Ad

புதன், 20 ஜூலை, 2022

கொள்ளிடம் ஆற்றில் சிக்கியவர்களை மீட்டுவந்த நாட்டுப்படகு கவிழ்ந்தது - அவர்கள் மீட்கப்பட்டது எப்படி?

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் அதிகமாக வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து சுமார் 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையோரமுள்ள நாதல்படுகை கிராமம் அருகே ஆற்றின் நடுப்பகுதியில் திட்டு போன்ற பகுதி உள்ளது.

கொள்ளிடம்

இதில் நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்த கணேசன்(60), அவரின் மனைவி காந்திமதி (55), மகன் ராசுகுட்டி (33) ஆகியோர் தங்கி ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கணேசன் ஆற்றில் தண்ணீர் வருவதற்கு முன்பாகவே  நாதல்படுகை கிராமத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார். ஆனால் கணேசன் மனைவி காந்திமதி, மகன் ராசுகுட்டி ஆகியோர் மட்டும் திட்டுப் பகுதியில் ஆடுகளை பாதுகாத்துக் கொண்டு தங்கிவிட்டனர்.

ஆற்றில் தண்ணீர் பெருக்கு அதிகம் வராது என்று தவறாக நினைத்திருந்தனர். ஆனால் தண்ணீர் அதிகமாகிக் கொண்டிருந்ததால் அவர்களை மீட்கும் முயற்சியில்  ஆற்றின் தென்கரையில் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், சீர்காழி தீயணைப்பு அலுவலர் ஜோதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கொள்ளிடம் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்றின் வடகரையிலுள்ள கடலூர் மாவட்டம் கீழகுண்டலபாடி கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள்  நாட்டுப் படகின் உதவியால் சிக்கித்  தவித்தவர்களை மீட்க ஏற்பாடு செய்து, செல்வராஜ் என்பவரை  நாட்டுப் படகில் அனுப்பி வைத்தனர். செல்வராஜ்  துடுப்பின் மூலம் படகை இயக்கி ஆற்றின் நடுவில் அமைந்துள்ள திட்டுப்  பகுதிக்கு வந்து காந்திமதி, ராசுகுட்டி ஆகிய இருவரையும் படகில் ஏற்றிக்கொண்டு கீழ குண்டலபாடிக்கு புறப்பட்டார். அப்போது திடீரென ஆற்று  வெள்ளத்தின் சுழலில்  படகு சிக்கித்  தலைகீழாக கவிழ்ந்து, படகு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது

கொள்ளிடம்

படகோட்டி செல்வராஜ், ராசுகுட்டி ஆகியோர்  நீந்தி கரை சேர்ந்துவிட்டனர். ஆனால் காந்திமதி மட்டும் திட்டுப் பகுதிக்கு  அருகேயுள்ள  உள்ள ஒரு முள் மரத்தின் கிளையில் சிக்கிக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தார். இதனையறிந்து கீழகுண்டலபாடி கிராமத்திலிருந்து விரைந்து வந்த ஒரு விசைப்படகின் உதவியால் காந்திமதி உயிருடன் மீட்கப்பட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் வந்த படகு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/accident/the-boat-that-was-rescuing-people-trapped-in-the-river

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக