Ad

திங்கள், 25 ஜூலை, 2022

`அரசு இல்லத்துக்கும் பணம் கட்டி விடுகிறேன்; என் வருமானம் என்ன தெரியுமா?’ - ஊழல் குறித்து பேசிய மம்தா

மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சராக இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி, இதற்கு முன்பு கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது பள்ளி சேவை ஆணையத்தால் (WBSSC) அரசு நடத்தும் உதவி பெறும் பள்ளிகளில் சட்டவிரோத நியமனங்கள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக, பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது. அப்போது 21 கோடி ரூபாய் ரொக்கமாக மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கடந்த 23-ம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

பார்த்தா சாட்டர்ஜி

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "நான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டுள்ளேன். அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி அப்படி ஒரு செயலைச் செய்ய முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் உண்மை சரியான நேரத்தில் வெளிவர வேண்டும். நான் ஊழலை ஆதரிக்கவில்லை என்றாலும், எல்லா மக்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

யாராவது தவறு செய்திருந்தால் அதனை திருத்திக் கொள்ள அவருக்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால் எல்லோரும் புனிதர்கள் என்று என்னால் கூற முடியாது, ஆனால் நான் வேண்டுமென்றே எந்தத் தவறுகளிலும் இதுவரை ஈடுபட்டதில்லை. நான் என் வாழ்நாள் முழுவதும் அரசியலில் இருந்துவருகிறேன்.

மம்தா பானர்ஜி

என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது மக்கள் சேவை. இதை நான் எனது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். எனக்கு இதற்கு முன்பு முன்னாள் எம்.பி.யாக ரூ.1 லட்சம் ஓய்வூதியம் கிடைக்கிறது, முதல்வராக இருப்பதால் இன்னும் ரூ.2 லட்சம் சம்பளம் வாங்க முடியும், ஆனால் நான் எதையும் வாங்கவில்லை. நான் முதல்வருக்கான சர்க்யூட் ஹவுஸில் தங்கியிருந்தாலும், அதற்கு நான் பணம் செலுத்துகிறேன்.

அரசிடமிருந்து பணம் வரவில்லை என்றால் என்னுடைய வருமானம் என்ன தெரியுமா? நான் புத்தகங்களை எழுதுகிறேன், அதிலிருந்து எனக்கு உரிமத்தொகை கிடைக்கிறது. அதிலிருந்து தான் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/i-am-personally-hurt-mamata-banerjee-on-ministers-arrest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக