Ad

வெள்ளி, 1 ஜூலை, 2022

``தேவேந்திர பட்னாவிஸ் மகிழ்ச்சியுடன் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை.” - சரத் பவார்

மகாராஷ்டிராவில் நேற்று புதிய அரசு பதவியேற்றது. இதில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பதவியேற்ற நிலையில், தான் அமைச்சரவையில் இடம் பெற மாட்டேன் என்று சொன்ன தேவேந்திர பட்னாவிஸ் பின்னர் மனதை மாற்றிக்கொண்டு அமைச்சரவையில் இடம்பெறுவதாக அறிவித்தார். அதோடு துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டார். பாஜக தலைவர்கள் ஜே.பி.நட்டா, அமித் ஷாவின் நிர்பந்தம் காரணமாகவே தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ``துணை முதல்வர் பதவியை ஏற்கும்போது தேவேந்திர பட்னாவிஸ் மகிழ்ச்சியுடன் இல்லை. அவர் அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. அது அவரின் முகபாவனையிலிருந்தே தெரிந்தது. பட்னாவிஸ் நாக்பூரிலிருந்து வந்தவர்.

சரத் பவார்

அதோடு ஸ்வயம் சேவக்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, அங்கிருந்து உத்தரவு வந்தால் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்... சிவசேனா அதிருப்தி கோஷ்டி தங்களது தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பாஜக மேலிடம் உத்தரவிட்டதால் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஷிண்டேவுக்கே தெரியாது என்று நினைக்கிறேன். ஐந்து ஆண்டுகள் முதல்வராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டதுதான் இரண்டாவது பெரிய ஆச்சர்யம். அவர் துணை முதல்வர் பதவியை ஏற்பார் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் கட்சி மேலிடம் உத்தரவிட்டதால் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

ஆனால் இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்திருக்கின்றன. சிவசேனாவிலிருந்து விலகியதை நியாயப்படுத்துவதற்காகவே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான் சிவசேனாவிலிருந்து விலகியதாக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கூறுகின்றனர். சிவசேனாவிலிருந்து விலகுவது தொடர்பாக நீண்ட நாள்களாகத் திட்டமிட்டு இந்தக் காரியத்தைச் செய்திருக்கின்றனர் என்று நினைக்கிறேன். வரும் தேர்தலில் மகாவிகாஷ் அகாடி கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

மத்திய அரசு ஏஜென்சிகளை பாஜக அரசு தவறுதலாகப் பயன்படுத்துகிறது. வருமான வரித்துறையிடமிருந்தும் எனக்குக் கடிதம் வந்தது. 2004, 2009, 2014-ம் ஆண்டு தேர்தலில் நான் தாக்கல் செய்த ஆவணங்கள் குறித்துக் கேட்டு வருமான வரித்துறை எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது” என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/politics/devendra-fadnavis-not-happy-to-accept-deputy-cm-post-sharad-pawar-says

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக