Ad

வெள்ளி, 22 ஜூலை, 2022

அரிசிக்கு வரி: தமிழக அரசு ஏன் எதிர்க்கவில்லை?

ஜி.எஸ்.டி வரி என்பது என்றைக்கு அறிமுகமானதோ அன்றிலிருந்தே சர்ச்சைக்குப் பஞ்சமே இல்லை. விலை உயர்ந்த பல்வேறு பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், இப்போது அரிசி, கோதுமை, தயிர் என அத்தியாவசியமான உணவுப் பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பது ஏழை எளிய, நடுத்தர மக்களை கொதிப்படையச் செய்திருக்கிறது.

‘25 கிலோவுக்குக் குறைவான அளவுகளில் பாக்கெட்டில் அடைத்து விற்கப் படும் அரிசி, கோதுமை, தயிர், வெண்ணெய்க்கு 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும்’ என்கிற அறிவிப்பு வந்தவுடனே அரிசி விலை ஒரு மூட்டைக்கு ரூ.150 வரை உயர்ந்திருக்கிறது. ஆவின் நிறுவனத்தின் அனைத்துப் பொருள்களின் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இனி தனியார் நிறுவனங்கள் எந்த அளவுக்கு உயர்த்துமோ என்கிற கவலை மக்களை வாட்டி வதைக்கிறது.

ஒரு பக்கம், உணவுப் பொருள்களை பாக்கெட்டில் அடைத்துதான் விற்க வேண்டும் என்கிற விதிமுறையை உருவாக்கிவிட்டு, இப்போது பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பது சரியா? அரசாங்கம் சொல்கிறபடி நடந்துகொண்டால், வரி விதிப்பு என்கிற தண்டனைக்கு ஆளாக வேண்டுமா?

இது ஒருபக்கம் இருக்க, பாக்கெட்டில் அடைக்கப்படாத, பிராண்ட் பெயர் இல்லாமல் விற்கப்படும் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி இல்லை என்று சொல்லி இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்படியானால், உணவுப் பொருள்களை பாக்கெட்டில் அடைக்காமல் விற்கலாம் என்கிறாரா?

இந்த பிரச்னையில் பெரும் விநோதம் என்னவெனில், தமிழக அரசாங்கம் இதற்கு எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பதுதான். ஆனால், நமது பக்கத்து மாநிலமான கேரளா, ‘‘சிறு வணிகர்கள் மீதான இந்த ஜி.எஸ்.டி வரியை நாங்கள் நடைமுறைப்படுத்த மாட்டோம்’’ என்று துணிந்து அறிவித்திருக்கிறது. ஜி.எஸ்.டி விஷயத்தில் எலியும் பூனையுமாக இருக்கும் மத்திய அரசும், தமிழக அரசும், இந்த விஷயத்தில் மட்டும் ஒரே கருத்துடன் இருப்பது எப்படி? ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் இந்தப் புதிய வரியில் தவறு எதுவும் இல்லை என்று தமிழக அரசு கருதுகிறதா?

சிறு வணிகர்களை வரிவரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு நினைத்தால், அதற்கு என்ன வழி என்று யோசித்திருக்கலாம். உதாரணமாக, இந்த அளவுக்குத் தான் ரொக்கமாக வியாபாரம் செய்ய வேண்டும்; அதற்கு மேற்பட்ட தொகையை ஆன்லைன் மூலமாகவே செய்ய வேண்டும் என புதிய நடைமுறையைக் கொண்டு வரலாம். அப்படி செய்வதை விட்டுவிட்டு, ஏற்கெனவே விலைவாசி உயர்வால் கஷ்டப்படும் மக்களை மேலும் கஷ்டத்துக்கு உள்ளாக்குகிற மாதிரி அத்தியாவசியப் பொருள்களின் மீது வரி விதிப்பது சரியல்ல.

மத்திய அரசாங்கம் தனது வரி வருமானம் குறித்த அக்கறையுடன் மட்டும் செயல்பட்டால், அடுத்த தேர்தலில் மக்களும் தங்கள் நலனைக் காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கை எடுக்கவே செய்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை..!

- ஆசிரியர்



source https://www.vikatan.com/business/finance/gst-and-price-hike-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக