Ad

செவ்வாய், 19 ஜூலை, 2022

``தர்மபுரி எம்.பி செந்தில் குமார் செய்தது தேவையற்ற சர்ச்சை" - கார்த்தி சிதம்பரம்

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதுமுள்ள எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தனர். நேற்று எம்.பி கார்த்தி சிதம்பரம் சென்னை தலைமைச் செயலகத்தில் வாக்களித்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, "பா.ஜ.க சிதைக்கும் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டுமானால் சட்டம் தெரிந்த யஷ்வந்த் சின்ஹா வெற்றிபெற வேண்டும். மாணவிகளுக்கு எதிரான செயல்பாடுகள் காலங்காலமாக நடக்கின்றன. ஆனால், முன்பு வெளியே யாருக்கும் தெரியாது, இப்போது மாணவிகள் துணிச்சலாக வெளிப்படுத்திவிடுகிறார்கள். அனைத்துப் பள்ளிகளிலும் இது போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க ஆசிரியர் அல்லாத உளவியல் ஆலோசகர் தேவை. தேர்வு அழுத்தம் மட்டுமல்லாமல் சமூகரீதியான அழுத்தங்களும் மாணவர்களுக்கு இன்று உருவாக்கப்பட்டுள்ளது. நமது சமூகத்தில் கூட்டுக் குடும்ப முறை இருப்பதால் மன அழுத்தம் பலருக்கும் இருக்கிறது.

பாஜக

20 முறை சம்மன் அனுப்பி அமலாக்கத்துறையில் என்னை அத்துறையில் நிபுணர் ஆக்கிவிட்டார்கள். அடுத்த முறை அமலாக்கத்துறை விசாரணை நடந்தால் அதை நேரலை செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறேன். அமலாக்கத்துறை விசாரணை முழுக்க முழுக்க அரசியல், மன உளைச்சல், நேர விரயத்துக்காகத்தான் நடத்தப்படுகிறது. இதே காரணத்துக்காகத்தான் ராகுல் காந்திக்கு ஐந்து முறை சம்மன் அனுப்பியுள்ளனர்.

நாஜிகள்போலச் செயல்படும் அமலாக்கத்துறையினர், சோனியா காந்திக்கும் அதே காரணங்களுக்காகவே சம்மன் அனுப்பத் திட்டமிட்டிருக்க்கிறார்கள். தேசிய சின்னமான சிங்கம்கூட இப்போது மாற்றப்படுகிறது. ஒரே கட்சி ஆட்சி முறையைக் கொண்டுவர பா.ஜ.க முயல்கிறது. இதைத் தடுக்க தமிழ்நாடுபோல அனைத்து மாநிலங்களும் புரிந்து தெளிவு பெற வேண்டும்.” என்றார்.

ஸ்டாலின்

தொடர்ந்து, அரசுத் திட்டம் தொடக்கவிழாவில் நடைபெற்ற பூஜை தொடர்பாக தருமபுரி எம்.பி செந்தில் குமார் கேள்வி எழுப்பியது தொடர்பாக பேசிய கார்த்தி, ``தருமபுரி எம்.பி செந்தில் குமார் செய்தது தேவையற்ற சர்ச்சை. தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாக இருந்தாலும், வேட்புமனு தாக்கல் செய்ய, பதவி ஏற்க நல்ல நேரம் பார்ப்பார்கள். அதுதான் நமது பழக்கம். திராவிட மாடல் என்பது பொருளாதார மாடலா அல்லது சமூக மாடலா.. சமூக மாடல் என்பதுதான் எனக்குத் தெரியும். பொருளாதார மாடலா என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி வெற்றிபெறாவிட்டாலும், அதன் சித்தாந்தம் கெடவில்லை. இந்தியாவின் 20 சதவிகித வாக்கு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. இன்னும் தனது குரலை வேறுபடுத்தி, தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி மக்களைச் சந்திக்க வேண்டும். சமூக வலைதளங்களில் பதிவிடுவது மட்டும் கட்சி வளர்ச்சிக்கு போதுமானதல்ல" எனத் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/karthi-chidambaram-attacks-dmk-mp-after-casting-vote-in-president-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக