான வாயிலாகப் பயன்படுத்தலாம் எனக்கூறி ஐரோப்பாவில் ஒரு புதிய அகதிகள் நெருக்கடியைத் தூண்டிவிட்டதாகவும், பிரஸ்ஸல்ஸ், பெலாரஸ் மீது விதித்த பொருளாதாரத் தடைகளுக்குப் பழிவாங்கும் வகையில் இதைச் செய்வதாகவும் போலந்து குற்றம் சாட்டியது.

சிரியா, ஈராக், குர்திஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள், பெலாரஸ் வழியாக போலந்து எல்லையைக் கடக்க முயன்றபோது போலந்தின் எல்லைக் காவலர்களால் பிடிக்கப்பட்டு, வன்முறை பிரயோகிக்கப்பட்டு மீண்டும் பெலாரஸுக்குள் தள்ளப்பட்டனர். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இரு நாடுகளுக்கு இடையிலுள்ள காட்டில் ஒரு கடுமையான குளிர்காலத்தில் சிக்கிக்கொண்டன. போலந்துக்கும் பெலாரஸுக்கும் இடையிலான இந்த எல்லைப் போரின் தொடக்கத்தில் குறைந்தது 20 பேர் கடும் உறைபனியில் இறந்தனர்.

போலந்து

நவம்பரில் பெலாரஸிய அதிகாரிகள் ஆயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்களை போலந்து எல்லைக்கு அழைத்துச் சென்றபோது பதற்றநிலை உச்சத்தை எட்டியது. 50 பேர் வரையிலான பெலாரஸியத் துருப்புகள் கத்தரிகளால் கம்பிகளை வெட்டி, டஜன் கணக்கில் அகதிகள் போலந்துக்குள் செல்ல உதவி செய்தனர். இதனைத் தொடர்ந்து "போலந்து - பெலாரஸ் எல்லையில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடங்கியுள்ளது" என்று போலந்து எல்லைக் காவல் அறிக்கை ஒன்றை விடுத்தது.

சுமார் 353 மில்லியன் யூரோ செலவில், மோஷன் டிடெக்டர்கள் மற்றும் தெர்மல் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் இந்தச் சுவர், ஜூன் 30, 2022 அன்று முற்றாகக் கட்டி முடிக்கப்பட்டது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் மோதல்கள் மற்றும் வறுமையிலிருந்து வெளியேறும் மக்களைத் தடுக்க இத்தனை காட்டமான நடவடிக்கையை மேற்கொண்ட போலந்து, மில்லியன் கணக்கான உக்ரேனியர்களுக்கு மட்டும் தனது வாயில்களைத் திறந்து, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது அப்பட்டமான இனவெறிப் பாகுபாடு.

பெலாரஸ் எல்லையில் கறுப்பின மற்றும் முஸ்லிம் அகதிகளை ஆதரிப்பவர்களுக்கு எட்டு வருடச் சிறைத்தண்டனை விதித்து வில்லனாக்கிய அதே போலந்துதான் தனது எல்லையில் வெள்ளை இன உக்ரைன் அகதிகளுக்கு ஆதரவு கொடுத்து தன்னை ஹீரோவாகக் காட்டிக்கொள்கிறது.

போலந்து
இரண்டாம் உலகப்போரில் போலந்தை ஜெர்மனி தூள் தூளாக அடித்து நொறுக்கிய போது, எந்தவொரு ஐரோப்பிய நாடும் போலந்து அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை. மாறாக ஆப்பிரிக்காவும், அரபு நாடுகளும்தான் ஆதரவுக்கரம் நீட்டின. அதே மக்களுக்கு இன்று போலந்து தனது கதவுகளை இறுக்க மூடி, உதைத்துத் தள்ளுகிறது. இதன் பின் இருக்கும் அரசியலும், இனவெறியும், பாகுபாடும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அப்பட்டமாகத் தெரிகிறது. இருந்தும் கள்ள மௌனம் சாதித்துக் கடந்து போகிறது.

யூரோ டூர் போலாமா?



source https://www.vikatan.com/social-affairs/international/euro-tour-an-overview-of-poland-and-its-political-mistakes-so-far

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக