Ad

வியாழன், 21 ஜூலை, 2022

துணை ஜனாதிபதி தேர்தல்: `யாருக்கும் ஆதரவு இல்லை’... விலகிய திரிணாமுல் காங்கிரஸ் - காரணம் என்ன?

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பாக பொது வேட்பாளரை நிறுத்தலாம் என, பல மாநில எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த திரிணாமுல் காங்கிரஸ், திடீரென குடியரசு துணை தலைவர் பதவிக்கான தேர்தலில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர் யாரையும் ஆதரிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில், ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகப் பணியாற்றிய பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்மு-வை வேட்பாளராக அறிவித்து கவனம் ஈர்த்த பாஜக, துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலிலும் அத்தகைய செயலையே செய்தது.

ஜெக்தீப் தன்கர் - மோடி

அதாவது, மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநர் ஜெக்தீப் தன்கர்-ஐ தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பாஜக அறிவித்தது. பாஜக அறிவித்த நாளே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் சரத் பவார் அறிவித்தார். இந்தநிலையில் திரிணாமுல் காங்கிரஸ், இந்த தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர் இருவரையுமே ஆதரிக்கப்போவதில்லை என நேற்று அறிவித்துள்ளது.

இதனைத் தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, ``கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது போலவே வரும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் விலகி இருக்கும். இந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஜெக்தீப் தன்கரையும் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்காது, எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவையும் ஆதரிக்காது" எனக் கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி

மேலும், ``35 எம்.பி.க்களைக் கொண்ட திரிணாமுல் காங்கிரஸைக் கலந்தாலோசிக்காமல் எதிர்க்கட்சிகளால் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். நாங்கள் சில பெயர்களை முன்மொழிந்தோம், அவை ஆலோசனையில் இருந்தன. ஆனால் எங்கள் ஆலோசனையின்றி பெயர் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், எதிர்க்கட்சி ஒற்றுமை என்பது குடியரசுத் தலைவர் அல்லது துணை குடியரசுத் தலைவர் தேர்தலின் அளவுகோலைப் பொறுத்தது அல்ல. மார்கரெட் ஆல்வாவுக்கு, மம்தா பானர்ஜியுடன் நல்ல உறவு உள்ளது. ஆனால், தனிப்பட்ட உறவு அரசியலில் ஒரி விஷயமல்ல" எனவும் அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/west-bengals-ruling-party-tmc-step-back-from-vice-president-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக